யாழில் வீதி புனரமைப்பில் அரசியல் தலையீடுகளா... கேள்வியெழுப்பிய சிறீதரன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கிற்கான வீதியின் புனரமைப்பு பணிகளுக்கு பின்னால் ஏதும் அரசியல் தலையீடுகள் இருந்து அவ்வீதி கேவலப்படுத்தப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
அல்லது அந்த அதிகாரிகள் பிழை விட்டிருந்தால் நீதியின் முன் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்
இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக உள்ள வடமராட்சி கிழக்கிற்கான தரைவழிப் போக்குவரத்து பாதை மிகவும் சீர்கெட்ட நிலையில் உள்ளது.
பருவமழைக் காலம் தொடங்கியுள்ள இந்நேரம் பருத்தித்துறை, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளி, மண்டலாய் பிள்ளையார் ஆலயம் வரையிலான பிரதான வீதி மிகவும் பாழடைந்துள்ளது.
2015, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வீதிக்கு நிதி ஒதுக்கப்பட்டு காப்பெற் வீதியாக செப்பனிடப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இவ்வீதி அதிகாரிகளின் நேர்த்தியான திட்டமிடல், மேற்பார்வை இல்லாமல் செப்பனிடப்பட்டு ஐந்து வருடத்திற்குள்ளேயே பாவிக்க முடியாத வீதியாக உள்ளது.
1.இவ்வீதியின் நீளம் எத்தனை கிலோமீற்றர், இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
2.ஐந்து ஆண்டுகளுக்குள் இவ்வீதி இவ்வாறு சீர்கெட்டதற்கான காரணம் என்ன, இதற்கு பின்னால் பிழை விட்டவர்களுக்கான நடவடிக்கை என்ன?
3.இவ்வீதி தொடர்பில் ஊழல் குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படுமா?
4. மக்கள் பாவிக்கக்கூடிய விதத்தில் இந்தப் பாதை எப்போது செப்பனிடப்பட்டு வழங்கப்படுமா? ” என கேள்வியெழுப்பியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |