Flash News
கட்டுரை
என்ன பாவமோ இன்னமும் கஷ்டப்படுறம் ; மலையக தாய்மாரின் கண்ணீர்
[ Saturday, 4 June 2016 ,06:44:25 ]

”நாங்களும் பிள்ளைகளை நல்ல முறையாத்தான் படிக்க வைச்சம் பங்களாவிலும் சாப்பாட்டுக் கடையிலும் வேலைக்கு போறதுக்கு இவங்கள பெத்தெடுக்கல. எந்தபிறவியில செஞ்ச பாவமோ இன்னமும் கஷ்டப்பர்றம்” என்கிறார் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் சகுந்தலா.

-ஜெ.றொமி ஜோதினி -

நான்கு பிள்ளைகளுக்கு தாய் அவள் கொழுந்து பறிப்பதே தொழில் 12 அடி வீடே அவளின் மாளிகை அதை ஒத்தவாறே தந்தையும் அதே தொழிலில் தான் ஈடுபட்டு வந்தார்.

ஆண்களுக்காக அந்த தோட்டத்தில் வழங்கப்பட்டிருந்த பணி தேயிலை மரங்களுக்கு உரம் இடுவது களை நாசினி தெளிப்பது மண்ணை பதப்படுத்துவது.

கொழுந்து பறிப்பது பெண்களின் வேலை அட்டை கடி, குளவி கொட்டுதல், பாம்பு தீண்டுதல் போன்ற விசப் பூச்சிகளின் தீண்டல்களுக்கு மத்தியில் கடும் வெய்யில் மற்றும் அடை மழையினால் ஏற்படும் மண் சரிவுகள் ஆகியவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டே கொழுந்து பறிக்க வேண்டும் இவர்கள் இருவருக்கும் கிடைக்கும் வருமானம் 1240  ரூபாய்.

இப்படி வாழ்ந்து நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இவர்கள் இரண்டு பிள்ளைகளை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர். ”எண்ட மூத்தவள் கொழும்பில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றுகிறாள். இரண்டாவது ஆம்பிள பிள்ளை.  கொழும்பிலுள்ள ஒரு சாப்பாட்டுக்கடையில கொத்து மாஸ்ரர்” என்கிறார் அந்த தாய்.

மேலும் இருவர் பாடசாலை செல்வதாகவும் அவர்களை நன்நிலைக்கு கொண்டு வருவதே தனது நோக்கம் எனவும் கூறினாள். மூத்த மகள் மற்றும் இரண்டாவது மகன் இருவரும் உழைத்து பணம் அனுப்பி வைக்கின்றார்கள்.

எனினும் தினசரி மாற்றமடையும் அத்தியாவசிய பொருட்களின் விலையினால் முறையாக குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

கடினமாக உழைப்பதால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. அரச மருத்துவ மனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்படாமையினால் தனியார் துறைக்குச் சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலும் வைத்திய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையினால் அதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்க்கின்றோம்.

அதுமாத்திரமன்றி மலையக மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு மதுபான சாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறும் அந்த தாய் வருமானத்தில் ஒரு பகுதி தனது கணவனின் மது பாவனைக்கே செலவிடப் படுவதாகவும் கூறுகின்றார்.


சகுந்தலா என்ற தாயின் புலம்பலோடு கொட்டகலை ரொனிக் லீவ் தோட்டத்திலுள்ள சரஸ்வதி என்ற தாயை சந்தித்தேன். லயன் 12 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றாள் அந்த தாய். ஆண் மற்றும் பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த அவள் பிள்ளை மடுவத்தில் குழந்தைகளை பராமரித்தே  தனது தொழிலாக செய்கின்றாள்.

பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவைத்த நிம்மதி காணப்பட்ட போதிலும் அவளது கண்களில் ஏக்கமும் கவலையும் காணப்பட்டதை என்னால் கண்டு உணர முடிந்தது.

தனது அயல் வீட்டைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகள் கொழும்பில் தொழிலில் செய்து குடும்பத்தை முன்னேற்றியுள்ளதை போல் தனது மகனும் கொழும்பிற்குச் சென்று குடும்பத்தை முன்னேற்றுவான் என்ற நம்பிக்கையில் மகனை கொழும்பிற்கு அனுப்பி வைத்தாள்.

ஆனால் கொழும்பிற்கு சென்ற மகன் உணவகம் ஒன்றில் தொழில் பெற்ற நிலையில் ஊரிலுள்ள தாயை மறந்து சம்பளத்தை அனுப்பிவைக்காது குடும்பத்தை மறந்து வாழ்ந்துள்ளார். மகனின் சம்பளத்தை ஏதிர்பார்த்து காத்திருந்த தமக்கு ஏமாற்றமே கிடைத்தாக தெரிவிக்கின்றார் சரஸ்வதி.

தானும் தனி வீடு அமைத்து அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே மகனை கொழும்பிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் மகன் தன்னை மறந்து சுகபோக வாழ்க்கைக்கு அடிமையாகி உழைத்த பணத்தை வீண் செலவழித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனால் வயது போன நிலையிலும் தொடர்ந்தும் பிள்ளை மடுவத்தற்கு தொழிலுக்கு செல்வதாக கூறுகின்றார். இவ்வாறான நிலைமையே லயன் குடியிருப்பில் வாழும் குடும்பங்களின் நிலைமையாக காணப்படுகின்றது.


எனினும் கொழும்பில் வாகன உதிரிப்பாகம் விநியோகிக்கும் விற்பனை நிலையத்தில் வேலை செய்த போது குடும்பத்தை நன்றாக வைத்திருந்தேன்.

குறித்த கடை தற்போது மூடப்பட்டுள்ளமையினால் மீண்டும் ஊருக்குச் சென்று வேலைவாய்பைபெற்றதாக அக்கரப்பத்தனையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறுகின்றார். ஊரில் மரக்கறி தோட்டம், செய்து தனது குடும்பத்தையும், பெற்றோரையும் பாதுகாக்க முடியாது. இதனால் மீண்டும் கொழும்பிற்குச் செல்வதற்கு வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருக்கின்றேன் என அவர் தெரிவிக்கின்றார்.

ஆனாலும் எனக்கு மாதாந்தம் கிடைக்கும் 20 ஆயிரம் ரூபாவில் வீட்டுத் தேவைகளுக்காக 10 ஆயிரம் ரூபாவை அனுப்புவதாக தெரிவிக்கின்றார் கொட்டகலையைச் சேர்ந்த ஆனந்தி. வெள்ளவத்தையிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் தாம் குடும்பத்தை முன்னேற்றுவதற்காகவே ஊரிலிருந்து வேலைதேடி வந்தாகவும் அதன் மூலம் தனது தாயையும் சகோதரியையும் நல்ல நிலையில் வைத்திருப்பதாக குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில் மலையகத்திலுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் கொழும்பை நம்பியே வாழ்ந்து வருவதாக அக்கரப்பத்தனையைச் சேர்ந்த கிராம சேவகர் குழந்தை வேல் தெரிவிக்கின்றார். எல்பத்த தோட்டத்தில் 30 பேர் கொழும்பிலும் 105 பேர் வெளிநாடுகளிலும் தொழில்வாய்பு பெற்றுச் சென்றுள்ளனர்.

அதிகளவிலான பெண்கள் தமது குழந்தைகளை தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு கொழும்பிற்கு செல்கின்றார்கள். கடந்த 10 வருடங்களைவிட தற்போது கொழும்பிற்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சில தோட்டங்களில் 10 நாட்கள் மாத்திரம் வேலை வழங்கப்படுவதனால் கொழும்பிற்கு வேலை தேடி செல்கின்றனர். மீண்டும் ஊருக்கு திரும்பி உழைத்த பணத்தை வீண் செலவு செய்யும் வகையில் கவர்ச்சியாக வருவதுடன் செலவிடுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.


இவ்வாறான மாறுபட்ட நிலைகள் காணப்படுகின்றபோதும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களிடம் காணப்படும் ஊர் பற்று, காணி பற்று சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற பற்று மலையக இளைஞர் யுவதிகளிடம் இல்லாமையினாலேயே அவர்கள் கொழும்பிற்கு தொழில் வாய்ப்பிற்காகச் சென்ற பின்னர் ஊரிலுள்ள குடும்பத்தை மறந்து வாழ்வதாக ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பின் தேசிய செயலாளர் மோகன் சுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.

கொழும்பிலுள்ள சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி எதிர்கால யோசனைகளை மறந்தே இளம் சமுகத்தினர் கொழும்பிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்கின்றனர். 

1965 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு சென்ற மலையக இளைஞர்களில் நூற்றுக்கு 50 வீதமானவர்கள் தற்போது முதலாளிமார்களாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று தாமும் முதலாளிமார்களாக மாறலாம் என்ற ஆசை மற்றும் கவர்ச்சியிலேயே பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகிய இளைஞர்கள் கொழும்பிற்கு வேலை தேடிச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அதிகளவாக பாடசாலையிலிருந்து கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் இடைவிலகிய மாணவர்களிடம் தொழிலுக்கான அனுபவம் இல்லை, எதிர்பார்ப்பு இல்லை, சரியான தொழிலை தெரிவு செய்வதற்கான திறன் இல்லாமையினால் கொழும்பிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்று சிரமங்களை எதிர்கொள்வதாக அரச சேவையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிபர் அண்ணா சாமி தெரிவிக்கின்றார்.

மலையகத்திலிருந்து திடீர் தீர்மானங்களை மேற்கொண்டு கொழும்பிற்கு சென்று நிரந்தர தொழில் இல்லாமையினால் மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலையிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

வேலையிலிருந்து விலகியவர்கள் மீண்டும் ஊருக்கு வரும் போது கவர்ச்சியான கண்ணாடி, ஆடைகளுடன் வருவதனால் அதே தோட்டத்திலுள்ள இளைஞர்கள் கொழும்பு சென்றால் நாமும் இவ்வாறு கவர்ச்சியாக மாறலாம் என்ற ஆசையில் செல்கின்றனர்.

இவ்வாறு கொழும்பிற்குச் செல்லும் சில இளைஞர்கள் தமது பெற்றோர்களை மறந்து மது மற்றும் போதைக்கு அடிமையாகி மீண்டும் ஊருக்கு திரும்புகின்றனர்.

கொழும்பில் வேலையிழந்து மீண்டும் ஊருக்கு வரும் இளைஞர்கள் தாய் தந்தையரின் ஊழியர் சேமலாப நிதியில் முச்சக்கர வண்டி வாங்கி அதற்கான கட்டணங்களை உரிய முறையில் செலுத்தாததால் கடனாளிகளாக மாறுகின்றனர்.

வேறு சிலர் தாய் தந்தையரின் ஊழியர் சேமலாப நிதியை பெற்று தாம் வசிக்கும் வீடுகளை புனரமைப்பு செய்வதனால் பெற்றோர் சேமித்த பணத்தை இழந்து தமது குடும்பத்தையும் பார்க்க முடியாத நிலையில் மீண்டும் தோட்ட வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஒய்வு பெற்ற அதிபர் அண்ணா சாமி சுட்டிக்காட்டுகின்றார்.


இந்நிலையில் தொழிலுக்காக மலையகத்திலிருந்து இளைஞர் மற்றும் யுவதிகள் இடம்பெயர்வதற்கு தொழில் தொடர்பான அறிவு இன்மை, பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லை. நண்பர்களின் ஆதிக்கம், வறுமை, பாடசாலைகளில் தொழில் சூழலை உருவாக்காமை, பயிற்சி இன்மை, உடனடி சம்பளம் இவ்வாறான காரணங்களினால் கொழும்பிற்கு தொழில் தோடி தற்போது இளைஞர் யுவதிகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் செல்வதாக ஹட்டனிற்கா ஆசிரியர் ஆலோசகர் ஆர்.மகேந்திரன் தெரிவிக்கின்றார்.

இதனை தடுப்பதற்கு, மலையகத்தில் தொழில் சூழலை உருவாக்குதல், தொழில் பயிற்சி நிலையங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைப்பதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், தொழில் தொடர்பான பயிற்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதிபர் ஆசிரியர்களுக்கு தொழில் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல். தரம் 10 இல் பெற்றோர்களுக்கு தொழில் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுயதொழில் திட்டங்களை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையத்தில் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதன் மூலம் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மற்றும் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இவற்றின் மூலம் கொழும்பிற்கு வேலைதேடி செல்லும் மலையக இளைஞர் யுவதிகள் சிரமங்களை எதிர்நோக்குவதையும் அவர்களின் பெற்றோர்கள் தோட்டங்களில் கஷ்டப்படுவதையும் தடுக்க முடியும் என மகேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் மலையக இளைஞர்கள் யுவதிகள் கொழும்பிற்கு வேலை தேடி செல்வதை தடுப்பதற்கு தொழிற்சங்கம் என்ற வகையிலும் அரசியல் கட்சி என்ற வகையிலும் தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அக்கட்சியின் உப தலைவர் சிவானந்தனை சந்தித்து வினவினேன்.

கொழும்பிற்கு போனால் வெள்ளையாக முடியும், கலர் கலரா கண்ணாடி போட முடியும் என்ற ஆசையில் கொழும்புக்கு போய் உணவகம் மற்றும் புடவைக்கடை, நகைக்கடை ஆகியவற்றில் வேலைக்கு சென்று விடுமுறையில் வரும் போது கையில கொஞ்ச காச கொண்டு வந்து ஊருல செலவழிக்கின்றார்கள்.

இதுக்காகத்தான் கொழும்புக்கு போறாங்கள். தோட்டத்தில கொழுந்து பறிக்க போக ஆட்கள் இல்ல. கொழும்பு மோகத்துக்கு ஆசைப்பட்டு அங்கு போய் குடும்பத்தை மறந்து வீணாகின்றார்கள். சிலர் குடும்பத்தை நல்லாக வச்சிருந்தாலும் நுாற்றுக்கும் 70 வீதமானவர்கள் குடும்பத்தை மறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கைத்தொழில் பேட்டை உருவாக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


ஆகவே மலையக பெற்றோர்கள் மத்தியில் சரியான எதிர்நோக்கையும், மாணவர்களுக்கான உரிய கல்வி, தொழிற்கல்வி, ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி மலையகத்தை முன்னேற்ற முடியும். இது குறித்து மலையக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சுயநலமாகச் செயற்படுதை மலையக அரசியல்வாதிகள் மறந்து மக்கள் நலனுக்காக செயற்பட முன்வர வேண்டும். 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017