கடும் அழுத்தத்தில் இஸ்ரேல் - அவுஸ்திரேலியா பிரதமரின் அதிரடி அறிவிப்பு
அவுஸ்திரேலியா (Australia) பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ், பிரித்தானியா (UK) மற்றும் கனடாவின் இதேபோன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் அண்மைய நடவடிக்கை இதுவாகும்.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதி
இரு நாடுகள் தீர்வு, காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச உந்துதலுக்கு பங்களிக்கும் வகையில், எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா பாலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸ் எந்த எதிர்கால அரசியல் பங்களிப்பிலும் ஈடுபடக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச சமூகத்தின் அழைப்புகளை நெதன்யாகு புறக்கணித்ததாலும், காசாவில் சட்ட மற்றும் நெறிமுறைக் கடமைகளுக்கு இணங்கத் தவறியதாலும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் முடிவு மேலும் கட்டாயப்படுத்தப்பட்டது என அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
