Flash News
கட்டுரை
புதிய அரசியல் யாப்பும் சிங்கள தலைவா்களும்
[ Wednesday, 2 March 2016 ,07:10:19 ]

''ஒற்றையாட்சியின் கீழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்ற கொள்கையை அரசாங்கம் மாத்திரமல்ல எதிர்கட்சிகளும் ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களின் கருத்துகள் எவ்வாறு கவனத்திற் கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.''

சண்முகநாதன் பார்தீபன்

“முதன்முறையாக மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளோம்” என்ற மகுட வாசகத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த புதிய அரசியல் யாப்புக்கான உத்தேச நகல் யோசனை உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்துள்ளது.

மக்கள் கருத்தறிதல்

புதிய யாப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பபட்டதோடு, பொதுமக்கள், சமூக சேவை அமைப்புகள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். புதிய யாப்பு உருவாக்கத்தில் சிங்கள மொழி பேசும் மக்களைவிட தமிழ் பேசும் மக்கள் காட்டும் அக்கறை மற்றும் ஆர்வம் அதிகமாகவே காணப்படுகின்றது.

காரணம், 1948ஆம் ஆண்டு பிரித்தானியரது காலனித்துவத்திலிருந்து இலங்கை விடுபட்டதன் பின்னர் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறித்து, அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையை படிப்படியாக நிறைவேற்ற ஆரம்பித்தார்கள் சிங்கள அரசியல் தலைவா்கள். குறிப்பாக பெரும்பான்மையாக இருந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களை அடக்கியாளக்கூடிய வாய்ப்பை பிரித்தானியா் உருவாக்கிய யாப்பு வழங்கியிருந்தது.

சோல்பரி யாப்பு

குறிப்பாக 1948 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பின் 20 ஆவது சரத்தில் உள்ள சிறுபான்மையோர் காப்பீடு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சரத்தை அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த யாப்பை உருவாக்கிய சோல்பரி பிரபு 29 ஆவது சரம் நீக்கப்பட்டமை தொடா்பில் தனது நுாலில் கவலை வெளியிட்டிருந்தார். 1948 – 1949 பிரஜாவுரிமைச் சட்டத்தை உருவாக்கிய அரசாங்கம் ஏற்கனவே அடிமைப்பட்டுக்கிடந்த இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடற்றவர்களாக மாற்றியது.

எனினும் அப்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியாக பாரிய தாக்கத்தை இந்த சட்டம் ஏற்படுத்தவில்லை. என்றாலும், அம் மக்களுக்கு கிடைத்திருந்த வாக்குரிமை சுதந்திர இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் உருவாகியிருந்த இலங்கை இந்திய காங்கிரஸுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் (இந்திய வம்சாவளி தமிழ் மக்கள்) மத்தியில் பெருமளவு ஆதரவு காணப்பட்டதோடு, அவர்களது வாக்குரிமை கண்டிச் சிங்களவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கலாம் என்ற அச்சமே பிரஜாவுரிமைச் சட்டத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது.

ஜே.ஆரின் செயற்பாடுகள்

இது ஒருபுறம் இருக்க 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் இனப் பிரச்சினைக்கான கால்கோளாக அமைந்தது 1943 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன தனிச்சிங்கள சட்டம் தொடர்பிலான பிரேணையை முன்வைத்தார். இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாநாயக்க அந்த முன்மொழியை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார்.   

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அடாவடித்தனங்களும் ஆரம்பமாகியதோடு, பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிரான ஜே.ஆர். ஜெயவர்தனவின் பாத யாத்திரை, 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் உருவான புதிய யாப்புகளில் காணப்பட்ட மொழிக் கொள்கைகள் மற்றும் இதர தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு மக்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது என்றால் அது மிகையல்ல.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம்

“சிங்களவர்கள் தமிழர்களை அடக்கியாள முற்பட்டதன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது” என்ற “துக்கலக்” சஞ்சிகை ஆசிரியர் சோவின் கருத்தை அர்த்தப்படுத்தும் வகையிலேயே இலங்கையை ஆண்ட, ஆளும் அரசாங்கங்களினதும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் பாரிய மாற்றம் அல்லது புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேசமே நற்சான்றிதழ் கொடுத்ததுள்ள நிலையில் அந்த போதை தணிவதற்குள் புதிய யாப்பு ஒன்றை உருவாக்கும் முதற்கட்ட பணியை நிறைவு செய்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.

புதிய யாப்பு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை உள்ளடக்கும் வகையிலேயே உருவாக்கப்படும் என வாய்மொழி உறுதிகளை அரசாங்கத் தரப்பு முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகின்ற நிலையில் அதற்கேற்ப தமிழ் மக்களும் புதிய யாப்பு உருவாக்கம் தொடர்பிலான தமிழ் மக்களின் கருத்துக்களும் அமைந்துள்ளன. குறிப்பாக வடபகுதியில் நடைபெற்ற அமர்வுகளில் இனவாதத்தை தோற்றுவிக்கும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும், சம்ஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும், தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் சுதந்திரகமாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும் என்ற கேரிக்கைகள் உள்ளிட்ட தமிழ் மக்கள் சார்பில் பல யோசகைள் முன்வைக்கப்பட்டன.

தமிழர்களின் இழப்புகள்  

இதில் ஒருபடி மேலே போய் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமர்வில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் பொது மக்கள் முன்வைத்துள்ளனர். 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பாதித்தது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாலும் தமிழ் மக்களின் இழப்புகளை எவராலும் ஈடுசெய்ய முடியாது என்பது நிதர்சனம்.

புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள அரசாங்கம், மக்கள் கருத்தறியும் செயற்றிட்டத்தையும் மிகவேகமான நிறைவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றுவதற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்ததோடு வெகு விரைவில் அது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற சூழலில் இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படையாக அதிகாரப் பரவலாக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்திருக்கும் நிலையில் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளும் ஏற்பு

ஒற்றையாட்சியின் கீழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்ற கொள்கையை அரசாங்கம் மாத்திரமல்ல எதிர்கட்சிகளும் ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் உத்தேச அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான பொதுமக்களின் கருத்தறியும் செயற்திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் கருத்துகள் எவ்வாறு கவனத்திற் கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1972 மற்றும் 1978 ஆண்டு யாப்புகளில் பொதுக்களின் கருத்துகள் கருத்திற்கொள்ளப்படவில்லை இருந்தாலும் அந்த யாப்புகள் சிங்கள பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததோடு, தமிழ் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றியுமிருந்தது.

மக்களின் எதிர்ப்பார்ப்பு

மேலே குறிப்பிட்டதுபோல, உருவாக்கப்படவுள்ள புதிய யாப்பு குறித்த எதிர்பார்ப்பு சிங்கள மக்களை விட தமிழ் பேசும் மக்கள் மத்தியிலேயே மேலோங்கி இருக்கின்றது. காரணம் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விடிவையும் விடுதலையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரே வழி யாப்பினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே என்பது அவர்களது எதிர்பார்ப்பு. எனினும் அதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு ஒரு கோப்பை தேனீரையேனும் இலவசமாக வழங்குவதற்கு பேரினவாத கட்சிகள் விரும்பாத நிலையில் அவர்கள் இணைந்து உருவாக்கும் அரசியல் யாப்பில் எவ்வாறு அதிகாரங்களை வழங்கப்போகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.எது எவ்வாறெனினும் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கப்போவது இல்லை என்ற சமிக்ஞைகளை தற்போதே வெளிப்படுத்தியிருக்கின்றமை மாத்திரம் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.  

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017