தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்த கனடாவின் நகரம்… ஶ்ரீலங்காவுக்கு புதிய சிக்கலா?
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் பிரம்டன் நகரம் தமிழீழத் தேசியக் கொடியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
பிரம்டன் நகரசபை, மேயர் பற்றிக் பிரவுன் தலைமையில், நவம்பர் 21ஆம் ஆம் நாளை "தமிழீழத் தேசியக் கொடி தினமாகப்" (Tamil Eelam National Flag Day) பிரகடனத்தும் நிகழ்வு நடந்தது.
இந்த விடயம் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீலங்கா அரசு இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிரம்டனில் பறந்த புலிக்கொடி
கனடா நாட்டின் நகரம் ஒன்றின் இந்த அங்கீகாரம் என்பது வெறுமனே ஒரு அடையாள ரீதியான சமிக்ஞையல்ல; இது கனடாவில் வாழும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கலாச்சார அடையாளம், மரபுரிமை மற்றும் அவர்கள் இழந்த தாயகக் கனவுகளுக்கான மரியாதையாக கருதப்படுகின்றது.
கடந்த நவம்பர் 21, தமிழீழத் தேசியக் கொடி நாளின்போது மேயர் பற்றிக் பிரவுணால் நகர மண்டபத்தின் முன்புறம் தேசியக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகள், கனடியத் தமிழ் சமூகத்திற்குப் பெரும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
கனேடிய மண்ணில் தமிழர்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தருணமுமாகும். புலிக்கொடியை அங்கீகரித்தமைக்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக கடந்த நவம்பர் 21ஆம் நாளன்று வெளியிட்டு வைத்தார்.
கொடியை ஏற்றியதுடன் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டது. மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும்.
இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.
அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பற்றிக் பிரவுண் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனடா
பிரம்டன் போன்ற உள்ளூர் மட்ட அங்கீகாரங்கள், கனடாவின் பரந்த ஈழத் தமிழர் ஆதரவுப் போக்கின் ஒரு பகுதி என்பது இங்கு முக்கியத்துவமான விடயமாகும்.
கனடா எப்போதும் உலகெங்கிலும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளது.
இலங்கை இனப்படுகொலைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த கனடாவின் நிலைப்பாடு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்குச் சார்பாகவே இருந்துள்ளது.
கனடா பாராளுமன்றம், இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் மே 18ஆம் நாளை இனப்படுகொலை அறிவூட்டல் தினமாகவும் கனடா நாடு பிரகடனப்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் வரிசையில் கனடாவின் இந்த நடவடிக்கைகளை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னுதாரமான செயற்பாடாக கருதப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதனால் எதைச் சாதிக்க முடியும் என்று இலங்கை அரசு கேலி செய்தது. பிறகு இலங்கையில் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதும் இலங்கை அரசு இப்பிடித்தான் பேசியது.
இனப்படுகொலைக்கு நினைவுத்தூபி
ஆனால் அண்மைய காலத்தில் கனடா நாடே இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் காலத்தில் இன்னமும் பல நாடுகள் இப்படி ஈழ இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளும் என்பது ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கை.
அத்துடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இலங்கை அரசு அதிகாரிகள் மீது கனடா அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கனடாவின் பல மாகாண மற்றும் மத்திய அரசியல்வாதிகள், தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவுகொள்ளும் விதமாக பாரிய நினைவேந்தல் தூபி கடந்த மே 18 அன்று கனடாவில் நிறுவப்பட்டது. தமிழ் ஈழ வரைபடம் கொண்ட குறித்த நினைவேந்தல் தூபியகத்தில் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளின் வரலாறு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்தில் கனடா தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் அடையாளமாக இது அமைந்தது.
அத்துடன் இச்செயற்பாடு ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் விரைவில் விடுதலை கிடைக்கும் கனவு மலரும் இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.
ஜஸ்டின் ட்ரூடோவின் குரல்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு மே 18இல் வெளியிட்டுள்ள தீர்மானத்தில் இலங்கயைில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டார்.
அதில் அவர், “நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என்றும் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன, பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.
கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எமக்கு அக்கறைகள் உள்ளன…” என்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவைத் தெரிவித்தார்.
அத்துடன். “கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.
இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகக் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது…” என்றும் கனடா குறிப்பிட்டிருந்தது.
இலங்கை அரசின் எதிர்வினை
பிரம்டன் நகர மேயரின் இந்த அதிரடி கண்டு ஶ்ரீலங்கா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஶ்ரீலங்காவுக்கான கனேடிய தூதர் இசபெல் கத்ரீன் மார்ட்டினிடம் இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு ஶ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரம்டன் நகரத்தின் தமிழீழக் கொடி அங்கீகாரம் என்பது கனடாவின் மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள நிலையில், ஒரு மாறுபட்ட அரசியல் செய்தியை வழங்குகிறது.
புலிகள் இயக்கம்மீதான தடையை விலத்த வலியுறத்துவதுடன் இது தமிழ் தேசிய இனத்தின் கலாச்சார மற்றும் தேசிய அடையாளத்தின் சின்னம் என்ற புரிதலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |