திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல்
🛑புதிய இணைப்பு
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மாலை 06.00 pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17612 குடும்பங்களை சேர்ந்த 58440 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக முகாம்
அத்தோடு, 73 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4836 குடும்பங்களை சேர்ந்த 14480 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1849 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும், கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும் மற்றும் கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
இந்தியாவிலிருந்து நிவாரண கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
திருகோணமலை இயற்கைத் துறை முகத்தை நேற்று (01) குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.
இந்திய நாட்டின் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் இதில் வந்து கிடைத்துள்ளது.
சீரற்ற கால நிலை
சீரற்ற கால நிலை திட்வா சூறாவெளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இந்த நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் என முக்கிய உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகர, பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர, மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, மாகாண பிரதம செயலாளர் தலங்கம மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்டோர்கள் இணைந்து இதனை பெற்றுக் கொண்டனர்.
இதனை யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |