தமிழர் சமுதாயப் பிரச்சினைகளை பிரக்ஞைபூர்வமாக நோக்கிய எழுத்துச் சித்தன்!

2shares
Image

பாலகுமாரன் போன்ற பெரிய எழுத்து மேதைகளின் படைப்புக்களின்மீது ஒரு காலத்தில் இருந்த வெறித்தனமான ஈடுபாடுகளுக்கெல்லாம் அம்மாவின் வாசிப்பு ஆர்வமே காரணமென்பேன். வீட்டில் இருந்த பழைய கல்கி, விகடன் போன்ற சஞ்சிகைகளும் விடுதலைப் புலிகளின் வெளிச்சம் முதலான சஞ்சிகைகளும், அதுமட்டுமன்றி ராணி காமிக்ஸ் முதலான கதைப் புத்தகங்களும் பெரிய பெரிய நாவல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டின.

நல்ல ஞாபகம் இருக்கிறது 1995இல் வலிகாமத்தைவிட்டு இடம்பெயர்ந்து செல்வதற்கு முதல் வீட்டில் ஏராளமான சஞ்சிகைகள் உட்பட பெரிய பெரிய நாவல்கள் மூட்டை மூட்டையாக இருந்தன. அவற்றை பக்கத்து சொந்தங்களுடன் பணியாரங்கள் பரிமாறுவதுபோல் பகிர்ந்து பகிர்ந்தே வாசிப்பார்கள். முன்னேறிப் பாய்ச்சல் சண்டையின்போது சில புத்தகங்கள் இராணுவத்தால் சிந்தப்பட்டுக் கிடந்தன. சூரியகதிர் சண்டையின்போது ஒட்டுமொத்தமாக விட்டு ஓடிய பல புத்தகங்களை கறையான் காவுகொண்டது.

ஒருமுறை 1978ஆம் ஆண்டு வெளிவந்த விகடன் சஞ்சிகையில் பாலகுமாரனின் கதை ஒன்று படிக்க நேர்ந்தது."கதை கதையாம் காரணமாம்" என்ற கதை அது. தொட்டாற் சிணுங்கி செடி ஏன் தொட்டதும் சுருங்குகின்றது என்பதற்கான கதை. அகலிகைக்கு இந்திரனால் நேர்ந்த கொடுமையை தடுக்கக்கூடிய வலுவிருந்தும் பேசாமல் வேடிக்கை பார்த்த தொட்டாற் சிணுங்கியின் செயலுக்கு கிடைத்த தண்டனையை அழகான சொல்லோவியங்களால் அன்னார் படைத்திருந்தார்.

அந்த கதையுடனே யார் இந்த பாலகுமாரன் என்ற பித்து பிடித்து, இருந்த விகடன் சஞ்சிகை அனைத்தையும் கிண்டிக் கிளறி நாசி அரித்து தடிமன் பிடித்ததுதான் மிச்சம். மெர்க்குரிப் பூக்கள், கங்கை கொண்ட சோழன் அந்த பாத்திரங்களாகவே வாழவைத்த நாவல்கள்.

இன்னும் ஞாபகத்தில் நிற்கும் சில நாவல்களாக, மனக்கோயில், நெல்லுச்சோறு, கர்ணனின் கதை, உடையார் இப்படி பல...

பொதுவாக பாலகுமாரனின் சரித்திர நாவல்களில் ஏனைய எழுத்தாளர்களை விஞ்சிய தனித்துவம் இருக்கும். அரசிற்கு கொடுக்கும் முக்கியத்துவங்களைவிட மக்களுக்கு கொடுத்திருப்பார். சகுனி வேலைகள் எப்படியெல்லாம் அரங்கேறுகின்றன என்று வரலாற்றை மீறிய மிகைப்படுத்தல்களுக்கெல்லாம் பாலகுமாரன் மினக்கெடமாட்டார். மன்னர் காலத்திலிருந்த சமூக அடுக்கமைவுகள், போர்கள் அதில் ஈடுபடாத பெண்களுக்கு கொடுத்த தாக்கங்கள் பற்றி யதார்த்தமாக எழுதியிருப்பார்.

மூவேந்தர்களில் சோழருக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் பாதிக்குப் பாதியைக்கூட சேரருக்கோ பாண்டியருக்கோ கொடுத்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். பிற்காலச் சோழர்களின் பினாமியாக இருப்பாரோ என்று என்னளவில் பலநாள் எண்ணியதுண்டு. அதற்கு காரணமும் உண்டு, குறிப்பாக ராஜராஜ சோழன், மற்றும் ராஜேந்திரசோழன் ஆகிய சக்கரவர்த்திகளின் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே பாலகுமாரன் பெரும்பாலும் பின்பற்றியிருக்கிறார்.

முதல் யுத்தம், கவிழந்த காணிக்கை, இனிய யட்சிணி, என்னருகில் நீ இருந்தால், மாக்கோலம், நந்தாவிளக்கு, ராஜகோபுரம் முதலானவை அவை சார்ந்தவையே.

நந்தாவிளக்கு நாவல் ஒருமுறை படித்தபோது ராஜேந்திர சோழன்மீது கோவம்தான் வந்தது. அவன் மீதுள்ள விசுவாசத்தால் போர் வீரர்களின் கண்ணை மறைத்த பெண்ணாசை மற்றும் மண்ணாசை. ஆண்கள் எப்பொழுதும் போரை விரும்புபவர்களாக இருந்து வெற்றி மமதையில் இருந்ததாலோ என்னமோ தென்கிழக்காசியாவையே ஆண்ட பிற்காலச் சோழர் சாம்ராஜ்யம் இஸ்லாமிய படையெடுப்புக்களால் சின்னாபின்னமானது?

ஒரு கல்வெட்டை வைத்தே பாலகுமாரன் கதை எழுதும் வல்லமை உள்ளவர். அதேபோல அவரது ஒரு கதையை வைத்தே ஆயிரமாயிரம் கேள்விகளால் புதிய கதைகளை வாசகர்களால் உருவாக்கமுடியும். பாலகுமாரன் கதைகளை ஆழமாக நோக்குவோர் இந்த அனுபவத்தை பெற்றிருப்பர்.

ஒரு படைப்பாளன் சமூகத்தின் பிரச்சினைகளை எவ்வாறு பிரக்ஞைபூர்வமாக நோக்குகிறான் என்பதற்கு பாலகுமாரன் நாவல்களே சாட்சி. பிரச்சினை ஒன்றைச் சுட்டிக்காட்டி அதற்குரிய தீர்வினை வாசகர்களிடமே விட்டுவிடும் பாங்கு பாலகுமாரன் அவர்களிடம் நிறையவே உண்டு.

இன்று அன்னார் இந்த உலகைவிட்டு நீங்கினாலும் அவரின் படைப்புக்கள் அனைத்தும் காலத்தால் பேணப்படும்!

-Shanmugarasa Vadivel-

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!