Flash News
கட்டுரை
மாமனிதர், கவிஞர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரனின் 10 ஆண்டு நினைவு தினம்
[ Thursday, 7 April 2016 ,08:47:01 ]

கவிஞரும், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவருமான வன்னியசிங்கம் விக்னேஸ்வரனின் 10 ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 

கடந்த 1955 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் நாள் நயினை நாகபூணியின் மணிபல்லவத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை நயினை கணேசா கனிஸ்ட வித்தியாலயத்திலும், உயர் கல்வியை நயினை மகாவித்தியாலயத்திலும் பின்னர் யாழ்.மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், யாழ்.தொழில்நுட்பக்கல்லூரி ஆகியவற்றிலும் பயின்று 1979 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பினை மேற்கொண்டார். 

இலங்கை வங்கியிலே தனது பணியை ஆரம்பித்த அவர் பல பதவி உயர்வுகளைப் பெற்று உதவி முகாமையாளராக உயர்ந்து இறுதிவரை அந்த வங்கியிலேயே கடமையாற்றினார். 

பணி நிமித்தம் திருகோணமலைக்குச் சென்ற அவர் 1988 இல் திருமலையிலேயே தனது இல்லறத்தை ஆரம்பித்தார். 

இதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு இவரது அரசியற் பணி ஆரம்பமாகியது. 1972 ஆம் ஆண்டு இளைஞர் பேரவை பின் தமிழரசுக்கட்சி என அரசியலை ஆரம்பித்த இவர் இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தன் இறுதி மூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டதோடு மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை எனும் ஒரு ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தி தனது பேச்சாற்றலினாலும், உளத்தூய்மையினாலும் உலக அரங்கில் தாயக உண்மை நிலைமைகளை உரக்க உணர்த்தி வந்தார். 

திருமண பந்தத்தால் திருமலையோடு இணைந்திட்ட போதிலும் தூய்மையான தமிழ்த் தொண்டை நேர்மையாகவும், உண்மையாகவும் மக்களுக்கு மத்தியில் நின்று நீதிக்கு குரல் கொடுத்தவர் மாமனிதர் விக்னேஸ்வரன். 

பிரதேச வேறுபாட்டால் அன்று பிரிந்து கிடந்த தமிழ் இனத்தை ஒன்று சேர்த்த பெருமை தமிழ்த் தலைவர் தந்தை செல்வாவுக்கு எப்படி உண்டோ, அதே பாணியில் தான் மாமனிதர் விக்னேஸ்வரனும் தன்னை முழுவதுமாக தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து அரும்பணியாற்றியவர். 

இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். 

எமது மண் எமக்கே சொந்தம் என்ற உரிமைக்குரலை இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார். 

சிங்களப் பேரினவாதிகளின் கெடுபிடிச் செயல்கள் ஒருபுறமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மறுபுறமாக தினம் தினம் எத்தனையோ நெருக்குதல்களையும், சோதனைகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து நின்றபோதும் அஞ்சாநெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். 

திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இருந்து அந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெற்று, பலம்பெற்று வளர அயராது உழைத்தார். 

இவரது பெரும் பணி என்றும் பாரட்டுக்குரியது.'  குரை கடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமலையில் மக்கள் சார்ந்த, தேசநலன் சார்ந்த எந்நிகழ்வாயினும் விக்னேஸ்வரன் அதன் மூலகர்த்தாக்களில் ஒருவராய் இருப்பார் என்பது யாவரும் அறிந்ததே. 

பொங்குமலையில் இடம்பெற்ற வரலாறு காணாத பொங்கு தமிழ் எழுச்சியின் பிதாமகன் இந்த விக்னேஸ்வரன் என்றால் அது மிகையாகாது. 

திருமலையில் திடீரென முளைத்த புத்தர் சிலை விவகாரத்தில் கூடிய கவனம் செலுத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை துணிச்சலோடு எதிர்த்தவர் இந்த மாமனிதர். 

உலகம் போற்றும் தேசப்பற்றாளனாகவும் மக்கள் போற்றிய மக்கள் தொண்டனாகவும் வாழ்ந்த அன்னார் இவ்வுலகுள்ளவரை நினைவுகூரப்பட வேண்டியவர். 

எளிமையான தோற்றம் கொண்ட அவர் பேச்சுக்காய் மணிக்கணக்காக மக்கள் காலநிலையையும் பொருட்படுத்தாது, ஏன் நடு நிசி வரை காத்திருந்த நாட்கள் எத்தனை? எத்தனை? திருமலையென்றால் விக்னேஸ்வரன், விக்னேஸ்வரன் என்றால் திருமலை என்று இவரையும் திருமலையையும் பிரித்துப் பர்க்க முடியாத காலம் அன்னாரின் காலம். 

திருமலையின் விக்கினங்களை தீர்க்கும் ஈஸ்வரனாக விக்னேஸ்வரன் இருந்தது மட்டுமல்லாமல், பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், மக்களாலும் 'துயர் துடைக்கும் தூயோன்' என பாராட்டப்பட்டார் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. 

சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். 

-    நன்றி இணையம் - 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017