Flash News
கட்டுரை
மட்டு. போரதீவுப்பற்றில் பண்ணையாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்
[ Monday, 2 May 2016 ,08:06:02 ]

அபிவிருத்தி என்பது சகல துறைகளையும் தொட்டுச்செல்ல வேண்டும். அப்போது தான் தன்னிறைவான வெளிப்பாடுகள் மேலாங்கி வரும் என்பது திண்மமாகும்.

- மட்டு. சக்திவேல் -

தற்போதைய, கால கட்டத்தில் பால் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கின்ற பசு, மற்றும் எருமை போன்ற கறவை இனங்களை வைத்து வாழ்வாதாரம் மேற்கொண்டுவரும் பண்ணையாளர்களின் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினைகள் குறித்தே இந்தக் கட்டுரை பிரதிபலிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியான படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பகுதியிலிருந்து கறவை இனங்களை வளர்த்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டுவரும் கால்நடைப் பண்ணையாளர்கள் மத்தியில் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படாத நிலையில் இருந்து வருகின்றன.

தமது ஜீவனோபாயத்தை மென்மேலும் விருத்தி செய்யவதற்கு பல்வேறுபட்ட தடைகள் காரணமாக அமைவதாக அப்பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் ஐபிசி தமிழ் செய்திப் பிரிவுக்கு கவலை தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குட்பட்ட அப்பிரதேசத்தில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் இப்பிரதேசத்திலுள்ள பசு மற்றும் எருமை மாடுகளிலிருந்து சராசரி மாதாந்தம் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதேவேளை ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 830 க்கும் அதிகமான கோழி முட்டைகளும் பெறப்படுகின்றன.


மிகவும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 772 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கால் நடைகளையும் 750 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோழிகளையும் வளர்த்து தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்திலுள்ள பண்ணையாளர்களின் கால்நடைகள் எல்லைப் பகுதியாகக் காணப்படும் திவுலானை, கெவுளியாமடு, 19 ஆம் கட்டை, வக்கியெல்ல, புழுக்குணாவை, கச்சக்கொடி, சுவாமிமலை, மங்களகம போன்ற பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு செல்லும் கால்நடைகள் மீது, இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு சாகடிப்பதும் கால்நடைகளின் மீது கன ரக வாகனங்களால் மோதி சாகடிப்பதுமாக தொடர்ந்து கால்நடைகள் காணாமல் போவதுமாகவே இருந்து வருகின்றன.

மேய்ச்சல் தரைப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் அத்துமீறி குடியேற்றங்களை அமைத்து வருவதனால் கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்குரிய நிலப்பரப்புக்கள் குறைவடைந்து கொண்டும் வருகின்றன.

இது ஒரு புறமிருக்க மேய்ச்சல் தரைப் பகுதியில், காட்டு யானைகள் உள் நுளைவதால் கால்நடை மேய்ப்பாளர்கள் பலர், தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதும் வேதனைக்குரிய விடயம்.  

கால்நடை வளர்ப்பாளர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவரும் வேளையில், அவர்களது வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் பிரதான வீதிகள் இன்றும் சீர்செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவது மற்றுமொரு தடைக்கல்லாக அமைந்துள்ளது.


இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு 'உண்ணிக்காய்ச்சல், குரை நோய், மடியழற்சி, பால்க்காய்சல் போன்ற பல நோய்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களுக்கு தும்பங்கேணியில் அமைந்துள்ள அமுதசுபி பால் பதனிடும் நிலையத்தில் சிறியதொரு மருந்தகத்தில் பண்ணையாளர்கள் மருந்துகளைக் கொள்வனவு செய்து வருகின்றார்கள். இந்த மருந்தகத்தை விஸ்தீரணமாக்கி சகல வசதிகளுடனான மருந்துக் கடையாக மாற்றும் பட்சத்தில், இப்பிரதேசத்திலுள்ள அனைத்து கால்நடை பண்ணையாளர்களும் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்பாக அமைந்து விடும் என அப்பிரதேச பண்ணையாளர்கள் அங்கலாய்கின்றனர்.

இந்த நிலையில் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரதேசமான திவுலானைக் குளம் அமைந்துள்ள பகுதியில் அவர்களது கால்நடைகளை வளர்ந்து வருகின்றார்கள். ஆனால் இதுவரை காலமும் இல்லாத நடைமுறையை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் கால்நடைகளை வளர்க்க வேண்டாம் என கால் நடை வளர்ப்பாளர்ப்பாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்ற நிலையில், தமது கால்நடைகளை பிடித்து வைப்பதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சிறுபோகம், பெரும்போகம் என இரண்டு போகங்களில் வருடாந்தம் வேளாண்மை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வயல் அமைந்துள்ள பகுதியில் கால்நடைகள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் இன்மையால் மிக நீண்ட காலமாகவிருந்து திவுலானைக் குளம் அண்டிய காட்டுக் பகுதியிலே இப்பிரதேச பண்ணையாளர்கள் அவர்களது கால்நடைகளை மேய்த்து வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றார்கள்.

“எமது அப்பா, அப்பப்பா, பாட்டன், காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக திவுலானைக் குளம் பகுதியில் மாடுகளை வளர்ந்து வருகின்றோம். ஆனால் தற்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகள், எம்மை அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். காட்டிலிருந்து இறந்து கிடக்கும் மரங்களைப் பொறுக்கித்தான் எமது கால் நடைகளுக்குரிய பண்ணைகளை அமைக்கின்றோம். இதுவரை காலமும் எந்தவித மரத்தையோ அல்லது காடுகளையோ அழித்ததில்லை. எம்மீது வீண் பழிகளைச் சுமத்தி எம்மை வெளியேற்றுகின்றனர்” என கால்நடைகளை வளர்த்துவரும் க.ருத்திரன் தெரிவிக்கின்றார்.


“எமது மூதாதையர் காலமிருந்து கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். இங்கேயும் எம்மை நிற்கவிடாமல் துரத்தினால் நாம் எங்கு போய் தொழில் புரிவது” என கால்நடைகளை வளர்த்துவரும் த.ரூபான் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

மேய்ச்சல்தரை தொடர்பான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்லாது, கிழக்கு மாகாணம் முழுவதும் இருக்கின்ற பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அதேவேளை பாரம்பரிய மேய்ச்சல் தரைகளில் சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் பயிர்ச்செய்கைகளும் இடம்பெறுகின்றன.

மட்டக்களப்பினைப் பொறுத்தவரையில், அம்பாறை மாட்டத்தைச் சேர்ந்த சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக வன பரிபாலன திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேச பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்து தயிர் உற்பத்தி செய்து வருகின்றோம். எதிர்காலத்தில் யோகட் மற்றும் பால்டொபி போன்றவற்றையும் உற்பத்தி செய்யவுள்ளோம். பண்ணையாளர்கள் மத்தியில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் தீர்த்து வைப்பதற்கு எமது சங்கம் தற்போது திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எமது சங்கத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணையாளர்களும், அவர்களுடைய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் இருக்கின்றன. சுமார் 40 வருட காலமாக திவுலானைக் குளம் அமைந்துள்ள பிரதேசத்தில் கால்நடைகள் வளர்த்து வருவது வழமை. மிக அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா பிரிவினர் இப்பகுதியில் கால் நடைகளை வைத்திருக்க முடியாது என சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றமை வேதனையாகவுள்ளது.

நீர் வசதி அமைந்துள்ள இப் பிரதேசத்தில்தான் கால்நடைகள் வளர்ப்பது என்பது இலகுவாக அமையும். ஆனால் ஏனைய இடங்களில் நீரின்றி, போதிய உணவின்றி பல கால்நடைகள் இறந்துள்ளன. எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அருவருக்கத் தக்கதாக அமைந்துள்ளன.


தற்போதைய அரசு பால் உற்பத்தியை அதிரிகரித்து, பாலுக்கான விலையை அதிகரித்துள்ளன. இந்த நிலையிலும் கால்நடைகளை வளர்ப்பதற்குத் தடை போடுகின்றமை வேதனையளிக்கின்றது. இப் பிரதேசத்திலுள்ள காடுகளை அழிப்பதோ அல்லது மரங்களை வெட்டும் செயற்பாடுகளில் எமது பண்ணையாளர்கள் ஈடுவடுவதில்லை.

கடந்த யுத்த காலத்தில், எந்தவித தடைகளும் இன்றி இப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வந்த தமக்கு, தற்போது அதுவொரு பாரிய சவாலாக மாறியுள்ளது. எனவே இந்த விடயத்தில் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும், தலையிட்டு, தமக்கு தீர்க்கமானதொரு முடிவைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கின்றார் போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ. சிவபாதம்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே இந்த விடயத்தை மிக விரைவில் சம்மந்தமப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராசா குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில பால் உற்பத்தி பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றமையால் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் போரதீவுப்பற்று பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என்பதோடு, கடந்த யுத்த காலத்தில் துவண்டு போயுள்ள படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்விலும் ஒளியூட்ட அனைவரும் திடசங்கற்கம் பூண வேண்டும் என்பதையே எதிர்பார்த்து நிற்கின்றனர்.


சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016