தோண்ட தோண்ட பெண் சடலங்கள் : சீரழித்து கோயில் நிலத்தில் புதைத்த பயங்கரம்
இந்தியா - கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் உள்ளது.
இக்கோயிலின் முன்னாள் ஊழியர் தர்மஸ்தலா காவல்நிலையத்தில் ஜூலை 4ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
பெண்கள் கொலை
அதில்,‘‘1998 முதல் 2014ம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் பல பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சந்தேகம் இருக்கிறது. பெண்களின் அந்த உடல்களை ரகசியமாக அகற்றுமாறு என்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தினர்.
இந்த உடல்களை நேத்ராவதி ஆற்றின் கரை அருகே புதைத்தேன். பலியான பெண்களில் சிலர் மைனர் பெண்கள். பலர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பள்ளி சீருடை, பையுடன் புதைக்கப்பட்டனர்.
மற்றொரு பெண்ணின் முகம் அமிலத்தால் எரிக்கப்பட்டு இருந்தது. சிலர் உடல்களை தகனமும் செய்ய வற்புறுத்தப்பட்டேன். முழு விவரங்களை நான் வெளியிட தயாராக இருக்கிறேன்.
ஆனால் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை. இந்த விவகாரத்தில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில் விரிவான தகவல்களை வெளியிடுவேன்.
தீவிர விசாரணை
பெங்களூருவை சேர்ந்த சட்டதரணிகள், ஓஜஸ்வி கவுடா மற்றும் சச்சின் தேஷ்பாண்டே ஆகியோர் உதவியுடன் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயில் மாஜி ஊழியரின் புகார் என்பதால் தர்மஸ்தலாவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முறைப்பாட்டின் அடிப்படையில் தென்கனரா காவல்துறையினர் நீதிமன்ற அனுமதி பெற்று நேத்ராவதி ஆற்றின் அருகே சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல பெண் சடலங்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த பெண்களை பலாத்காரம் செய்து கொன்று குவித்த கொடூரன்கள் யார்? என்ற விவரம் இன்னமும் தெரியவில்லை. இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
