Flash News
கட்டுரை
2016 ஆளப்போவது யார் ? 01 – மகா. தமிழ்ப் பிரபாகரன்
[ Wednesday, 9 March 2016 ,10:09:12 ]

தேர்தலை நோக்கி எந்தெந்த நிலையில் தமிழக கட்சிகள் ?


தமிழகத்தின் 15வது சட்டப்பேரவை அமைவதற்கான தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு வரும் மே 16 அன்றும் வாக்கு எண்ணிக்கை மே 19 அன்றும் நடைபெறும் என அறிவித்துள்ளது இந்திய  தேர்தல் ஆணையம். தமிழகத்தோடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.


தேர்தல்கால பரபரப்புகள் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கோடே தொடங்கிவிட்டது எனலாம். செம்பரப்பாக்கம் ஏரியை மழை நேரத்தில் கையாண்ட விதத்திலிருந்து நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய வரை, ஆளுங்கட்சியின் அத்தனை செயல்பாடும் பேசுப்பொருளானது.


அரசியலை பற்றி தினமும் சிறிதளவேனும் பேசும் மக்களிடையே,’நான்கு ஆண்டுகளாக பெரிய குற்றச்சாட்டுகளில் சிக்காதது போல நடந்த வந்த ஜெயலலிதா ஆட்சி, மழையில் சாயம் வெளுத்துவிட்டது’ என்ற பேச்சும் பரவிவந்தது.  இப்படி தேர்தல் நெருங்க நெருங்க ஆட்சியின் அத்தனை செயல்பாடும் தேர்தல் நலன் நோக்கியதாகவே பார்க்கப்பட்டது.


அதற்கேற்றாற் போல் அதிமுக அரசும் ’அம்மா இணையம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம்’ என புதுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் சிறை விடுதலை தொடர்பாக மத்திய அரசின் எண்ணம் கேட்டு தமிழகத்தின் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதமும் தேர்தல் நேர செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்சனையைக் கையிலெடுத்ததைப் போலவே, தற்போதும் தேர்தல் வருகிறது என்றதும், இதன் காரணமாக வாக்குகளைக் கவரலாம் என்ற எண்ணத்தோடு அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளரைக் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறது’ என திமுக தலைவர் கருணாநிதியின் கருத்தைப் போலவே தமிழகத்தின் பிரதான கட்சிகளின் கருத்தும் வெளிப்பட்டன. இந்த சூழலில் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.   

 

மக்கள் நலக் கூட்டணி


ஒரு கட்சி ஆட்சிமுறை உதிர வேண்டும்...என்று புதிய வடிவில் மற்ற எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக மக்களிடம் வாக்கு கேட்டு சென்றது மக்கள் நலக் கூட்டணி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (சிபிஎம்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்பட்டு வர அதுவே தேர்தல் நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நீங்கலாக மக்கள் நலக் கூட்டணியாக உருப்பெற்று நிற்கிறது. 


தமிழகத்தில் தொடர்ந்து வரும் ’திமுக,அதிமுக’ ஆட்சிகளிலிருந்து விடுபட மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க கோருகின்றனர் அக்கூட்டணியின் தலைவர்கள். தேர்தலில் மட்டுமல்ல ஆட்சியிலும் கூட்டணி என்கின்றனர். தேமுதிகவையும் தமாகவையும் கூட்டணிக்கு அழைத்து வரும் மநகூ தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு மாற்றான மூன்றாவது அணியாகவும் இது பார்க்கப்படுகிறது.  திமுக-அதிமுகவினை எதிர்க்கும் அதேயளவு தேசியக் கட்சிகளாக பார்க்கப்படும் காங்கிரஸ்-பாரதீய ஜனதாவையும் எதிர்க்கின்றனர்.

 

திமுக கூட்டணி


“நமக்கு நாமே”  விடியல் மீட்புப் பயணத்தின் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பயணத்தை திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தொடங்கியது. மக்களை மக்களிடமே சென்று சந்திக்கிறோம் எனவும் ‘முடியட்டும் விடியட்டும்’ என்ற முழக்கத்தோடும் 234 தொகுதிகளுக்குமான பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். ’செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ஆம் தேதி’ முடிவுற்ற இப்பயணம் ‘அவர் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும் அவரை திமுகவின் நிழல் முதலமைச்சர் வேட்பாளராகவே’ மக்களிடையே அறிமுகப்படுத்தியது. 

இந்த நேரத்தில் கூட்டணிக்கான ஆலோசனைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திமுக தேமுதிகவோடு கூட்டணி வைக்குமா ? காங்கிரசோடு கூட்டணி வைக்குமா? மத்தியல் ஆளும் பாரதிய ஜனதாவோடு கூட்டணியா? என்று அனுமானங்கள் பேசப்பட்டு கொண்டிருக்க காங்கிரசோடு கூட்டணியை வைத்துள்ளது திமுக. ’ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று சொல்லி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வெளியேறிய சம்பவத்தை கருணாநிதியும் மறந்துவிட்டார், தேர்தலில் மட்டுமல்ல ஆட்சியிலும் கூட்டணி என்ற பேச்சை ஈவிகேஎஸ் இளங்கோவனும் மறந்துவிட்டார்.


தேமுதிக கூட்டணி பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு,“பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை" என வேட்பாளர் நேர்காணலின் முடிவில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

தேசிய திராவிட முற்போக்கு கழகம்


விஜயகாந்தின் தேசிய திராவிட முற்போக்கு கழகத்துக்கு மக்களிடையே இவ்வளவு ஆதரவு உள்ளதா ? என்று சிந்திக்க வைத்தது திமுகவும் பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும் மாறி மாறி கூட்டணிக்கு அழைத்து கொண்டிருப்பது தான். 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கிய நடிகர் விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் அவர் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ய எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஐந்து ஆண்டு காலம் நிறைவடையும் முன்னரே இழந்துள்ளார். பதவியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சி தலைவராக செயல்பாட்டு அளவில் அவர் முடங்கேயே கிடந்தார், இருந்தாலும் கூட்டணிக்காக அவரை நாடி இருக்கின்றனர். கூட்டணிக்கு வருவாரா ? வருவாரா ? என காக்கவைத்து காக்கவைத்து தன்னை வெளிச்சத்திலேயே வைத்திருக்கிறார் விஜயகாந்த். திமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது, 59 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்ற அனுமானங்களை மறுத்துள்ளது தேமுதிக தலைமை,’உண்மையில் இந்த நொடி வரை யாருடனும் கூட்டணி  பற்றி விஜய்காந்த் பேசவே இல்லை’ என்கிறது.


தேர்தலை சந்திப்பதற்கான முடிவில் தேமுதிக நடுவழியில் நின்றுகொண்டிருக்க அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் திமுகவோடு 59 தொகுதிகளா ? பாஜகவோடா ? திமுக-அதிமுகவை தவிர்த்த மக்கள் நலக்கூட்டணியோடா? என்னும் கூட்டணி பழம் இன்னும் சில நாட்களில் கனிந்துவிடும்.

 

பாரதீய ஜனதா கட்சி


மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியாக பாரதீய ஜனதா பார்க்கப்பட்டாலும் தமிழகத்தில் அதன் நிலை தலைக்கீழாகவே உள்ளது. ‘தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இதற்காக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இப்போதைய நிலையில் அவர்கள் கூட்டணியில் உள்ளது, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மட்டுமே. பாமக-வையும் தேமுதிக-வையும் தங்கள் கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடு இருக்கிறது பாரதீய ஜனதா. அதே சமயத்தில் அதிமுக பாதையும் ஒரு பேச்சில் உள்ளது.

 

பாட்டாளி மக்கள் கட்சி


கடந்த சட்டமன்ற தேர்தல் வரை திமுக-அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த தேர்தலில் ’மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக கொண்டு தேர்தலை சந்திக்கப் போவதாக கூறிவருகிறது.


திமுகவும், அதிமுகவும் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக, அதிமுக இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை எனச் சொல்லும் அன்புமணி ஒருவாய்ப்பை மக்களுக்கு தருகிறார். “இப்போது மக்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது ஒருபக்கம் சாத்தான் மற்றொரு பக்கம் ஆழ்க்கடல் ஆனால் இருவருக்கும் மத்தியிலே இருப்பது ஒரு மருத்துவர் என்று மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் அன்புமணி.


நாம் தமிழர் கட்சி


ஈழப்போரின் அடிப்படையில் உருவான நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறி முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் தமிழர்நாட்டில் தமிழர் ஏட்டில் தமிழர் வீட்டில் தமிழ் இருக்கிறதா ? என்றால் இல்லை. எங்கும் இல்லை தமிழ், கல்லூரியில் இல்லை, வழிப்பாட்டில் தளத்தில் இல்லை, வழக்காடு மன்றத்தில் இல்லை, ஆட்சி மொழியாக இல்லை, அதிகார மொழியாக இல்லை, பண்பாட்டு மொழியாக இல்லை, பயன்பாட்டு மொழியாக இல்லை, வர்த்தகமாக மொழியாக இல்லை எனக் குறிப்பிடும் சீமான், நாம் தமிழர் கட்சியின் அரசியலாக ’தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதே’ என முன்வைக்கிறார். முன்னதாகவே 234 தொகுதிகளுக்கமான வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.


தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைப்பையே மாற்றுவோம் என்னும் நாம் தமிழர் கட்சியின் போக்கும் செயல்பாடும் மக்களிடையே எந்தளவு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை மே 19 காட்டும்.  

 

பச்சைத் தமிழகம்


இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அம்மக்களோடு போராடி வந்தவர் சுப.உதயகுமார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சுப.உதயகுமார், இந்த சட்டமன்ற தேர்தலில் ’பச்சைத் தமிழகம்’ என்ற கட்சியாக அறிமுகமாகிறார். தமிழர்களின் எதிர்காலம் இருண்டு கிடப்பதாக குறிப்பிடும் சுப.உதயகுமார் தமிழர்களுக்கான பசுமை அரசியல் சித்தாந்தமே தங்களின் கொள்கை என்கிறார்.


’குறிப்பிட்ட சில கட்டிடங்களை நோக்கியோ நாற்காலிகளை நோக்கியோ அரசியல் பயணத்தை மேற்கொள்ளவில்லை, புதிய சமூக பொருளாதார அரசியல் மாற்றத்தை கொண்டுவருவதற்காகவும் அதை நோக்கி மக்களை இட்டுச்செல்வதற்காகவுமே பச்சைத் தமிழகம்’, எனக் கட்சியின் அறிமுக சந்திப்பில் குறிப்பிட்டார் சுப.உதயகுமார்.


நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி இருக்காது என்றும், மதிமுக-விசிக கட்சி நிற்கும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவுத் தரப்படும் என்றும் பச்சைத் தமிழகத்தின் கூட்டணி நிலைப்பாடு உள்ளது.


தமிழ் மாநில காங்கிரஸ்


1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் அப்போதைய தேசியத்  தலைவர்  நரசிம்ம ராவ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்தார். இதில் அதிருப்தி அடைந்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு ஜி.கே.மூப்பனார் தலைமையில்  தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) ஆரம்பிக்கப்பட்டது. 2002 யில் மீண்டும் காங்கிரசில் இணைந்தது. 


மீண்டும் மூப்பனாரின் வழியே அவரின் மகன் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரசை அதிருப்தி காங்கிரசை உறுப்பினர்களை கொண்டு ஆரம்பித்தார். இப்படி பிரிந்த நிலையில் முதல் சட்டமன்ற தேர்தல் சந்திக்கிறது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ். அதிமுக மீதான அதிருப்தியை தமாக பெரிய அளவில் காட்டாததால் அதிமுக கூட்டணி பக்கம் சாயலாம். அதே வேளையில் கூட்டணிக்கு அழைக்கும் மநகூ பக்கமும் சாயலாம் என்கின்றது மநகூ வட்டாரங்கள்.


இந்திய ஜனநாயக கட்சி 


பாரிவேந்தரால் தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) பெரிய அரசியல் பலம், சித்தாந்த பலம் இல்லாத கட்சியாக பார்க்கப்பட்டாலும், அதுவும் பாஜகவை கைவிட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருவதன் மூலம் அவ்வதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள ஐஜேகே, தேர்தல் போட்டியில் பெண்களுக்கு 50 சதவீத பங்களிக்கப்படும் என்கிறது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்


தமிழகத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) அதிரடியான பல உட்கட்சி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து பல மாதிரியான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் ஆளும் அதிமுகவின் மீது எழுந்தாலும் ’ஆளப்போவது யார்?’ என்னும் தேர்தல் சர்வேக்களில் அதிமுகவுக்கு அடுத்த ஆட்சியை பிடிப்பதற்கான பலம் இருப்பதாகவே காட்டப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ‘தனித்தே போட்டி’ என்ற முடிவை கூட எடுப்பார் எனப்படுகிறது.


அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு பின்னர் அவராகவே எம்.எல்.ஏ.பொறுப்பை ராஜினாமா செய்த பழ.கருப்பையா,’இது தனி ஒருவனின் தோல்வியல்ல. சனநாயகமற்ற கட்சிகளிடம் அதிகாரம் கிடைத்தால் எப்படி சனநாயகமற்று நடந்து கொள்வார்கள் என்பதற்கான சுய மதிப்பீடு இது. இது இருபெரும் திராவிட கட்சிகளின் தோல்வி. ஒட்டுமொத்தத்தில் இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற சனநாயகத்தின் தோல்வி. ஊரை அடித்து உலையில் போட்டவர்களை மண்ணுக்குள் தள்ளுவார்கள் மக்கள்’ என்கிறார்.


கூட்டணி பொறுத்தமட்டில் கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி,அகில இந்திய பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணிஉள்ளிட்டவை அதிமுகவோடு இருப்பது போன்ற தோற்றம் உள்ளது.  


கடந்த தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் இருந்த புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி அதிமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருவதால் அவர்களின் கூட்டணி குறித்த முடிவுகளை பொறுத்திருந்து பார்க்கலாம். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் மிஞ்சியுள்ள ஒற்றை-இரட்டை தொகுதி கட்சிகள் பெரும்பாலும் திமுக-அதிமுக கூட்டணி பக்கம் சாயவே வாய்ப்புள்ளது.

 

சகாயத்தின் கோரிக்கை


நேர்மையான ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக அறியப்பட்ட சகாயத்தின் பெயர், தமிழக மக்கள் மத்தியில் முதல்வர் வேட்பாளராகவும் சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது. ஆனால் முதல்வர் வேட்பாளர் அடையாளத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறார் சகாயம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘சகாயம்’ போன்ற நேர்மையான அதிகாரிகளை நிர்வாகத்தில் நியமிப்போம் என்கிறது மக்கள் நலக் கூட்டணி.


தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சகாயம் ‘யாருக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் வாக்களியுங்கள். ஆனால், பணத்திற்கு மட்டும் விலைபோய் விடாதீர்கள். தமிழக இளைஞர்கள் சிறந்த அரசியல்வாதிகளை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அரசியல் என்பது சமூகத்தின் வெளிப்பாடு. அரசியல் நேர்மையாக இருந்தால்தான் சமூகமும் நேர்மையாக இருக்கும்’ என்ற கோரிக்கையினை தமிழக மக்களுக்கு விடுத்துள்ளார்.


தமிழகத் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பல கட்சிகள் நேரெதிர் திசையில் நின்று கொண்டிருக்கின்றன. யாரின் திசை ஆட்சியை நோக்கியது என்பதை மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும்.


                                                                                           - போடுங்கம்மா ஓட்டு…

மகா. தமிழ்ப் பிரபாகரன்

சிறப்புச் செய்தியாளர்

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016