அழகு நிலையம் ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த குழுவினர்
அழகு நிலையம் ஒன்றில் இருந்த சிலர் திடீரென மயங்கிவிழுந்த சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.
கண்டி - பேராதனை வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் இருந்த சிலரே இன்று இவ்வாறு திடீரென மயங்கிவிழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி தேசிய வைத்தியசாலை
அதன்படி, கண்டி தேசிய வைத்தியசாலையிலும், மேலும்கண்டியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழுவில் 06 இளம் பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளம் பெண்களில் நான்கு பேர் அழகு நிலையம் ஊழியர்கள் என்றும், மறறைய மூவர் அதன் சேவைகளைப் பெற வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
இன்று (20) கண்டி - பேராதனை வீதியில் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள பல வணிகங்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மோசமான நிலை
இந்த அழகு நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரும் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவர்கள் அழகு நிலையத்தின் அனைத்து யன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடி, குளிருட்டியை (ஏசி) இயக்கி, அழகு நிலையத்திற்குள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, சுவாசிப்பதில் ஏற்பட்ட மோசமான நிலை காரணமாக அங்கு இருந்தவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
