விடுதலை புலிகளின் தலைவர் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் : வெளியான தகவல்
வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று(01) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் மட்டும்தான்.

சமாதான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "பிரபாகரன், இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் மீண்டும் குடியேறுவதற்கு வருமாறு அழைக்கின்றார்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள்
ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள் வலிமையுடனும் அங்கீகரிப்புடனும் இருந்த நாட்கள். தோற்றுப் போய் அழிவடைய போகின்றோம் என்ற நிலையில் இருந்து அவர்கள் கதைக்கவில்லை. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிகவும் பலமாக இருந்த நாட்களிலேயே கதைத்தார்கள்.

அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் குடியேறுங்கள் என்று சொல்வதற்கு புலிகளால் முடியாது. அந்தச் சூழலில் தங்களால், மீள குடியேறவுள்ள முஸ்லிம் மக்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதே புலிகளின் சாராம்சமாக இருந்தது.
யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது
முஸ்லிம் மக்கள் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவுப், ஏனைய விடயங்கள் ரீதியாகவும் தனித்துவமானவர்கள். அவர்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயம் அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்படுகிறது.

யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது? குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது குற்றம் செய்தவர் சார்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது அந்த குற்றத்தை பார்த்த ஒருவர் மன்னிப்பு கேட்பதா? மன்னிப்பு என்பது தவறு செய்தவர் தான் உணர்ந்து செய்வதுதான் மன்னிப்பு.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |