வடக்கில் நுண்கடன் நிதி நிறுவனங்களால் உயிர்மாய்ப்புகள்...! குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த எந்தவித அறிக்கையும் இல்லையென நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘வடக்கு மாகாணத்தில் 28 அரச வங்கிகளும், 38 தனியார் வங்கிகளும், 78 நிதி நிறுவனங்களும், 13 அனுமதிப் பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்களும் உள்ளன.
மனிதாபிமானமற்ற செயற்பாடுகள்
அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்கும் போது அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்துக்கமைய செயற்படுத்தப்படுகின்றன.

2025, செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அனுமதிப்பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் 22.69 முதல் 39.40 சதவீத அடிப்படையில் வருடாந்த வட்டி வீதத்துக்கமைய கடன் வழங்குகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்று அறிக்கையிடப்படவில்லை.
நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு வங்கி
2023ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 61ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 2011ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டம், 2000ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க நிதி குத்தகைச் சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நுண்கடன் சட்டம் ஆகிய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய நிதி நிறுவனம், குறிப்பாக குத்தகை நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.

நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களத்துக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நுண்கடன் கண்காணித்தல் அதிகாரசபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |