Flash News
கட்டுரை
மல்வத்தை வைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்படுமா?
[ Friday, 13 May 2016 ,11:20:45 ]

மிகவும் மகத்தான சேவையாக மதிக்கப்படும் சுகாதார சேவை, உரிய முறையில் மக்களை சென்றடையவில்லை எனின், அதனால் எந்தப் பயனும் இல்லை. ஆரம்பத்தில் வைத்தியசாலை ஒன்றை அமைக்கும் போது, அதனால் அனைத்து மக்களும் பயனடைவார்கள் என்ற நம்பிக்கையிலே வைத்தியசாலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மாறுபட்ட முறையில் வைத்தியசாலைகள் இருக்குமாக இருந்தால் அப்பிரதேச மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

- ஏரூரான்-

அந்த வகையிலே தான் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மல்வத்தை கிராமம் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களையும் உள்ளடக்கிய 15 குக்கிராமங்களைக் கொண்ட பரந்தவொரு பிரதேசமாகும். இங்குள்ள ஆரம்ப வைத்தியசாலையில் தமக்கான சிறந்த சேவையை பெற்றுக்கொள்வதில் பல சிக்கல்களை காணப்படுகின்றதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வைத்தியசாலை குறித்து, அங்குள்ள மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்துகையில்,

“மல்வத்தை வைத்தியசாலையானது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அப்போதைய சம்மாந்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாப். எம்.ஏ. அப்துல் மஜீட் எம்.ஏ அவர்களினால் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இவ்வைத்தியசாலையானது 15 குக் கிராமங்களுக்கு தன்னாலான வைத்திய சேவையை வழங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மல்வத்தை, புதுநகரம், கணபதிபுரம், மல்லிகைத்தீவு, திருவள்ளுவர்புரம், தம்பிநாயகபுரம், வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி ஆகிய எட்டு தமிழ்க் கிராமங்களையும் றுகுணுகம, குமுதுகம, புத்தங்கல, சடையந்தலாவ ஆகிய நான்கு சிங்களக் கிராமங்களையும் மஜீத்புரம், இஸ்மாயில் புரம், உறிஸ்ணாபுரம் ஆகிய மூன்று முஸ்லிம் கிராமங்களையும் உள்ளடக்கியதாகவே இவ்வைத்தியசாலையின் சேவைகள் நீண்டு கொண்டு செல்கின்றன.

இவ்வைத்தியசாலையில் நூற்றுக்கணக்கான நோயாளர்களுக்கான சிகிச்சைகளும், தாய், சேய் பராமரிப்பு சிகிச்சைகளும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு ஆனி மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற வன்செயல் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், வேறு இடங்களில் தங்கியிருந்து பின்னர் மீளவும் தங்களது கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

1998 ஆம் ஆண்டு மல்வத்தையை மாதிரிக்கிராமமாக அப்போதைய மறைந்த புனர்வாழ்வு அமைச்சராக இருந்த ஜனாப் எம்.எச்.எம். அஸ்ரப் பிரகடனப்படுத்தி, இவ்வைத்தியசாலைக்கு தேவையான பிரசவ விடுதி, வைத்திய அதிகாரிகளுக்கான விடுதி, தாதியர்களுக்கான விடுதி, நோயாளர் சிகிச்சை நிலையம் என்பன அவரது காலத்தில் அமைக்கப்பட்டு இவ்வைத்தியசாலை புதுப்பொழிவு கண்டது.

இவரது அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து, இவ்வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. தயாரெத்தின 2003 ஆம் ஆண்டு இவ்வைத்தியசாலையை மகப்பேற்று வைத்தியசாலையாக ஆரம்பித்து இரண்டு வைத்திய அதிகாரிகளும், ஒரு மருந்தாளரும், இரத்தப் பரிசோதகர் ஒருவரும், மருத்துவ தாதியர்கள் நான்கு பேரும், ஊழியர்கள் 11 பேருமாக மொத்தம் 19 பேர் இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிவந்தார்கள். இவரது காலத்திலே இவ்வைத்தியசாலையின் நலன் கருதியும் மக்களின் நலன்கருதியும் அம்பியுலன்ஸ் வண்டியும் வழங்கப்பட்டிருந்தது.