ஸ்ரீலங்கா இராணுவத்தை இவ்வளவு வேகமாக கைப்பற்ற விடுதலைப்புலிகள் விடுவார்கள் என்று நினைக்கவில்லை- ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-05)

819shares
Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-5)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 14-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..

முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியது, கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் திரளாக இறந்துள்ளனர், பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, போதுமான மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார்.

எங்கும் மரண ஓலம், உலக வல்லாதிக்கத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், சோனியாகாந்தி, கருணாநிதி உட்பட்ட காங்கிரஸ் காரர்கள் கொண்டாடி வருகின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை, ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

எஞ்சிய மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கூட இல்லை.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி..

முழங்காவில் கடற்பரப்பால் இராணுவக் கடற்படை மோட்டார் தாக்குதல் மேற்கொண்டது இந்த எதிர்பாராத தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர், எங்களுக்கு பெரும் அதிர்ச்சி முழங்காவிலுக்கு வந்து சில மாதங்களில் மீண்டும் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இதற்கு மேல் செல்ல எங்களின் உடம்பிலோ, மனதிலோ பலம் இல்லையே, இருந்தாலும் உயிரைக்காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஒன்றும் செய்ய முடியாத நிலை மீண்டும் முழங்காவிலில் அமைத்திருந்த கொட்டகையை பிரித்துக் கொண்டு வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அக்கராயன் பகுதிக்குச் செல்கின்றோம்.

அங்கு சென்றால் பலபகுதி மக்கள் குறுகிய பகுதிக்குள் அடங்குவதால் அக்கராயனில் சிறிய கொட்டகை அமைப்பதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலை.

பல இடங்களில் தேடியும் இடங்கள் இல்லாததால் நீர், மலசலகூட வசதியில்லாத ஒரு காட்டுப்பகுதியை துப்பரவு செய்து அங்கே கொட்டைகை அமைத்து இருந்தோம்.

நான் பாடசாலை சென்று பலமாதங்கள், படிக்கக்கூடிய சூழ்நிலையும் இல்லை. மறுபுறம் சிலவுகளுக்கு பணம் இல்லை, வேலை இல்லாத சூழ்நிலை என்ன செய்வதென்று தெரியவில்லை குடும்பத்தில் வறுமை வாட்டுகிறது, எங்கு வேலைக்குச் செல்லலாம்? பணத்துக்கு என்ன செய்யலாம் என்ற பல யோசனைகளுடன் எனது குடும்பம் இருந்தது, நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது.

மடுவை கைப்பற்றியிருந்த இராணுவம் படு வேகமாக முழங்காவில் வரை ஊடுருவியது, இதன்போதும் சில எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டனர், விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகள் இராணுவத்தை உள்வாங்கி எதிர் தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் உலாவந்தன.

மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ மக்கள் அவர்கள் வாழ்கின்ற நாடுகளில் ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

தமிழ் நாட்டிலும் போரை நிறுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது இந்தப்போர் இன்னும் சிலமாதங்களில் நிறுத்தப்பட்டு விடும் மீண்டும் நாங்கள் வீட்டுக்குச் சென்று விடலாம் என்ற எண்ணம் அப்போதைய காலகட்டிடத்தில் எங்கள் மனங்களில் இருந்தது..

ஆனால் மீண்டும் கிடைத்தது ஏமாற்றமே.

யுத்தம் நிறுத்தப்படாது என்றும் போர் தொடரும் என்றும் அப்போதைய ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்ததுடன் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டு விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து சென்ற கருணா அம்மானின் ஆலோசனையுடன் தமிழர் தாயகத்தை சுற்றிவளைத்து ஒரே நேரத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேலான முப்படைகளுடன் தரை மார்க்கமாகவும், வான்வழியாகவும், கடல் மார்க்கமாகவும் அடுத்த கட்டத்தை நோக்கிய தீவிர யுத்தத்தை தொடர்ந்தது இராணுவம்.

அந்த சமயத்தில் மன்னார் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது.

மடுவை ஒருவருடமாக தக்கவைத்த விடுதலைப்புலிகள் முழங்காவில் வரை இராணுவத்தை இவ்வளவு வேகமாக கைப்பற்ற விடுதலைப்புலிகள் விடுவார்கள் என்று மக்களும் நினைக்கவில்லை, ஸ்ரீலங்கா இராணுவமும் நினைத்திருக்காது.

இருந்தாலும் மடு, பெரியமடுப் பகுதிகளை கடந்தால் முழங்காவில் பகுதிவரை காடுகள் அற்ற பகுதிகள் என்ற காரணத்தால் யுத்தம் நடத்த முடியாத சூழல் இருந்ததையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இருந்தும் மீண்டும் இராணுவத்தின் எறிகணைகள் எம்மை அண்மித்து விழத்தொடங்கியதால் நாங்கள் அக்கராயனில் இருந்து வட்டக்கச்சி மாயவனுர் பகுதிக்குச் சென்று குடியேறினோம், இந்நிலையில் அடுத்து முழங்காவில் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகளின் கோட்டையாக இருக்கும் கிளிநொச்சியை இராணுவத்தரப்பு நெருங்க முடியாது என நினைத்த எமக்கு கிடைத்தது பெரும் அதிர்ச்சி..

இனப்படுகொலை தொடரும்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்- 2)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்- 3)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்- 4)

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!