Flash News
கட்டுரை
ஜெனீவா மனித உரிமைச்சபை காரியாலயமும் அமைச்சர்களும்
[ Tuesday, 12 April 2016 ,11:44:54 ]

தமிழ் மக்கள் நன்மை பெற்றுவிடுவார்கள் என்ற கற்பனையும் படையினரை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலையும் விஞ்சிக் காணப்படும் நிலையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தமிழ்த் தலைவர்களை தொடர்ந்தும் ஏமாற்றப் போகின்றது.

-லியோனி மரியநாயகம்-

ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் காரியாலயம் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் அம்பலமாகும் என சிங்கள அரசியல் தலைவர்கள் சிலர் அச்சமடைந்துள்ளனர். அமைச்சர்கள் பலருக்கும் அதில் உடன்பாடு இல்லை எனத் தெரியவருகின்றது.

உள்விவகார தலையீடு

இதனால்தான் ஜெனீவா மனித உரிமைச் சபையின் காரியாலயத்தை அமைக்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தமது காரியாலயம் ஒன்றை அமைப்பது குறித்து ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்வாறு காரியாலயம் அமைப்பதன் மூலம் ஸ்ரீலங்காவின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை நேரடியாக தலையீடு செய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் என  கடும்போக்கு அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் மக்களின் பங்களிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததில் தமிழ் மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதால் தமிழர்களுக்கு சாதகமான சூழல் நிலவும் என்ற சிந்தனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலருக்கும் உள்ளது. ஏன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கும் இல்லாமல் இல்லை. இதனால் தான் ஜனாதிபதி இந்த விடயத்தில் மெத்தனப் போக்கைக் கையாள்கின்றார் என்றும் கூறலாம். மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் மக்கள் தொடர்பான பல செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளும் முறையில் இராணுவத்தின் பங்களிப்பு உள்ளது.

ஆனால், அமைச்சர்கள் பலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதோ அள்ளிக் கொடுத்து விடுவார் என்ற ஒரு கற்பனை உள்ளது. ஆனால் அவர்களின் அந்தக் கற்பனை சாத்தியப்படக் கூடியதல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக புறக்கணித்தார்.  ஆனால் நல்லாட்சி எனக் கூறும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏதோ செய்வது போன்ற தோற்றப்பாட்டை காண்பிக்கின்றதே தவிர முழுமனதோடு எதையும் செய்யவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவ நிர்வாகம் இருப்பதே அதற்கு பிரதான காரணம் எனலாம்.

இராணுவத்தின் அபகரிப்பு  

இருந்தாலும் சில விடயங்களை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்கின்றது. குறிப்பாக வடபகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் தற்போது படிப்படியாக விடுவிக்கப்படுகின்றன. ஆனாலும் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் செய்யப்பட்ட சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கான உடன்படிக்கையை அப்படியே அமுல்படுத்தியிருக்கின்றார். அதற்காக அந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களின் 500 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்காவில் ஜெனீவா காரியாலயம் அமைக்கப்பட்டால் அது தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு விடயமாக அமையும் என்று பலர் கருதினாலும் அது எந்தளவு தூரத்துக்கு சாதகமாக அமையும் என்பது சந்தேகமே. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர், யுத்தத்தினால் எவற்றையெல்லாம் இழந்தார்கள் என்பது அப்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த தற்போதைய மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தார்.

மைத்திரி அரசாங்கம் செய்தது என்ன?

ஆகவே, பாதிக்கப்பட்ட நிலையிலும் எதிர்பார்ப்புக்களுடன் நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு ஆட்சிப் பீடமேறி ஒருவருடம் கடந்த நிலையில், மைத்திரி அரசாங்கம் என்ன செய்தது என்பதை தமிழ் மக்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஆனால், இந்த வருட இறுதிக்குள் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வரமுடியும் என அரசாங்கம் கூறுகின்றது. எனினும் இதன் உண்மைத் தன்மை என்ன?

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்ட தமிழ்த் தலைமைகளின் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியமை அனைவரும் அறிந்த விடயம். இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கவோ தண்டிக்கவோ முடியாது என்ற மைத்திரியின் கருத்தும், கடந்த ஆட்சியில் தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பலரை தெரிந்திருந்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளன.

மைத்திரியும் விசாரணைக்கு உள்ளாவார்?

அத்தோடு, போர்க்குற்றம், மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டு விசாரணைகள், நீதிபதிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும், உள்நாட்டு நீதிபதிகளினால் உள்நாட்டில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதன் நோக்கம் என்னவென ஆராய்ந்து பார்க்கும்போது, போர்க்குற்றம், மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டு விசாரணைகள் இடம்பெற்றால் கடந்த ஆட்சியில் அங்கம் வகித்தவர் என்ற ரீதியில் மைத்திரியும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்

இதனைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஆட்சியில் தவறுகள் இடம்பெற்றால் அதில் மைத்திரிக்கும் பங்கு உண்டு என பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அதேவேளை கடந்த ஆட்சியாளர்கள் சீனாவுடன் உறவுகளை பேணியமைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைமைகள் நல்லாட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்த குழு ஜெனீவாவுக்கு

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், வெள்ளைவான் கலாசாரம் மற்றும் உண்மைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு அச்சுறுத்தல் போன்றவற்றை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்வதற்கு முற்பட்டபோது, ஜெனீவா செல்பவர்கள் தேசத் துரோகிகள், அவர்களை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் என கடந்த ஆட்சியாளர்கள் கூறியதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்பதால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் நடத்துவதற்கு உடன்படிக்கையைச் செய்துகொண்டு வழிகாட்டியவர் மஹிந்த ராஜபக்ச என்ற குற்றச்சாட்டையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாமல் இனப் பிரச்சினைக்கான   அரசியல் தீர்வு குறித்து எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் ஸ்ரீலங்காவில் ஜெனீவா காரியாலயம் அமைக்கப்படுவதை, வடக்கு, கிழக்கு தமிழர்கள் உள்ளிட்ட ஈழத் தமிழர்களும் விரும்புகின்றனர். ஆனால் அரசாங்கத்தின் அனுமதி மறுப்பையும் மீறி ஐ.நா அந்த அலுவலகத்தை அமைக்குமா?

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017