Flash News
கட்டுரை
அல் ஹுசைனும் சுஸ்மா சுவராஜூம் இதனை அறிவாா்களா?
[ Sunday, 7 February 2016 ,08:12:28 ]

நல்லாட்சி அரசாங்கத்தின் பலாபலன்கள் என்பது வடக்கு கிழக்கில் எந்த மட்டத்தில் இருக்கின்றன? ஏன் மலையகத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கூட அந்த நிலைமையை காணமுடியவில்லை

துவாரகி சுந்தரமூா்த்தி

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மாத்திரமல்ல அவர்களின் தாயக பிரதேசமாக விளங்கும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. அரசியல் ரீதியில் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டதோ அபிவிருத்தி மற்றும் அரச திணைக்களங்கள் அரச கூட்டுத்தாபனங்களில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளும் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆகவே யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள சூழ்நிலையில் வடமாகாணத்தின் பொருளாதாரத்தில் கூடிய அக்கறை செலுத்தி அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய கடப்பாடு காணப்படுகின்றது.

சமூக கலாசார பாதிப்புகள்

இலங்கையின் ஏனைய பகுதிகளை விட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான வாழ்வாதார வழிகள் சரியான முறையில் சுதந்திரமாக திறந்துவிடப்படவில்லை. அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை சமூக, கலாசார பிறழ்வுகள் அதிகரித்துள்ளதுடன் காணி அபகரிப்பு, காடழிப்பு வாழ்வாதார வளச்சுரண்டல், காணாமற்போனோரது குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலை என பல்வேறுபட்ட பிரச்சினைகள் நாளாந்தம் தோற்றம் பெற்றவண்ணம் உள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமையை எடுத்து நோக்கினால் மாகாண அபிவிருத்தி என்பது முற்றுமுழுதாக ஆரம்பிக்கப்படவில்லை என்றே கூறலாம். அரசாங்கம் வடக்கு கிழக்கு பகுதிக்காக வகுத்துள்ள அரசியல், பொருளாதார கொள்கை அடிப்படையில் காணப்படும் சில குறைபாடுகளையும் அடிப்படையாகக் கொள்ளலாம். 

பண்டா செல்வா ஒப்பந்தம்

கடந்த 1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டன. அத்துடன் 1977ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திறந்த சந்தைப் பொருளாதார சீர்திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கிற்கு குறைந்தளவு கவனிப்பு வழங்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கணிக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை வேறு வடிவத்தில் மேலும் அதிகரித்துள்ளதென்றே கூறலாம்.

எல்லோரும் ஒரு தாய் மக்கள், ஒரே நாட்டு மக்கள், இலங்கையில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லை என்று சிங்கள அரசியல் தலைவர்கள் காலம் காலமாக கூறுகின்றனா். எனினும் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது முதல் சகல விடயங்களிலும் வேறுபாடுகாட்டப்படுவதை உணரமுடிகின்றது. அதாவது சாதாரண அடிப்படை உரிமைகளைக்கூட தமிழா்கள் அனுபவிக்க முடியாத ஒரு நிலை தொடர்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழா் பகுதிகளில் அச்சமான சூழல் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்திற்கான செயலாளா் கடந்த வாரம் நியூயோர்க்கில் கூறியிருந்தார்.

தற்போதைய நிலைமை

ஆகவே போரின் பின் தமிழா் பகுதிகளில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் அவ்வாறு முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பலாபலன் என்ன என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. சுயதொழில் அபிவிருத்தித் திட்டங்கள், வாழ்வாதார அபிவிருத்தித்திட்டங்கள் என பல்வேறு பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தற்போது அதன் பலாபலன் தமிழா் பிரதேசங்களில் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்று நோக்குமிடத்து அவை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றன. மலையகத்தில் தமிழா்கள் வாழும் பிரதேசங்களில் கூட அந்த நிலைமையை காணவில்லை

2013ஆம் ஆண்டு வடமாகாண மாகாண சபை இயங்க ஆரம்பித்தது. இதன் பின்னர் வடமாகாண சபையின் ஊடாக வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்தல் என்ற பெயரில் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறியது. குறிப்பாக தெற்கிலிருந்து வடக்கிற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு சேவைகள் இடம்பெற்றாலும் அதன் பயனை மக்கள் முழுமையாக பெற்றனரா என்பது சந்தேகமே. காரணம் நாளாந்தம் வெளியாகும் செய்திகளில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தித் தாருங்கள், வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தாருங்கள் என்றெல்லாம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனூடாக வடக்கின் தற்போதைய நிலைமை தெளிவாகின்றது.

வேலை வாய்ப்புகள்?

இவை ஒருபுறமிருக்க வட மாகாணத்திற்கான புகையிரத சேவைக்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றபோது எத்தனை வீதம் உள்ளூர் இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்? புகையிரத பாதை நிர்மாணிப்பதற்கென தென்னிலங்கையிலிருந்து குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வடபகுதி இளைஞா், யுவதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தமிழ் இளைஞா்கள் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டமை ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்று.

1920இல் பிாித்தானியரை எதிர்ப்பதற்கு உருவாக்கப்பட்ட தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து ஆரம்பித்த இன முரண்பாடு 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னா் சிங்கள தலைவா்களினால் ஆரம்பிக்கப்பட்ட புறக்கணிப்பு செயற்பாடுகளுடன் மேலும் விரிசலடைந்தது. இளைஞா்கள் ஆயுதம் துாக்கியமைக்கு இதுதான் முதற்காரணம். இவை வரலாறுகள். கடந்த 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் தமிழா் பிரதேசத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டும் என அரசு உண்மையில் சிந்தித்தால் அதிகார பகிா்வு என்ற செயற்றிட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞா் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கியிருக்க முடியும்?

பங்களிப்பு இல்லை

தற்போது சமூக பொருளாதார அபிவிருத்தியை தீர்மானிப்பதில் பொது மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளதும் பங்களிப்பு இல்லை என்றே கூறலாம். இதில் பிரதானமாக அரசியல் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அடுத்து வடமாகாண சபையை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ்வைத்திருக்கவே விரும்புகின்றது என்பது வெளிப்படையான உண்மை. இந்த காணிகள் போரின் பின்னான தமிழர் பிரதேச அபிவிருத்தியில் மாகாணசபை பூரணமாக செயற்படுவதற்கு தடையாக அமையும் ஒரு காரணி என சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஜனநாயக சுதந்திரம் என்பது தேசிய பாதுகாப்பிற்கு துணைபோகவேண்டியது என்பதை சகலரும் உணர வேண்டும். அடிப்படை மனித உரிமையை ஏற்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்பை ஒரு காரணமாக கொள்ளக்கூடாது என்பதே யதார்த்தம். அடுத்ததாக தமிழா் பகுதிகளில் காணப்படும் இராணுவ பிரசன்னம் இதற்கு ஒரு தடையாக உள்ளமை பிரதான குற்றச்சாட்டாகும் இந்திய வெளியுறவு அமைச்சா் சுஸ்மா சுவராஜை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியபோதுகூட இரணுவ பிரசன்னம் குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இராணுவ நடமாட்டம்

ஆகவே இதன் மூலம் தமிழா் பகுதிகளில் இரணுவ நடமாட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உாிமையை மறுதலிக்கின்றது என்ற உண்மைய உணர முடிகின்றது. போா் இல்லையென்றால் இராணும் நிலைகொண்டுள்ளதன் நோக்கம் என்ன? தமிழா் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள படையினரின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அரசாங்கம் கூறும் எண்ணிக்கைகள் முன்னுக்கு பின் முரணாகவுள்ளது. ஆகவே அடிப்படை மனித உரிமையையும் தேசிய சுதந்திரத்தையும் நேர்மையாக உறுதிப்படுத்துவதானால் இவ்வாறான மாறுபட்ட கருத்துக்கள் எழவேண்டிய தேவை இல்லை.

எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று வடக்கில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புமாயின் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறை ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். 1996ஆம் ஆண்டு சந்திாிக்கா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது முன்வைத்த தீா்வு யோசனைகளில் பிராந்தியங்களுக்கான அதிகார பகிா்வு முறையில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடா்பாக கூறப்பட்டிருந்தது. ஏன் 1985ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது கூட வடக்கு கிழக்கு தமிழா் தாயகம் என்ற கோட்பாடு ஏற்கப்பட்டிருந்தது.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017