Flash News
கட்டுரை
நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பனிப்போர் தீவிரம்
[ Saturday, 23 July 2016 ,08:49:06 ]

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளதாக அரச தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணிலின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தினால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டும் அல்லது தனித்து ஆட்சி அமைப்பது ஆகிய இரண்டில் ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டாக பிரதமருக்கு அழுத்தம்கொடுத்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து அர்ஜூன மகேந்திரனை நீக்கிய விதம் மற்றும் வற் வரி அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துவிட்டு பின்னர், ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும், பொதுக் கூட்டங்களிலும் அதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தது மாத்திரமன்றி, ஒட்டுமொத்த பழியையும் ஐக்கிய தேசியக் கட்சி மீது திணித்த விவகாரம் ஆகியவற்றால் ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேவேளை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியைப் போல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதை அடுத்தே நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்வதா என்பது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர். 

அதுமாத்திரமன்றி இந்த விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தீர்மானங்களை எடுப்பதும், ஐக்கிய தேசியக் கட்சியினரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யவும், அதிகாரத்தை பரவலாக்கவும், தேர்தல் முறைமையை மாற்றியமைக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுவரும் முயற்சிகளை முறியடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாலேயே இரு தரப்பினருக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடையக் காரணம் என்றும் பெயரைக் குறிப்பிட விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருடன் விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும் அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்போது புதிய அரசியல் சாசனத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்க மறுத்தால், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இணைத்துக்கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளனர்.

எனினும் இதனை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தரப்பினர், ராஜபக்ச தரப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்டு அரசியலில் அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். 

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை தனது சகோதரர் பெஷில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கம் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய தொடர்பை பேணி வருவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்கள் அனைவரும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர்கள் என்றும் கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தொடர்பைப் பேணி வருவதாகவும் பிரதமருடனான சந்திப்பின் போது மற்றுமொரு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பிரதமரை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதோடு, கிழக்கு மாகாணத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கான அரசியல் சாசன மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக உறுதியளித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமுடன் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தேசிய அரசாங்கம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் ஆட்சியில் இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

எழுத்துமூலமான உடன்படிக்கையை விட இரண்டு கட்சியினருக்கும் இடையிலான புரிந்துணர்வு மிகவும் வலுவானதாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அதேவேளை மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கமொன்றை குறிட்ட ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக கவிழ்க்க சிலர் முயற்சிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் தெரிவித்த துமிந்த திஸாநாயக்க, சதித் திட்டங்கள், பாதயாத்திரை, போராட்டங்கள் மூலம் தற்போதைய தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்றும் சூளுரைத்திருந்தார். 

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் - ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியதாகவும் இரண்டு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்கள் குறிப்பிட்டனர்.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017