மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தலைதூக்கியுள்ளனவா - காட்டமாக கேள்வியெழுப்பியுள்ள சாணக்கியன்!
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள, சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை இனம் தெரியாத விசமிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கும் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இந்த காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
விசமிகள் அராஜகம்
இவ்வாறான நிலையிலேயே விசமிகள் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மக்கள் தற்போது ஓரளவிற்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் செயற்பாடு
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில், என்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
அத்துடன், மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆராஜக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனரா” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





