Flash News
கட்டுரை
2016 ஆளப்போவது யார்? 02 - மகா.தமிழ்ப் பிரபாகரன்
[ Monday, 11 April 2016 ,10:42:54 ]
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான துடிப்பு கட்சிகளிடையே எழுந்துவிட்டது என்றாலும், கூட்டணி இழுபறி அதை சாந்தப்படுத்தி வருகின்றது. யாருடனான கூட்டணி பாதையை தே.மு.தி.க தேர்ந்தெடுக்கும் என எதிர்ப்பார்த்து வந்த நிலையில் ‘தங்கள் தலைமையில் கூட்டணி’ என்ற விதமாக புதிய பாதையை போட்டுள்ளார் விஜயகாந்த்.

சென்னையில் மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற தே.மு.தி.க மகளிர் அணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த், ‘விஜயகாந்த் தனியாக தான் நிற்கப்போகின்றேன். இவர்கள் ஆளாளுக்கு சொன்னார்களே…அங்க போவாரா? பேரம் படியிலின்னு…அதெல்லாம் கிடையாது. யாருக்கிட்டயும் நான் பேரம் பேசல. அவங்க என்ன தேடி வந்தாங்க. அவர்களுக்கு நன்றி தான் சொன்னன்’ என்று தனித்துப் போட்டி என்ற முடிவை அறிவித்தார். இதனுடன் ஆளும் அ.தி.மு.க ஆண்ட தி.மு.க.வோடு கூட்டணி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது தேமுதிக. அந்த வேளையிலும் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வந்தனர். 

கட்சிகளும் சாதிய ஆணவக் கொலையும்

இப்படி தேர்தலுக்கான அரசியல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், மார்ச் 13 அன்று ‘சங்கர்-கெளசல்யா’ சாதி கடந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் உடுமலைப்பேட்டையின் பிரதான சாலையில் பட்டப்பகலில் வெட்டப்பட்டனர். இந்தக் காட்சி இணையத்தில் பரவி மக்களின் மனங்களை அதிரச் செய்தது. அதில் கழுத்து அறுபட்ட சங்கர் மருத்துவமனையில் உயிரிழக்க, உயிர் அறுபட்ட வலியோடு கெளசல்யா மருத்துவமனையில் இருக்கின்றார். 

ஆளுங்கட்சி பற்றிய குற்றச்சாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அறிக்கைவிடும் கட்சிகள் ஒரு நாளாகியும் இக்கொலைக்கு மெளனமாகவே இருந்தன. பாமக நிறுவனர் ராமதாஸ் இதற்கு ஒரு படி மேலே சென்று ஆணவக் கொலை பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு ‘நான் சொன்னதுலாம் முதல்ல போடுங்க, எவ்வளவு முக்கியமான செய்திகள்’ சொல்லியிருக்கன் என்று சிரித்துக் கொண்ட எழுந்து செல்ல அவருடன் பாமகவினரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தனர். இது பாமக வின் சாதிய போக்கையே வெளிப்படுத்துகின்றது என கடுமையான விமர்சனங்கள் எழ, பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ‘பாமக ஆட்சிக்கு வந்தால் உடுமலை போன்ற ஆணவக் கொலை நடக்காது’ என சமாளித்தார்.
 
அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்து இதற்கெதிரான முதல் குரலாக பதிவு செய்த மக்கள் நலக் கூட்டணி,’கடந்த மூன்றாண்டுகளில் 81 சாதிய ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகவும் மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதனைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்றும் சாதி வைத்து வாக்கு கோரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

இரண்டு நாட்கள் கழித்து கருத்து வெளியிட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், ’ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது’ என சாதிய பிரச்சினையை சட்ட ஒழுங்கு பிரச்சினையாக உருவகப்படுத்தினார்.

சாதிய பிரச்சினை ஒருபோதும் சட்டஒழுங்கு பிரச்சினையாக மட்டுமில்லை, தமிழகத்தில் அது சமூகப் பிரச்சினையாகவே உள்ளமை அவருக்கு நினைவில்லை போலும்.

நவம்பர் 2009, திமுக ஆட்சி. கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர். இப்போது கொலை நடந்த அதே உடுமலைப்பேட்டையில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்காக 21 வயது ஸ்ரீபிரியா கொடூரமாக தந்தையாலும் சொந்தக்காரர்களாலுமே கொல்லப்பட்டார்.

இப்படி எல்லா ஆட்சியிலும் சாதிய கலவரங்களுக்கும் கொலைகளுக்கும் பல சம்பவங்கள் உள்ள போது இது எப்படி ஓர் ஆட்சியின் குறையாக மட்டுமே இருக்க முடியும்?

அதிமுக கூட்டணியும், உட்கட்சி சிக்கலும்

கடனால் நிகழ்ந்த விவசாயி தற்கொலையும் உடுமலைப்பேட்டை சாதிய கொலையும் தமிழகத்தை பதற்றமடைய வைத்து கொண்டிருந்த நேரத்தில், அதிமுகவில் உட்கட்சி பிரச்னைகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. அதே சூழலில் கூட்டணி பேச்சுகளும் தொடங்கியிருந்தன.

மார்ச் 13, அதிகாரபூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பிரிந்த சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத். இதில் பல கட்சிகள் தொகுதிகளை எதிர்பார்த்து ஆதரவு அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி 11 தொகுதிகளைக் கோரியுள்ளதாக சொல்லப்படுகின்றது.  

இந்த நிலையில் அன்றைய கூட்டணி பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்துடன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் இல்லாமை பேசுபொருளானது. 

ஜெயலலிதாவின் சிக்கலான காலத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்ச்செல்வம் அடுத்தகட்ட தலைமையாக உருவாகலாம் என முயற்சித்ததாகவும், அதை அறிந்த ஜெயலலிதா ‘பன்னீர் செல்வமா இப்படி?’ என அதிர்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. 

கட்சியின் நிகழ்வுகளில் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட வந்த இவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் பரவலாக வெளிவந்தன. 

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி, ’ஓர் அமைச்சரவையில் தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயற்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா? ஓர் ஆட்சியிலே உள்ள அமைச்சர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது என்பது ஆச்சரியமல்ல. ஒரு அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களைப் பற்றி, ஆட்சியினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்ற நேரத்தில், அந்த அரசைப் பற்றி தனியே விளக்கம் வேறு கூறிட வேண்டுமா?’ என்றும்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,’ தேனை எடுப்பவர்கள், புறங்கையில் உள்ள தேனை ருசிக்காமலா இருப்பார்கள் என கிண்டலாக சொல்வதுண்டு. ஆனால் இவர்கள் தேன்அடையையே மொத்தமாக கொண்டு சென்று விட்டார்கள். 

அவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்ததை கட்சி தலைமைக்கு முழுமையாக கொடுக்காததுதான் காரணம் என்கிறார்கள்’ என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ்,’ ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கின்றது, ஜெயலலிதாவின் தளபதிகளாக  இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள்’ என்றும் பொதுவெளியில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நிதியமைச்சர் பன்னீர் செல்வம் மார்ச் 18 மாலை முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதனையடுத்து மார்ச் 19 நடந்த அதிமுகவின் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில், ஓ.பன்னீர் செல்வமும் பங்கு பெற்றுள்ளார். 

திமுகவில் கூட்டணி

நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலினை பார்க்கவிருந்த நிலையில், அச்சந்திப்பு திடீரென ரத்தானது இரு கட்சிகளிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக பேசப்பட்டது.

ஸ்டாலினை பார்க்க வந்த கார்த்திக்கை யாரோ கடத்திவிட்டனர் என்று பலவிதமான யூகங்கள் பரவி வர அதை மறுத்துள்ளார் கார்த்திக். அதோடு ‘நாங்கள் திமுக கூட்டணியில் சேரக்கூடாது என்பதற்காக சதி நடக்கின்றதோ என்று நான் சந்தேகிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

மனித நேய மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜஹாஹிருல்லா திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுடன் கூட்டணி என உறுதிசெய்துள்ளார். இப்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு சிறு கட்சிகளும் அமைப்புகளும் திமுகவில் இடம் பெற்றுள்ளன.

தடுமாறும் பாரதீய ஜனதா கட்சி

மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பாஜக கூட்டணிக்கு கோரும் கட்சிகள் எல்லாம் அவர்களை நிராகரித்து வரும் நிலையில், கூட்டணி அமையவில்லை என்றால் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் எனச் சொல்லி வருகிறது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன்,’பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். அது சமூக, பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்’ என மயிலாடுதுறையில் சொல்லிச் சென்றுள்ளார். 

‘பாஜகவால் மாற்றம் வரும்’ நடிகர் விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். 1996யில் திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த்  ஆதரவு தெரிவித்தது போல, இம்முறை தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வைத்துவிட வேண்டும் என துடிக்கிறது பாஜக. நடிகர் விஜயகுமாரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்தை சந்திப்பேன் எனச் சொல்லியுள்ளார். விஜயகாந்த் எப்படியாவது வந்துவிட மாட்டாரா ? என்று எதிர்ப்பார்ப்பும் இவர்களுக்கு உள்ளது. 
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசியுள்ள பாமக நிறுவனர் ‘தனக்கு பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி பிளவு ?

மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது என திமுக,பாஜக,பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பேச்சுகளில் கணித்து வருகின்றன. ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் நலத்தலைவர்கள் நான்காம் கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில் ‘தங்களுக்குள் எந்த பிளவும் இல்லை’ என்கின்றனர். 

அதே சமயத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி என்பதை தேமுதிக அடையாளப்படுத்தி வரும் நிலையில், அது சாத்தியப்படாது என்கிறது ம.ந.கூட்டணி. இருப்பினும் ம.ந.கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்ற அழைப்பு இன்னும் காலாவதியாகி விடவில்லை.

எங்கள் ஆட்சியே !

‘தமிழகம் முழுவதும் இந்துக்கள் ஓட்டு வங்கியை உருவாக்க 2016–ம் ஆண்டு தேர்தலில் ‘இந்துத்துவா அரசியலை புரட்சி களமாக மாற்ற களத்தில் நிற்கிறோம்’. 2016–ம் ஆண்டு இந்துக்கள் ஓட்டு வங்கியை கட்டமைப்போம். 2021–ம் ஆண்டு தமிழ்நாட்டில் தனித்து ஆட்சியை பிடிப்போம்’ என்று கூறியுள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ‘பா.ஜ.க. இந்து அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கோரிக்கைகளை ஏற்பதாகவும் கூறவில்லை.எனவே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அப்துல்கலாம் இலட்சிய இந்திய கட்சி, கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆரம்பித்துள்ள கட்சி. திமுக-அதிமுக ஆட்சிகளை கடிந்துள்ள இவர்களும் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர். 

82 சதவீத இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லி வருகிறார் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

தேமுதிக கூட்டணியை எதிர்ப்பார்த்து திமுக தலைவர் கருணாநிதி சொன்ன ‘கனிந்த பழம்’ தனித்து விழ, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் ‘திமுக என்பது ஐஸ்க்ரீம் மாதிரி தேமுதிக என்பது அதன் மேல் உள்ள செர்ரி பழம் மாதிரி. ஐஸ்க்ரீமை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், செர்ரி பழம் பிடிக்காதவர்கள் தூக்கி போடுவார்கள். திமுகவுடன் கூட்டணி வைத்தால் தேமுதிகவிற்கு தான் பெருமை’ எனக் கூறியுள்ளார். 

இப்படி நாளொரு பேச்சு பொழுதொரு முடிவு என உருவாகிவரும் நிலையில் 2016 தமிழகத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவிலான பலமுனைப் போட்டியை சந்திக்கிறது. பலமுனைப் போட்டி வாக்குகளை சிதறடித்து ஆளங்கட்சிக்கு பலத்தை சேர்க்க போகிறதா ? அல்லது திமுக-வையே ஆட்சியில் அமர வைக்க போகிறதா ? இவை எதுவுமே இல்லாத புதிய கட்சி/கூட்டணியை ஆட்சியில் அமர்த்த போகிறதா ? என்பதை பார்க்கத் தானே போகிறோம். 
                                                                                                                                                                                                         -போடுங்கம்மா ஓட்டு...

மகா.தமிழ்ப் பிரபாகரன்
சிறப்புச் செய்தியாளர்

கடந்த தொடரை வாசிக்க: 2016 ஆளப்போவது யார் ? 01

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017