Flash News
கட்டுரை
குடிநீர் இன்றி தவிக்கும் அம்பாறை குடியிருப்புமுனை மக்கள்
[ Thursday, 31 March 2016 ,08:07:33 ]

இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்த போதும், விவசாயம் செய்வதற்கு போதியளவு நீர்வளம் இருக்கின்றதா? என்ற வினாவிற்கு விடை தேடுவதற்கு முன்பு மனிதன் உயிர்வாழ்வதற்கு (குடிப்பதற்கு) போதியளவு நீர் இருக்கின்றதா? என்பதனை கவனிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட குடியிருப்பு முனைக்கிராம மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலையை அவர்களது கிராமத்திற்குள் நுழைந்தபோது கண்கூடாக காணமுடிந்தது.

இந்தக் கிராமமானது நாவிதன்வெளி அன்னமலையில் உள்ள ஒரு விவசாய கிராமமாகும். இக்கிராமத்தில் ஆரம்பத்தில் 25 க்கும் குறைவான குடும்பங்களே வாழ்ந்து வந்தார்கள். பின்னரான காலப்பகுதியில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கமைய தற்போது வாக்காளர் பட்டியலில் 78 குடும்பங்கள் பதியப்பட்டிருந்த போதும் தற்போது அங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு துறைநீலாவணை, 15 ஆம் கிராமங்களில் இருந்து வந்து குடியேறியவர்களே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது பிரதான தொழிலாக வேளாண்மை செய்கை முதன்மை பெறுகின்றது.


இங்கு வாழும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீரை பெறுவதற்காக வேண்டி பல மைல் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்றும் வாழ்கின்றார்கள். இது தொடர்பாக இங்கு 12 வருடங்களாக குடியேறி வாழ்ந்து வரும் குடும்பத்தலைவர் ஒருவர் தனது ஆதங்கத்தை இவ்வாறு கூறுகின்றார்.

“12 வருடங்களாக இந்த குடியிருப்புமுனை கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். இந்தக் கிரமத்தில் ஒருவர் வாழ்வதற்குரிய அனைத்து வளங்களும் இருந்தும் நீர்வசதி இல்லாமல் உள்ளது. குடிநீர் இல்லாமையானது இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் பெரும் குறையாகவே உள்ளது.

தற்போது வறட்சியான காலநிலை நிலவி வருவதனால் இப்பிரதேச மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக வயல் வழியாக நடந்து பல மைல் தூரம் சென்று தலையில் குடத்தினை சுமந்து குடிநீரை பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“இந்தக் கிராமத்தில் ஆறு, குளம் இருந்தும் குடிப்பதற்கு தண்ணீரின்றி மிகவும் கஸ்டப்பட்டுகின்றோம். நாங்கள் இக்கிராமத்திற்கு வரும்போது குடியிருப்பதற்காக விரும்பி வந்தோம். ஆனால் இன்று நான் அறிய பன்னிரெண்டு வருடங்களாக குடிநீரை பெறுவதில் மிகுந்த சிரமத்தையே எதிர்கொண்டு வருகின்றோம். அடிக்கிற வெயிலுக்கு நாலு நாளில் இந்தக் கிணற்றில் இருக்கின்ற தண்ணியும் வத்தி போயிடும்.

அதற்கு பின்னர் மிச்சம் தூரத்திற்குச் சென்றுதான், அதாவது 7 ஆம் குளனி, 15 ஆம் குளனி, கம்பிக்கால போன்ற இடங்களுக்கு சென்றே குடிதண்ணியை கொண்டு வரவேண்டும். போக்குவரத்தும் கஸ்ரம் பெண்கள் வயல்வெளியாகச் சென்று தலையில் குடத்தை சுமந்தே வரவேண்டும். இதுதான் இந்த மக்களின் அவல நிலையாக தொடர்ந்து வருகின்றது” என அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்தார்.