இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தில் நிலைகொண்ட இராணுவத்தினர் கடந்த தீபாவளி அன்று காணியினை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அங்கு இராணுவத்தினால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தேக்கமரங்கள் அறுக்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது.
வசந்தபுரம் கிராமத்தில் விடுதலைப்புலிகளின் வனவளத்திணைக்களத்தினரின் பண்ணையாக காணப்பட்ட 20 ஏக்கர் காணியில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் முகாம் அமைத்து வசித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் 14 ஆண்டுகளின் பின்னர் 2024 ஆம் 28.10.2024 அன்று இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் மன்னாகண்டல், வசந்தபுரம், கெருடமடு மக்களால் கட்டிட பொருட்கள் உடைக்கப்பட்டு அவர்கள் தேவைக்காக ஏற்றி சென்றுள்ளார்கள்.
பயன்தரு தேக்கமரங்கள்
இந்தநிலையில் குறித்த காணியில் பயன்தரு தென்னைமரங்கள் மற்றும் வேப்புமரம்,தேக்கமரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன
ஆனால் தற்போது 25 வரையான தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.
வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்காக மரங்கள்
விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்து வளர்க்கப்பட்ட தேக்கமரங்கள் குறித்த காணியின் அருகில் போராறு காணப்படுவதால் வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்காகவும் மரங்கள் நாட்டப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் இருக்கும் போது பாதுகாப்பாக காணப்பட்ட இந்த மரங்கள் தற்போது சட்டவிரோதவாசிகளால் வெட்டப்பட்டு குற்றிகளாக ஏற்றப்பட்டுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது.
இது குறித்து பிரதேச வாசிகளிடம் கேட்டபோது இவ்வாறு சட்டவிரோதமாக மரம் ஏற்றுபவர்கள் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் ஏன் அக்கறை காட்டவில்லை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அங்குள்ள ஏனைய இயற்கை வளங்களான மரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |