Flash News
கட்டுரை
பூநகரியில் மக்கள் மீண்டும் குடியேறுவார்களா; விவசாயம் வளம்பெறுமா?
[ Saturday, 28 May 2016 ,08:55:00 ]

பூநகரி குளம் மற்றும் உவர்நீர் அணைக்கட்டு, நெற்களஞ்சியசாலை ஆகியவற்றை புனரமைத்துக் கொடுப்பதால் எமது கிராமம் மீளப் புத்துயிர் பெறும் என்கிறார் விவசாயியான இராமபிள்ளை. பூநகரி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வாடியடி கிராமம், நீர் வளம் மற்றும் நில வளம் கொண்ட அழகிய கிராமம். இந்தக் கிராமத்தில் சிறுபோகம், பெரும் போகம் என காலபோக அறுவடை நிகழ்ந்து வருகின்றது. 

-ஜெ. றொமி ஜோதினி -

அதாவது, செப்டெம்பர் தொடக்கம் ஜனவரி வரையிலான காலங்களில் பெய்யும் மழை, இக்கிராம மக்களின் பெரும் போக நெல் அறுவடைக்கு பயன்படுகின்றது. 

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, வங்கிகளில் வைப்புக்கள் அதிகரிப்பதுடன், உணவு, கல்வி மற்றும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு பெரும்போக நெற்செய்கை இக்கிராம மக்களிற்கான விளைச்சலைக் கொடுத்து வந்தது. 

ஆனால், இன்று கால்நடைகளின் உணவுக்குக்கூட புல் வளர்வதற்கு தகுதியற்ற மண்ணாக வாடியடி கிராம் உள்ளிட்ட பூநகரியின் வடக்கு பகுதியிலுள்ள மண் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார் விவசாயி இராமபிள்ளை.

“1964 ஆம் ஆண்டு, பூநகரி பிரதேசத்தின் இரு முனைகளிலும் கொண்டல் மற்றும் கச்சான் காற்று வீசியதனால், பூநகரி வடக்கு பிரதேசத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலப்பரப்புக்களில் கடல் உப்புநீர் புகுந்து மண்ணின் அனைத்து வளங்களையும் அள்ளிச் சென்றது. 

பூநகரி மண் வளங்கள் அனைத்தையும் இழந்ததுடன், மக்களை அவலத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இக்கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களிற்கு முகம்கொடுத்து வந்தனர். 

இக்கிராம மக்கள் தமது நிலங்களில் நெற்செய்கையை மேற்கொண்ட நிலையில், மண்ணின் தரமின்மை காரணமாக நெற்செய்கை விளைச்சலைக் கொடுக்கவில்லை. விவசாயிகள் பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பஞ்சம் பிழைப்பவர்களாக செல்லத் தொடங்கினார்கள். 

பூநகரி மண், 88 வீத முளைதிறன் வளம்மிக்க மண்ணாக அரசாங்கத்தினால் அன்றொரு நாள் அடையாளம் காணப்பட்டது. ஆனால் இன்று கடல் நீர் உட்புகுந்தமையினால், நன்னிலம் வளமிழந்து பாழடைந்த நிலமாக மாறியுள்ளது என கவலையுடன் தெரிவித்தார் விவசாயி இராமபிள்ளை.

இக்கிராம மக்கள் தற்பொழுது தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாது, பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, உவர்நீர் உட்புகாதவாறு அணைக்கட்டை அமைத்து தருமாறு இக்கிராம மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தமது விவசாய நிலங்களில் உப்பு நீர் கலந்துள்ளமையினால், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கையைக் கைவிட்டு, மழையை நம்பி காலபோக பயிர்ச்செய்கையை மாத்திரமே மேற்கொள்வதாகவும் விவசாயியான கந்தையா குறிப்பிட்டார். 

செப்டெம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் காலபோக பயிர்ச்செய்கையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே அந்த ஆண்டிற்கான அனைத்துச் செலவுகளையும் திட்டமிட வேண்டும். ஆனாலும்,  சிறு குளங்களைக் கொண்டு சிறுபோக பயிர்ச்செய்யை மேற்கொண்டு தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும், அவ்வாறு கிடைக்கும் வருமானத்தின் மூலம் தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகள், பிள்ளைகளின் கல்வி, மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடியாதுள்ளதாகவும் நாட்கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கந்தையா கவலை தெரிவித்தார். 

1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு பின்னர், பூநகரி வடக்கு பிரதேசத்திலுள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய காணியில், கடலுக்கு அண்மித்துள்ள 7000 ஏக்கர் காணி, உவர் நீராக மாறியுள்ளது. எஞ்சிய காணிகளில் விளைச்சல் பற்றாக்குறையாக உள்ளதாக பூநகரி கொல்லகுறிச்சி கமக்கார அமைப்பின் தலைவர் சின்னத்துரை யோகநாதன் தெரிவித்தார். 

பூநகரி மண் தொடர்ச்சியாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பூநகரி வடக்கு பிரதேசத்திற்கான கொக்குடையான் மாலாப்பு (பூநகரி குளம்) என்ற நீர்பாசன குளத்தினை அரசாங்கம் புனரமைத்து தரவேண்டும்.

இதன்மூலம் பூநகரியிலிருந்து வெளியேறிய மக்கள் மீளக்குடியேறுவார்கள். குறித்த குளமானது, 17 கிலோ மீற்றர் உள்வாங்கப்பட்டு 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. குறித்த குளத்தை புனரமைப்பதன் மூலம் கிணற்று நீர் நல்ல நீராவதுடன், சவரடைந்த விவசாய காணிகள் பசுமையடையும்” என குறிப்பிடுகின்றார்.

விவசாய காணிகள் பயிர்செய்ய முடியாமல் போனதனால், 600 குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். முன்னைய காலங்களில் மொட்டைக்கறுப்பன் மற்றும் பச்சப்பெருமாள் போன்ற நெல் இனங்கள் அழிவடையாது இந்தக் கிராம நிலங்களையும் மக்களையும் பாதுகாத்தது. 

கடலுக்கு அருகிலுள்ள பூநகரிக்கு உப்புக் காற்று வீசுவதனால், ஆஸ்துமா போன்ற நோய்கள் பீடிக்காமையினால் அதிக வயதுடைய மக்கள் வாழ்ந்த வரலாறு இந்தக் கிராமத்தையே சாரும். இயற்கை பசளைகளைக் கொண்டு நெல் பயிரிடப்படுவதனால், ஐந்து மாத நெல் இனம் பூநகரியில் மாத்திரமே பயிரிடப்பட்டது.


எனவே, கறுக்காய்த்தீவு, செட்டியகுறிச்சி, கொல்லகுறிச்சி, ஞானிமடம் ஆகிய பகுதிகளில் மொட்டைக்கறுப்பன் மற்றும் பச்சைப்பெருமாள் நெல் இனங்களைப் பயிரிடப்படுவதற்கு கொக்குடையான் மாலாப்பு என்ற நீர்பாசனப் குளத்தை அரசாங்கம் புனரமைத்து தரவேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இதன்மூலம் பூநகரி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, விவசாய குடும்பங்களை முன்னேற்ற அணைக்கட்டுக்களை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டும், அரச அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு பலனாக அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஆனாலும், பூநகரி விவசாயிகள் என்ன பாவம் செய்தார்களோ, அந்த கணமே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு நல்லாட்சி எனும் புதிய அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியது. இதனால் குறித்த பணிகள் தற்போது கைவிடப்பட்டது. தற்பொழுது, இந்தப் பணிகளை வடமாகாண சபை முன்னெடுத்து வருகின்றது. 

இந்த நிலையில் மட்டுவில்நாடு தெற்கு கமக்கார அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் குமார குலசிங்கம் தெரிவிக்கையில்,

“எமது பகுதிக்குள் உப்புநீர் வந்தமையினால் கடந்த 5, 6 வருடங்களில் விளைச்சல் குறைவடைந்திருந்தது. எனினும் கடற்கரையில் அணைக்கட்டு அமைக்கும் பணிகள் இடம்பெறுவதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு அரசாங்கம் எந்தவொரு நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை. 

மேலும், கடல்நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புகுவதை தடுப்பதற்கான உவர் நீர் அணைக்கட்டுக்களை அமைக்கும் பணிகளை நீர்ப்பாசன திணைக்களம் பூநகரி நல்லூர் பகுதியில் ஆரம்பித்தது. 

எனினும் உரிய திட்டமிடல் இல்லாமையினால் தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்து கடல்நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புகுவதாக மட்டுவில்நாடு தெற்கு கமக்கார அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் குமாரகுலசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, பூநகரி மன்னார் வீதியில் மண்டைக்கல்லாறு என்ற ஆறும் பூநகரி பந்தன் வீதியில் குடமுறுட்டியாறு என்ற இரு ஆறுகள் காணப்படுகின்றன. இந்த இரு ஆறுகளின் ஊடகவே உப்புநீர் அதிகளவாக பூநகரி பிரதேசதத்திற்கு வருவதுடன் மழை நீர் கடலுக்கு செல்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் மண்டைக்கல்லாறு மற்றும் குடமுறுட்டியாறு ஆகிய இரண்டையும் இணைக்கும் பகுதியிலேயே பூநகரி குளம் காணப்படுகின்றது.

இந்த குளத்தை புனரமைத்து மழை நீரை சேகரித்து வைப்பதன் மூலம், பூநகரி வடக்கு பிரதேசத்திலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளில் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு சிறுபோக நெற்செய்கைக்கு தண்ணீர் வழங்க முடியும் என பூநகரி கமநல சேவைகள் திணைக்கள தலைவர் இராமபிள்ளை செல்வராசா தெரிவித்தார்.

அத்துடன், பூநகரி குளத்தினை ஆழப்படுத்தும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளமையினால் விரைவில் அதனை புனரமைத்து தரவேண்டும்.  கடற்கரை பகுதியிலுள்ள உப்பு நீர் அணைக்கட்டுக்கள் 22.10.1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூநகரி வலம்புரி இராணுவ நடவடிக்கையினால் அணைக்கட்டுக்கள் உடைக்கப்பட்டு உப்பு நீர் உட்புகுவதுடன் நல்ல நீர் கடலுக்குச் செல்கின்றது.


இதனால் நெல் பயிர் செய்யப்படும் காணிகள் உவரடைந்தமையினால் பயிர்கள் முளைத்து கதிர்வரும் பருவத்தில் கருகிச் செல்கின்றன. இதனைத் தடுக்க கடற்கரை உப்பு நீர் அணைக்கட்டுக்கள் புனரமைக்கப்படுவதுடன் பூநகரி வடக்கு பகுதியிலுள்ள சிறு குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு மேலதிக நீர் வயல்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

தற்போது பூநகரியில் 7 ஆயிரம் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மழையை நம்பி மாத்திரம் விவசாயம் செய்யும் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பூநகரி குளம் புனரமைப்பு மற்றும் உவர்நீர் அணைக்கட்டுக்கள் அமைக்கப்படுகின்றமை தொடர்பாக கிளிநொச்சி நீரியல்வள திணைக்கள பணிப்பாளர் சுதாகர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உவர் நீர் அணைக்கட்டுக்களை அமைத்து வருவதாக தெரிவித்தார்.

எனினும் பூநகரி கடல் சூழ்ந்த நிலப்பரப்பு என்பதனால் உவர்நீரின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றதனால், இதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சரை சந்தித்து கலந்துரையாட முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை. 

இவ்வாறான ஒரு நிலையில் பூநகரி விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஒளிமயமாக்குவது வடமாகாண விவசாய அமைச்சின் கைகளிலும் அரசாங்கத்திடமுமே காணப்படுகின்றது.

“வரப்பு உயர நீர் உயரும், 

நீர் உயர நெல் உயரும்,

நெல் உயர குடி உயரும், 

குடி உயர கோன் உயரும்,

கோன் உயர நாடு உயரும்” என்ற ஔவயாரின் பாடல் வரிகளுக்கு அமைய பூநகரி மண் வளத்தை மேம்படுத்த பூநகரி குளத்தினையும், உவர்நீர் அணைக்கட்டையும் அமைக்க வேண்டும் என்பதே பூநகரி விவசாயிகளினது உருக்கமான வேண்டுகோள். 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017