Flash News
கட்டுரை
யானைகளின் அட்டகாசம்; மட்டு.படுவான்கரை மக்கள் மீள்வது எப்போது ?
[ Thursday, 2 June 2016 ,10:41:54 ]

வயலும் வயல் சூழ்ந்த சூழலுமான மருத நிலமும், காடும் காடு சார்ந்த சூழலுமான முல்லை நிலமும், மணலும் மாணல் சார்ந்த சூழலுமான பாலை நிலமும், மலையும் மலைசார்ந்த சூழலுமான குறிஞ்சி நிலமும் என நால்வவை நிலங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பிரதேசம் மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக அமைந்துள்ள படுவான்கரைப் பிரதேசம்.

 

-மட்டு. சக்திவேல் -

 

கனிய வளங்களை இயற்கையாக கொண்டுள்ள ஓர் சாரல் வனப்பு மிக்க பிரதேசமே படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று. வளங்கள் கொலிக்கும் படுவாங்கரை பிரதேச மக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. தாமும் தமது குடும்பமும் என உடனுக்கு உடன் உழைத்தே வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். போரதீவுப்பற்று வேளாண்மைச் செய்கைக்கு மாத்திரமின்றி நிலக்கடலை, உழுந்து, சோளம், பயறு, மரவள்ளி, குரக்கன், கௌப்பி என பல மேட்டு நிலப் பயிர் செய்கைகளுக்கு பெயர்பெற்றது. 

வரலாறு காணாதா பேரழிவுகளை சந்தித்திருந்தது என்றால் அதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சுமூகமான சூழ்நிலையில் அப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளும் அவர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. எனவே அங்குள்ள மக்கள் மத்தியில் தொடரும் காட்டு யானைகளின் இன்னல்கள் இக்கட்டுரையில் புலனாகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நிலப்பரப்பான படுவான்கரைப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகளும் அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம் கிராமங்கள், விவேகானந்தபுரம், திக்கோடை தும்பங்கேணி, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி, புன்னக்குளம், சுரவணையடியூற்று, வெல்லாவெளி, விவேகானந்தபுரம், ராணமடு, சின்னவத்தை, தாந்தாமலை, கச்சக்கொடிச்சுவாமிமலை, நெல்லிக்காடு, புல்லுமலை, பாவக்கொடிச்சோனை, கண்டியனாறு, 8 ஆம் கட்டை, கரடியனாறு போன்ற பல கிராமங்களிலே யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.


 

படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான் போன்ற பல பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புக்களையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள அங்குள்ள மக்கள் வீட்டுத் தோட்டம், கைத்தொழில், கோழிவளர்ப்பு, செங்கல் வெட்டுதல், கூலிவேலை செய்தல் போன்ற இதர தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வருடாந்தம் ஐப்பசி தொடக்கம் மாசி மாதம் வரையான காலப் பகுதிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கைகளையும் தோட்டங்களையும் பரந்த அளவிலும் சித்திரை தொடக்கம் அடி மாத காலப் பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையையும் குறைந்த அளவிலான காலபோக வேளாண்மைச் செய்கையையும் இந்தப் பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமது ஐீவனோபாயத்திற்கு மிக நீண்ட காலமாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதாக அந்தப் பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர். 35 ஆம் கிராமத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் க.காந்தன் தெரிவிக்கையில்,

 

“நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து வந்தோம். இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்துள்ளோம். கடந்த யுத்தத்தினால் எமது மக்கள் சகல உடைமைகளையும் இழந்துள்ளார்கள். தற்போது காட்டு யானைகள் எம் உறவுகளின் வீடுகளை இரவும் பகலுமாக மாறிமாறி உடைத்து வருகின்றன. இதுவரை எமது பகுதியில் 5 பேருக்கு மேல் காட்டு யானைகள் அடித்துக் கொன்றுள்ளது. சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் துன்பப்பட்ட நாங்கள் தற்போது காட்டு யானைகளினால் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் யுத்த காலத்தில் எவ்வாறு இடம்பெயர்ந்தோமோ அது போன்று, காட்டு யானைகளுக்கும் பயந்து இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்படும்” என தனது மன ஆதங்கத்தை எடுத்தியம்பினார்.


 

இது இவ்வாறிருக்க காக்காச்சுவட்டடைக் கிராமத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் இவ்வாறு கூறுகின்றார்.

 

“தற்போது யானைகளின் அட்டகாசத்தினால் படும் துன்பங்களைப் பற்றி பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் திணைக்களம், அரசாங்க அதிபர் போன்ற பலருக்கும் அறிவித்தும் எமக்குரிய பலன் இதுவரை கிட்டவில்லை. நாங்கள் கோருவது யானைகள் கிராமத்திற்குள் உட்புகும் மையப் பகுதிகளைச் சுற்றி மின்வேலிகள் அமைத்துத் தரவேண்டும் என்பதே.

 

ஆனால், எமக்கு நான்கு, ஐந்து யானை வெடிகள் மாத்திரம் தரப்படுகின்றன. யானைகள் வரும்போது, அதனை நாங்கள் வெடிக்க வைத்தால் அந்த வெடிகளை யானைகள் ஏனோ, தானோ என்று விட்டுப்போகின்றன. அந்த வெடிகளுக்கு இங்குள்ள யானைகள் பழக்கப்பட்டு விட்டன. நாம் எத்தனை தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்று கூறியும் இதுவரை எமக்குக் கைகூடவில்லை” எனக் கூறினார்.

 

இது இவ்வாறிருக்க இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர்போனது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இந்த விவசாயிகளின் கத்தரி, வெண்டி, மரவள்ளி, தென்னை, வாழைத் தோட்டங்களை யானைகள் அழித்து வருவதோடு, வேளாண்மை வயல்களையும் அழித்து நெல் மூட்டைகளையும் உண்டும், சேதப்படுத்தியும் வருகின்றன என அவரது மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

 

இதுபோல் யானைத் தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளர் ஒருவரான பிலாலிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரைச் சந்தித்த போது, நாங்க மாலை ஆறு மணி என்றால், நித்திரை கொள்வதில்லை. விடிய, விடிய கண் விழித்துக் கொண்டுதான் இருப்போம். எங்களுக்கு சாப்பிட, குடிக்க ஒன்றும் கேட்கவில்லை. எங்கட பிள்ளைகளை அச்சமின்றி வாழ்வதற்கு யானைத் தொல்லைகளை இல்லாது ஒழித்துத் தாருங்கள். பலர் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். ஆனால் இதுவரை நடந்தது ஒன்றுமில்லை. இதனால் எங்கட பிள்ளைகளின் படிப்புத்தான் வீணாகின்றது. நிம்மதியாக இரவில் படிக்க முடியாதுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் எமது எதிர்காலச் சந்ததியினரை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்றுதான் கவலையாக உள்ளது” என கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.


 

காட்டு யானைகளின் தாக்குதலுக்கும் அட்டகாசங்களுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள படுவான்கரைப் பிரதேச மக்கள், கடந்த 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய வெள்ளம், 1978 ஆண்டு வந்த சூறாவளி, பின்னர் கோர யுத்தம், தொடர்ந்து வறட்சி, வெள்ள அனர்த்தம் போன்ற இவைகள் அனைத்திற்கும் முகம்கொடுத்து தற்போது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், 'மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களும், மக்களின் பயிர் பச்சைகளுக்குள்ளும் புகுந்த அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும் குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்வாதாரததிற்குத் துணை நிற்கின்ற தொழில்களையும் அழித்து வருவது என்பது மிகவும் வேதனையான விடயமே! இதனை மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?

 

இந்த விடயம் குறித்து போரதீவுப்பற்று பிரதேசத்தில் அரச கடமையில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிகையில், “இப்பிரதேச மக்கள் பன்னெடுங் காலமாக சொல்லெணாத் துயரங்களை எதிர்கொண்டவர்கள். அவர்களை தொடர்ந்தும் துன்புறுத்தும் நடவடிக்கைகள் என்பதற்கு மேலாக காட்டு யானைகளின் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஆனால் இப் பிரதேசம் காட்டு யானைகள் வாழும் பிரதேசம் இல்லை. மாறாக மக்கள் குடியிருக்கும் பிரதேசம். இங்குள்ள மக்கள், காட்டு யானைகளை வெடிகள் வைத்தோ அல்லது மின்சார வேலிகள் அமைத்தோ தடை செய்வது என்பதற்கு மேலாக இவற்றை பிடித்து யானைகள் வாழும் சரணாலயங்களில் விடுவதுதான் சாலச் சிறந்த விடயம்.  மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கள் யாட்டு யானைகள் வருவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இவைகளைப் பிடித்து சரணாலயங்களில் விட்டால் யானை வேலி அமைப்பது என்பது அவசியமில்லை” என அவர் தெரிவித்தார்.


 

இந்த விடயம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் வாழும் குடியிருப்புக்களின் அருகிலுள்ள பற்றைக் காடுகளில் தங்கியுள்ள யாட்டு யானைகளை பிடித்துக்கொண்டு சரணாலயங்களில் விடவேண்டும். யானை வேலி அமைக்கப்பட்ட இடத்திற்குள் இருக்கின்ற யானைகளை துரத்தி வேலிக்கு அப்பால் விட வேண்டும். புதிதாக யானை வேலிகள் உடனடியாக அமைக்க வேண்டும். மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியினுள் தொடர்ந்து காட்டு யானைகள் தங்கி நிற்கின்றன. அக்காடுகளை துப்பரவு செய்து அங்குள்ள யானைகள் வெளியேற்ற வேண்டும்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தினுள் கடந்த 3 வருடத்திற்குள் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் 375 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 22 மேற்பட்டோர் யானைகளினால் காயமடைந்துள்ளனர். 16 மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேர்த்து, 60 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டும், 30 வருடங்கள் பழமைவாய்ந்த பயன்தரும் தென்னை மரங்களை அழித்துள்ளன. மேட்டு நிலப் பயிர் செய்கையும் வேளாண்மைச் செய்கையையும் அழிந்துள்ளன.


 

தற்போது இப்பகுதியில் காட்டு யானைகள் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்ணக்கூடிய அளவிற்கு வந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. எனவே மக்களின் அவசரகால நிலைமையைக் கருத்தில் கொண்டு, சம்மந்தப்பட்டவர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேணடும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது இவ்வாறிருக்க உயிரின பன்முகத்தன்மை மற்றும் யானைகள் பராமரிப்பு அமைச்சின் முகாமைத்துவத்தின் தவகலுக்கு அமைய 1900 ஆண்டுகளில் நாட்டில் 88 சதவீதம் காடுகள் இருந்தன. ஆனால் தற்போது 20 மில்லியனுக்கு மேலாக மக்களும் 18 சத வீதத்திற்குக் குறைவான காடுகளுமே உள்ளன. தற்போது நாட்டில் மக்கள் குடியிருக்கவும் பயிர் செய்கைகளுக்கும் தொழிற் பேட்டைகளுக்குமாக பல்வேறு தேவைகளை மையப்படுத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.


 

இதனால் காடுகளிலுள்ள யானைகள் உணவை தேடி கிராமங்களுக்குள் செல்கின்றன. இருந்த போதிலும் இலங்கையில் மின்சார வேலிகள் அமைக்கும் செயற்பாடு நடைமுறையில் உள்ளன. ஆனாலும் இந்தத் திட்டத்தினால் யானைகளின் தொல்லைகளைக் குறைக்கலாமே தவிர முற்றுமுழுதாக ஈடு செய்ய முடியாது எனத் தெரியவருகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்களிடமிருந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.  எமக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்காக வேண்டி தற்போது எமது திணைக்களத்தினால் வன விவி மித்துரு எனும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம். இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து அந்தந்த பிரதேச செயலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 300 இளைஞர்கள் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு யானைகள் கிராமத்தினுள் ஊடுருவுவதை எவ்வாறு தடுத்தல், யானைகளைக் கட்டுப்படுத்தல், யானை வெடிகளைக் கையாளுதல், போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.