Flash News
கட்டுரை
இழுபறியில் உள்ள சின்னடம்பன் காணியும் பூந்தோட்டம் முகாம் மக்களின் குடியேற்றமும்
[ Monday, 30 May 2016 ,11:32:23 ]

யுத்தத்தின் பாதிப்புகள் இன்றுவரை தீரவில்லை என்பதற்கு பல சான்றுகள் வடக்கு கிழக்கில் புரையோடிப்போய் உள்ளது. அங்கங்களை இழந்தவர்களும், கூரையற்ற வீடுகளும், ஆங்காங்கே குண்டின் துளைகளை தாங்கி நிற்கும் கட்டிடங்களும் இதற்கு சாட்சியாக இருக்கும்போது இடப்பெயர்வுகளால் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்ட பலரும் இன்றும் அங்கேயே மூன்று தலைமுறை கடந்தும் வாழ்வது வேதனைக்குரியதே.

இவ்வாறான நிலை வவுனியா மாவட்டத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றால் மறுக்க முடியாதது.

- அகரன் -

1995 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தியா உட்பட நாட்டின் பல இடங்களுக்கும் சென்று ஆங்காங்கே வசித்து வந்த நிலையிலேயே, அகதிகளின் நல்வாழ்வு கருதி என்ற தொனியில் பூந்தோட்டம் பகுதியில் நலன்புரி நிலையமொன்று அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த முகாம் ஆரம்பங்களில் சிறப்பாக பரிபாலிக்கப்பட்ட போதிலும் நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கலாசார சீரழிவுகளுக்கும் கல்வியில் பின்தங்கிய பிள்ளைகள் மற்றும் போசாக்கு குறைந்த பிள்ளைகள் உருவாகுவதற்கும் காரணமாக அமையத்தொடங்கியது.

இந்நிலையில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இறுதியாக வசித்துவரும் 105 குடும்பங்களும் தம்மை வேறு பிரதேசத்தில் குடியேற்றுமாறு குரல் கொடுக்கத்தொடங்கியிருந்தனர். தமது அன்றாட கூலித்தொழில் பாதிப்படையாக வகையில் வவுனியா மாவட்டத்தில் குடியேற்றும் போது தமது வாழ்வை தாமே நிர்ணயிப்போம் என்று உரக்க குரல் எழுப்பியிருந்தனர்.

இவர்களுக்காக ஊடகங்கள் மாத்திரமே துணைநின்றன. எனினும் அரச அதிகாரிகளுக்கு அவை செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த நிலையில் முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் மற்றும் நிவாரணங்களும் நிறுத்தப்பட்டன.

மின்சாரம் நிறுத்தப்பட்டமையினால் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற முயற்சித்தனர். இதனால் தண்டப்பணங்களையும் செலுத்தினர். இவ்வாறான இன்னல்களுடன் மூன்று தலைமுறைகளை முகாம் வாழ்வில் கண்டுவிட்ட இந்த மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை என்ற அமைப்பு வீடுகளை அமைத்துக்கொடுக்க முன்வந்தது.


ந் நிலையிலேயே இவ் வீடுகளை அமைப்பதற்கு காணி எங்கு வழங்குவது என்ற நிலை அரச அதிகரிகளுக்கு ஏற்பட்டிருந்தது. முகாமில் வாழும் மக்கள் கோருவது போன்று தொழில் பாதிப்படையாத வண்ணம் நகருக்கு அமையாக வழங்குவதாக இருந்தால் அதற்கான அரச காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

எனவே எங்கு வழங்குவது என்பது பிரச்சினையாக காணப்பட்டபோதே வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சின்னடம்பன் கிராம சேவகர் பிரிவில் உள்ள இராசபுரம் கிராமத்தில் காடாக உள்ள காணிகளை வழங்கலாம் என பிரதேச செயலாளரால் அடையாளம் காட்டப்பட்டது.

எனினும் இது தூரமான பிரதேசமாக உள்ளது எமக்கு சாதகம் இல்லை என முகாமில் வசித்த மக்கள் சிலர் போர்க்கொடி தூக்கியபோதிலும் பலர் அங்கு வசிப்பதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், சீரான முறையில் அங்கு காணிகளை வழங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் பிரசன்னத்துடன் விடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

எனினும் இராசபுரம் காணிகள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த பிரதேசமாக சுட்டிக்காட்டப்பட்டாலும் அதற்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்மை மற்றும் கடந்த பல வருடங்களாக அம்மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்தல் மற்றும் நாட்டின் நிலைகாரணமாக இந்தியா போன்ற பிரதேசங்களுக்கு சென்றமையினால் இப்பகுதி பெரும் காடுகளாக காட்சியளித்திருந்தது.

எனவே இக்காணிகளுக்கு எவரும் உரிமை கோரி வராததால் செவ்வனே இப்பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 வீடுகள் வரை அங்கு அமைக்கப்பட்டன. எனினும் இம் மக்களை முழுமையாக குடியேற்றுவதற்கான வீடுகளை அமைக்க இக் காணிகள் போதுமானதாக இல்லாமையினால் வீடுகளை அமைத்து வரும் ஞானம் அறக்கட்டளை வேறு காணியை அண்மையாகவே தருமாறு கோரவே பிரதேச செயலாளரினால் இராசபுரத்திற்கு அண்மையில் இருந்த காணியொன்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அக்காணி விடயமே பூதாகாரமான பிரச்சினையை உருவாக்கியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. ஏனெனில் தற்போது அடையாளம் காட்டப்பட்டுள்ள காணி பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தியுள்ளது.

குறிப்பாக சின்னடம்பன் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்டு காணப்படும் இக் காணி 1975 ஆம் ஆண்டு 26 பேருக்கு 3 ஏக்கர் திட்டமாக விவசாய செய்கைக்காக வழங்கப்பட்டிருந்தது.

இக்காணிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் சன்னாசிபரந்தன் கிராம சேவகர் பிரிவில் முடிக்குரிய காணி ஆட்சி செய்வதற்காக வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காணிகளின் பத்திரங்கள் தற்போது 4 பேரிடம் மாத்திரமே காணப்பட்டாலும் ஏனையவர்களின் பத்திரங்கள் யுத்தகாலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் காரணமாக முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சின்னடம்பன், மதியாமடு, விஞ்ஞானகுளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த இக்காணிகள் செங்கட்படைக்குளத்தின் கீழான வயல் நிலங்களாக வழங்கப்பட்டு செய்கை பண்ணப்பட்டு வந்திருந்தது. எனினும் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமலும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் போதிய வாழ்வாதாரமும் அற்றுக்காணப்பட்ட அப்பகுதி மக்களுக்கு அக்காணிகளை துப்புரவு செய்து மீண்டும் செய்கை பண்ண போதுமான பணமின்மையாலும் செங்கட்படை குளம் உடைப்பெடுத்து மீள் அமைக்கப்படாமையினாலும் இம் மக்கள் காணிகளை தற்காலிகமாக பயன்படுத்தாமல் விட்டிருந்தனர். இதன் காரணமாக இக்காணிகள் பற்றைக்காடுகளாக தற்போது காட்சியளிக்கின்றது.

எனினும் சின்னடம்பன்குளம், விஞ்ஞானகுளம், கரப்புக்குத்திகுளம், முறியாகுளம், சடவன்குளம், பெரியஅடம்பன்குளம், பச்சைக்கொடிக்குளம் என்பவற்றுடன் 8 ஆவது குளமாக காணப்படும் செங்கட்படைக்குளம் திருத்தம் செய்யப்பட்டாலாவது காணிகளை துப்பரவு செய்து நெற்செய்கையில் ஈடுபடலாம் என்றிருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில் இக்காணிகள் பூந்தோட்டம் நலன்புரி நிலைத்தில் வசிக்கும் மக்களை குடியேற்றுவதற்காக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சின்னடம்பன் கிராமத்தில் நிரந்தரமாக வசிக்கும் 170 குடும்பங்கள், கடந்த யுத்தகாலத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள் மாத்திரமின்றி 10 பேரை மாவீரர்களாகவும் 25 பேரை யுத்தத்தில் பலிகொடுத்தும் 25 ஊனமுற்றவர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள கிராமமாக காட்சியளிப்பதுடன் 4 உழவு இயந்திரங்களை முள்ளிவாய்க்காலில் விட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள இம் மக்களில் 50 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இன்னும் தேவையாகவே உள்ளது.

இது மாத்திரமின்றி வன இலாகாவினர் இக் கிராமத்தை மாதிரிக் கிராமமாக உள்வாங்கியுள்ளதுடன் இக்கிராமத்தவர்களில் 10 பேருக்கு வாகன அனுமதிப்பத்திரங்களும், 6 குடும்பங்களுக்க தேனி வளர்க்கும் கூடுகளும், 5 பேருக்கு மாடுகளும், 4 பேருக்கு தையல் இயந்திரங்களும் 10 பேருக்கு கோழிக்குஞ்சுகளும் வழங்கி மாரிதி கிராமமாக உருவாக்கியுள்ள இக்கிராமத்தில் காடழிப்பைத் தடுப்பதற்கு இம் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே இக்கிராம சேவகர் பிரிவில் அறக்கட்டளையினால் அரச உதவியோடு இப் புதிய விட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இவ் அறக்கட்டளையினால் நிரந்தரமாக வசிக்கும் தமது இன்னல்களுக்கு ஏதுபலனும் இல்லாமல் தற்போது தமது காணிகளையும் அபகரிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என போர்க்கொடி உயர்த்தும் சின்னடம்பன் மக்கள் வீடுகளை கட்டும் அறக்கட்டளையில் பணிபுரியும் 10 பேரும் இக் கிராம மக்களுடன் முரண்படுவதாகவும் அங்குள்ள மரங்களை வெட்டுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எவ்வாறு தாம் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லக்கூடிய காணிகளை வழங்குவது என்பதே இவர்களின் கேள்வியாக உள்ள நிலையில் இக் காணிகள் வயல்காணிகளாக உள்ளமையினால் வீடுகள் அமைப்பதற்கு சிறந்தது இல்லை எனவும் இவ் வயல்களுக்கு செல்லும் பாதை மழை காலத்தில் சுமார் மூன்று தொடக்கம் நான்கு அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கும் எனவும் வயதானவர்கள் கவலை தெரிவிப்பதுடன் ஏற்கனவே பூந்தோட்டம் நலன்புரி நிலையம் என்ற பெயரில் இயங்கும் முகாமில் விசிக்கும் மக்களை மீண்டும் துன்பத்திற்கு முகம் கொடுக்கும் முகமாக புதிதாக 40 வீடுகள் அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இடம் உள்ளதாகவும் விசனத்தை முன்வைக்கின்றனர்.


இவ்வாறான சூழலில் வவுனியா அரசாங்க அதிபர் இக்காணிகள் அரச வன இலாகாவுக்குரிய காணிகள் எனவும் அதனைப்பெற்று வீடுகளைக் கட்டியே தீருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோர் இக் காணிகள் அங்குவாழும் மக்களுக்கு உரியதாயின் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று கூறிவரும் நிலையில் தற்போது பூந்தோட்டம் முகாமில் வசிக்கும் மக்களுக்காக 70 வீடுகள் அமைக்கப்பட்டு வரும் நிலப்பகுதிபோன்று இல்லாமல் பள்ளக்காணிகளை அரச அதிகாரிகள் தற்போது அடையாளப்படுத்துவது சிறந்ததன்று.

இந் நிலையில் மாற்றுத்தீர்வாக புளியங்குளம் தொடக்கம் நயினாமடு வரையுள்ள வீதியின் இருமருங்கிலும் உள்ள அரச காணிகளை வழங்கி மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தாது காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களின் காணிகளை அபகரித்து வழங்கி மக்களிடையே தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவேண்டிய அதிகாரிகளே குழப்பத்தை ஏற்படுத்தி நீண்ட கால முரண்பாடுடைய சமூகத்தை உருவாக்கும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017