Flash News
கட்டுரை
2017ல் உள்நாட்டு அரசியற் களம் எப்படி அமையப்போகின்றது?
[ Monday, 2 January 2017 ,11:03:55 ]

இன்று பிறக்கின்ற புதுவருடமானது அண்மைக்கால வரலாற்றில் பிறந்த புதுவருடங்களை விடவும் வித்தியாசமானதாக இருக்கப்போகின்றது என்பதை திடமாகச் சொல்லிவிடமுடியும். இதற்கு சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் அரங்கேறிவருகின்ற நிகழ்வுகள் கட்டியம் கூறிநிற்கின்றன.  

-நிதர்சனன்-

 

இலங்கையைப்பொறுத்தவரையில் 2017ல் அரசியல் மாற்றம் நடக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதை கடந்த வியாழக்கிழமையன்று  கொழும்பில்  வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. 

 

பழுத்த அரசியல்வாதியான ராஜபக்ஸவின் கருத்தை தற்போதைய நிலையில் வெறுமனே வெற்றுவேட்டுக்கள் என தட்டிக்கழித்துவிடமுடியாது. 

 

பிரபாகரனை தோற்கடிப்பதில் கொண்டிருந்த உறுதிப்பாடான நம்பிக்கையைப் போன்று  தற்போதைய ஆட்சியை இவ்வாண்டில் கவிழ்த்துவிடமுடியும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக ராஜபக்ஸ உறுதிபடக்கூறியிருக்கின்றார். 

 

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19வது திருத்தத்தின் பிரகாரம் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாதென்ற நிலையிலும் 2019ம் ஆண்டுவரையில் பொதுத் தேர்தல் நடத்த முடியாத என்ற நிலையிலும் ஜனாதிபதி சிறிசேனவிற்கு கீழ் பிரதமராக வருவதன் மூலமே ராஜபக்ஸவின் ஆட்சிக் கவிழ்ப்பு கனவு தற்போதைய நிலையில் நடந்தேறமுடியும்.  

 

ஐக்கிய தேசியக் கட்சியின் துணையுடன் ஜனாதிபதியாகி விட்டு தற்போது சுதந்திரக் கட்சியை பலப்படுத்துகின்ற கைங்கரியத்தில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற ஜனாதிபதி சிறிசேன மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என யாரேனும் எண்ணியிருந்தால் ஏமாற்றத்திற்குள்ளாவதற்கு தயாராக வேண்டும் என்பதையே நகர்வுகள் கோடிட்டுக்காட்டிநிற்கின்றன.

 

தனது தலைவனுக்கே ( மஹிந்த) 2014ல் காலைவாரிவிட்ட மைத்திரிக்கு இதே விடயத்தை வேறுஎவருக்கும் செய்வது பெரிய விடயம் கிடையாது என இலங்கையில் உள்ள மூத்த இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். இவ்வாண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதில் திடசங்கற்பம் பூண்டிருக்கின்ற மஹிந்தவின் பார்வையில் "தற்போது அவர்கள் (ஐதேகவும் சுதந்திரகட்சியும்) தங்களுக்குள்ளேயே முட்டிமோதிக்கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்தும் முன்செல்லமுடியாது. இது நாட்டிற்கு தீங்காகும்"'எனக் கூறியிருந்த மஹிந்த தம்மால் ஜனாதிபதி சிறிசேனவுடன் பணியாற்ற முடியும் என்பதற்கும் காரணம் கூறியிருந்தார். 'தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் பணியாற்றுகின்றார். அவர் (சிறிசேன) என்னுடன் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.' என 1970ம் ஆண்டுமுதலாக பல தசாப்தங்களாக தாம் சிறிசேனவை அறிந்துள்ளமையை மஹிந்த நினைவுபடுத்தியிருந்தார். 

 

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம்திகதி நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் அளித்த உறுதிமொழிகளும் மக்கள்மத்தியில் கட்டியெழுப்பிய நம்பிக்கைகளும் நாளாந்தம் பறக்கவிடப்பட்டும்; சிதைக்கப்பட்டுவரும் வருகின்றது.

 

2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்தவிற்கு சுதந்திரக்கட்சியில் வேட்புமனுவை வழங்கியதன் மூலமே பெரும் ஏமாற்றத்தை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காக மஹிந்தவை கட்சிக்குள் அரவணைத்துக்கொண்டால் அதில் பெரிதாக என்ன ஆச்சரியம் இருக்கப்போகின்றது.

 

ராஜபக்ஷ தரப்பினர் இலங்கையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இவ்வாண்டில் கையாளப்போகும் வழிமுறைகள் அமைதியானதாக நிச்சயம் அமைந்துவிடாது. மாறாக அரசாங்கத்தினால் இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல்யாப்பு  முதற்கொண்டு ஹம்பாந்தோட்டையில் வர்த்தமையத்திற்காக சீன  நிறுவனத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள ஒப்பந்தம் ,எட்கா ஒப்பந்தம், நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலிணியின் அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ,போர்க்குற்றவிசாரணை தொடர்பான விசேட நீதிமன்றம்  என அனைத்து விடயங்களையும் கடுமையாக எதிர்க்கும். இதற்காக நாடெங்கிலும் ஆர்;ப்பாட்டங்கள் முடுக்கிவிடப்படும்.  

 

ஆட்சிக்கு வருவதற்காக எவற்றைச் செய்வதற்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தயங்காது என்பதற்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டமுடியும். சீனாவிடம் இருந்து கடன்கடனாக வாங்கி துறைமுகம் விமான நிலையம் உட்பட உட்கட்டுமானங்களை நிர்மாணித்த மஹிந்த ராஜபக்ஸ இன்றோ சீனாவிற்கு எதிராக போர்க்கொடி தூங்கியுள்ளமை அவரது அரசியல் வங்குரோத்து தன்மையை காண்பித்துநிற்கின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் கப்பல்களை பணயமாக பிடித்துவைத்துக்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மக்களைத் திரட்டி ஹம்பாந்தோட்டையிலுள்ள பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமை என்பவற்றின் பின்னணியில் ராஜபக்ஸ தரப்பினரின் வகிபாகம் இருந்தமை வெளிப்படையானது.

 

ஹம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்களுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக அண்மையில் சீனாவிற்கு சென்ற போது சீன அதிகாரிகளிடேமே நேரில் தெரிவித்துவிட்டதாக அண்மைய ஊடக சந்திப்பில் மஹிந்த சுட்டிக்காட்டியிருந்தார். மக்களின் விவசாயக் காணிகளை வெளிநாடுகளுக்கோ வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ விற்கப்படுவதை அனுமதிக்க முடியாதென்று அவர் கூறியிருந்தார்.

 

இதே மஹிந்த தான் தமிழ் மக்களுடைய விவசாயக் காணிகளைக் கொண்ட சம்பூர் பகுதியை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை அவரது இரட்டை வேடத்தைப் புலப்படுத்திநிற்கின்றது.  

 

அண்மையில் விசேட ஏற்பாடுகள் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது மஹிந்த தரப்பு அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்திருந்தது. மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தப்போவதாக பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரத்துடிக்கும் ஊடகங்களும் இதுவிடயத்தில் பெரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தன.

 

திவி நகும சட்டமூலத்தினுடாக பஸில் ராஜபக்ஸ மாகாண சபைகளுக்குள் அதிகாரங்களைக் கையப்படுத்திய போது கரங்களை உயர்த்திப் பிடித்து ஆமோதித்த தரப்பு இன்று மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக கூறுவது எப்படியேனும் ஆட்சிக்கு வருவதற்காக எதிர்ப்புக்களை பதிவுசெய்யவேண்டும் என்பதாகவன்றி மக்கள் மேல் கொண்ட அன்பினால் அன்று.

 

இதே மஹிந்த அண்மைய வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தயிருந்தார்.

பிரதான அரசியல் நீரோட்டத்திற்கு தமிழ் பேசும் தரப்பினரைக் கொண்டுவருவதே தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆக மொத்தத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பரிந்துரைக்கும் என நம்பிக்கையளிக்கப்படும் புதிய அரசியல்யாப்பு தொடர்பில் மஹிந்தவின் ஆதரவைக் கோர விளையும் தரப்பிற்கு ஏமாற்றமே மிஞ்சப் போகின்றது என்பது புலனாகின்றது. 

 

ஜெனிவா தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுவருகின்ற எதிர்பார்ப்புக்கள் கூட இவ்வாண்டில் புஸ்வாணமாகிவிடக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.

 

அமெரிக்காவில் இம்மாதம் 20ம் திகதி பதவியேற்கவுள்ள புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தனது பதவியேற்பின் பின்னர் ஐநாவில் அமெரிக்காவின் நகர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என டுவிட்டர் தளத்தி;ல் அறிவித்திருக்கின்றார்.

 

இஸ்ரேலுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதற்கு ஒபாமா நிர்வாகம் தவறிய நிலையில் ட்ரம்ப் இப்படியொரு கருத்தைப் பதிவுசெய்திருந்தாலும் கூட இலங்கைவிடயத்தில் எப்படி ட்ரம்பின் நிர்வாகம் செயற்படும் என்பது கேள்விக்குறியாக இருந்துவருகின்றது.

 

இவ்வாண்டு பெப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள 34 ஆவது ஜெனிவா அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவார். அந்த அறிக்கைக்கு பின்னர் இலங்கையை தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பில் வைத்துக்கொள்வதற்கு இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.

 

ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் அதனைச் செய்யுமா ? தற்போதைய நிலையில் அப்படி இன்னமொரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டாலும் கூட தற்போதைய தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதனூடாக இலங்கையை மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்துக்கொள்ளும் வாய்ப்புக்களே காணப்படுகின்றன.

 

இலங்கையில் போரின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு முன்னேற்றங்களும் சர்வதேசத்தின் அழுத்தத்தினாலேயே இடம்பெற்றது. அந்தவகையில் இலங்கையை தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவையின் நிகழ்;ச்சி நிரலுக்குள் வைத்துக்கொள்வதன் மூலமாகவே புதிய அரசியல்யாப்பு தொடக்கம் பொறுப்புக்கூறும் விடயம் வரையில் ஏதேனும் முன்னேற்றங்களை அடைவது சாத்தியமாகும். 

 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு புதிதாக பதவியேற்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில் இலங்கையை மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்துக்கொள்ளும் உபாயங்களை தமிழ்த்தரப்பு எடுத்தாளவேண்டும். 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017