'சரமாரியாக குண்டுகள் எங்களை அண்மித்து விழுகின்றன..' -முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-02)

95shares
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 11-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உண்டியல் சந்தி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் உட்பட்ட 03 கிலோ மீற்றர் சுற்றளவுப் பகுதி, கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

பல்லாயிரம் தமிழ் மக்கள் நாளுக்குநாள் கொத்துக் கொத்தாக எரிந்த நிலையில் இறந்தும், துடி துடித்த நிலையிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

யாராலும் எழுந்து சென்று உதவ முடியாத நிலை. பதுங்கு குழிகளுக்குள் இருந்து மேலே ஏறினால் மரணம் என்கின்ற சூழல். மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் இன்றைய தினமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கேணல் சூசை அவர்கள் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான புலிகளின் குரல் வானொலியூடாக மக்களின் அவலநிலையை குறிப்பிட்டு உலக நாடுகள் போரை நிறுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்சி..

எழுந்து பார்த்தால் - எனது அயல் வீட்டு நண்பனின் தந்தை நேற்று பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் நடத்திய செல் தாக்குதலில் பலியாகி விட்டார், என எனது நண்பன் உட்பட குடும்பம், உறவுக்காரர் அனைவரும் கதறியழுகின்றனர்.

தூக்கத்தில் எழுந்த எனக்கு பெரும் அதிர்ச்சி! செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்.

இதுதான் எமது கடந்த கால யுத்த வரலாற்றில் நான் பார்த்த முதல் இனப்படுகொலை.

இவரின் இறுதிக் கடமைகள் மடுவில் இடம்பெற்று அவரது உடல் மடுவிலேயே புதைக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாட்கள் அப்பகுதியில் எந்த செல் தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா அரசு நடத்தவில்லை இதனால் நாளை வீட்டுக்குச் சென்று விடலாம் என பெரியவர்கள் கதைத்துக் கொண்டு உறங்க தயாராகிறார்கள்.

அப்போது சரமாரியாக குண்டுகள் எங்களை அண்மித்து சுமார் 200M தூரத்தில் விழுகிறது.

அந்த நாள் இரவு முழுவதும் இந்த செல் தாக்குதல் தொடர்கிறது, நித்திரை இன்றி மடு அன்னையை வேண்டிய படி அம்மாவின் மடியில் நானும் எனது சகோதரர்களும் படுத்திருக்கின்றோம்.

அன்றைய நாள் இப்படியே செல் சத்தத்துடனே தொடர்கிறது அடுத்த நாள் அதிகாலை 5.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டவுடன் எழுந்து தங்கள் தங்கள் வேலைகளை மக்கள் செய்து வருகின்றனர்.

நேற்றைய தாக்குதலுடன் திரும்பி வீடு செல்வோம் என்ற எண்ணம் பகல் கனவு ஆனது தொடர்ந்து யுத்தம் உக்கிரமடைந்தது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர் எனது பாடசாலையான மன். பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் மடுவில் தாற்காலிகமாக மரங்களுக்கு கீழ் இயங்கியது.

நாங்கள் காலையில் படிக்க செல்வது இராணுவம் தாக்குதல் நடத்த பாதியில் வீட்டுக்கு ஓடுவது என மூன்று மாதங்கள் இப்படியே உருண்டோதியது. இவ்வளவு காலமாக எமக்கு அண்மையில் விழுந்த செல்கள் தற்போது எமது பகுதியிலேயே விழத்தொடங்கியது.

நாங்கள் உட்பட அனைவரும் மடுக்கோயிலுக்குள் சரணடைந்தோம்.

மடு தேவாலயம் முழுவதும் கண்ணீருடன் மக்கள் கதறுகின்றனர். போர் உக்கிர நிலையில் நடந்து வருகிறது விடுதலைப் புலிகள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன் வாகன வசதிகளையும் வழங்கி இடப்பெயர்வுக்கு உதவி புரிகின்றனர்.

இராணுவம் தமிழர் மீது ஏவும் எறிகணைகள் எமது பகுதியில் சரமாரியாக விழுந்து கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக அயல் கிரமமான தட்சனாமருதமடு பகுதியில் குடியமர்கின்றோம். எம்முடன் சின்னப்பண்டிவிரிச்சான் மக்களும் தட்சனாமருதமடுவில் குடியமர்ந்தனர். சிலர் மட்டும் மடு தேவாலயத்தை பராமரிக்கும் பொருட்டு எறிகணைகளுக்கு மத்தியிலும் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் வசித்து வருகின்றனர்.

பெரியபண்டிவிரிச்சான் மாகா வித்தியாலயம், சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகள் தற்காலிகமாக தடசனாமருதமடுவில் இயங்கி வருகின்றது. அப்போது மடுவிலிருந்து பள்ளமடுவுக்கு மக்களின், மாணவர்களின் போக்குவரத்துக்காக தனியார் பேருந்து ஒன்றும் இயங்கி வந்து கொண்டிருந்தது. நான் பாடசாலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு அயலில் வசிக்கும் புதிய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை சிறிது தூரத்தில் பெரிய சத்தம்!

வழக்கமாக கேட்பதுதானே எங்கோ இராணுவம் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்கிறது என்று எனக்குள் புலம்பிக் கொண்டு விளையாட்டு தொடர்கிறது..

சிறிது நேரம் கழித்து நோயாளர் காவு வண்டி அதி வேகத்தில் மடுவை நோக்கி செல்கின்றது. என்ன நடந்தது? என வீதிக்கு வந்து விசாரித்தன் பின்தான் அறிந்தேன் சிறிது நேரத்தின் முன்தான் உலகையே உலுக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை...

இனப்படுகொலை தொடரும்...

முன்னய பாகம்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கியசாட்சியின் அனுபவப்பகிர்வு (பாகம்-1)

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!