முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை; ஒளிந்து கொண்ட தமிழ் தலைமைகள்: முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு: பாகம்- 8 (இறுதி பதிவு).

28shares
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் இறுதிக்கட்ட போரான 2009-ஆம் ஆண்டு 05-ம் மாதம் 17-ம் திகதியும், அதற்குப் பிற்பட்ட திகதிகளிலும் நடந்தது இதுதான்..

17-ம் திகதி கடும் சமர் நடைபெற்றது, ஏராளமான மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர், உலகமே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், புலம்பெயர் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கதறுகின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப்போய்ப் இருந்தனர், மாறாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் நம்பியிருந்த தமிழ்மக்களின் அழிவிற்கு துணை போனார்கள், ஈழ மக்கள் ஓட்டுப்போட்டு அனுப்பிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஓடி ஒளிந்ததாக கூறப்பட்டது, இலங்கையில் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருந்த மக்கள் வெளியில் வரமுடியாத நிலையில் தவித்தார்கள்.

இப்படியான சூழ் நிலையில் பல மக்களையும் கொன்று குவித்து 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியை கைப்பற்றியதாகவும், விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாகவும் உலகிற்கே அறிவித்தார்கள் ஸ்ரீலங்கா அரச படை, ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்தார்கள்,தென்னிலங்கையில் இருந்த சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரும் வெடிவெடித்தும், இனிப்புக்கள் பரிமாறியும், பால்ச்சோறு கொடுத்தும் கொண்டாடினார்கள்.

உலக தமிழ்மக்கள் அனைவரும் கத்தினார்கள், கதறினார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்ததோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் எங்கே என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீலங்கா அரச படை அறிவித்தது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலைக் கைப்பற்றி விட்டதாகவும், கருணா அம்மான் தலைவர் பிரபாகரனின் உடல்தான் என உறுதிப்படுத்தியதாகவும் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்கள்.

உலகமே அதிர்ந்தது, தமிழர்கள் இந்த தகவலை ஏற்க மறுத்தார்கள், இந்த தருணத்தில் தமிழகத்தில் இருந்து வெளியான நக்கீரன் இதழ் தலைவர் பிரபாகரன் இறந்ததை தலைவர் பிரபாகரனே தொலைக்காட்சி வழியாக பார்ப்பது போல் உள்ள புகைப்படத்தை இதழின் அட்டைப்படமாக பிரசுரித்து தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என செய்தி வெளியிட்டது, இதனால் தமிழகத்திலும், உலக முழுவதிலும் நடக்கவிருந்த பாரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது அல்லது அன்றையதினம் உலகமே ஸ்தம்பிக்கும் சூழ் நிலையிருந்தது, இன்றுவரை தலைவர் பிரபாகரனின் நிலை தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்றது.

தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் கடந்த நிலையில். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் எனவும், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், பாலச்சந்திரன் உடலின் ஒளிப்படமும் வெளியானது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

அத்துடன் உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா அரச படையிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீவரத்னம் புலத்தேவன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பின்னாளில் தகவல்கள் வெளியானது, அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவும் மற்றும் பல போராளிகளும் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீவரத்னம் புலத்தேவன் ஆகியோர் வட்டுவாகல் பாலத்தில் வைத்து மே மாதம் 18 ஆம் திகதி 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைலாகு கொடுத்ததை கண்ணால் கண்ட சாட்சிகளும் இருப்பதாகவும், அவர்கள் இந்த சாட்சிகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் நேரடியாக தெரிவித்திருப்பதாகவும், இவ்வாறு சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் 58 ஆவது படையணியினரால் பின்னர் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஸ்ரீலங்கா அரசபடைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் உறுப்பினர்களின் நிலை, கடந்த யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குலிருந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் நிலை தொடர்பில் இதுவரைக்கும் எந்த நீதியும், எந்த தீர்வும் இன்றி தமிழ் தலைமைகளில் நம்பிக்கையிழந்த நிலையில் தமிழ் மக்கள் இன்றுவரை வீதியில் நிற்கின்றமை அனைத்துலகமும் அறிந்ததே.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி.,

மாத்தளனை கைப்பற்றியதுடன் அடுத்து 3 கிலோ மீற்றர் சுற்றளவு பகுதிக்குள்த்தான் வட்டுவாள், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் இருக்கின்றது, இந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குள்தான் நாங்களும் இருக்கின்றோம். ஒருமாத காலமாக நாங்கள் இங்கு உணவின்றி, தூக்கமின்றி, குடிநீர் இன்றி எறிகணைக்கு மத்தியிலும், துப்பாக்கி ரவைகளுக்கு மத்தியிலும் பலதுன்பங்களின் மத்தியில் காலத்தை கடந்து வருகின்றன நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 16-ம் திகதி இரவு இரட்டை வாய்க்கால் பகுதியை இராணுவம் கைப்பற்றிய நிலையில், 17-ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியையும் இராணுவம் நெருங்கியது.

நாங்களும் இனி எங்கேயும் போகமுடியாத நிலையில் வெள்ளைக்கொடியுடன், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் கொத்துக்கொத்தாக இறந்து கிடக்கும் எம் உறவுகளைக் கடந்து மனக்கனத்துடன் இராணுவத்திற்குள் சென்றோம், எங்களை கண்ட இராணுவம் அழைத்து நாங்கள் வைத்திருந்த கை பைகளை திறக்கும் படி சொன்னார்கள், நாங்களும் துறந்து காட்டினோம் பின்னர் கவசவாகனத்தில் எங்களை ஏற்றிச் சென்று இரட்டை வாய்க்கால் பகுதியில் இறக்கினார்கள் பின்னர் எங்களை பெண்கள் ஒருபக்கம், ஆண்கள் ஒருபக்கம் என வரிசைப்படுத்தி அவர்கள் மண் மூடைகளின் பின் நின்றுகொண்டு ஆண்களை ஆண் இராணுவமும், பெண்களை பெண் இராணுவமும் உடல் ரீதியாக சோதனையிட்டார்கள்.

தொடர்ந்து நூடில்ஸ், பிஸ்கட் போன்ற உணவுகளை தந்துவிட்டு இரவு முழுவதும் அங்கேயே இருக்க வைத்தனர், பின்னர் இரவு 10 மணியளவில் பேருந்தில் ஏறிச்சென்று ஓமந்தை சோதனைச்சாவடி பகுதியில் இரவு முழுவதும் வீதியில் தங்க வைத்து, காலையில் இராணுவத்தின் ஆளுகைக்குள்ளே காலைக் கடனை முடித்த நிலையில் மீண்டும் காலை 1.00 மணியளவில் செட்டிகுளப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சுற்றிவரை முள்வேலி அமைத்திருந்த இராமநாதன் முகாமுக்கு ஏறிச்சென்று தங்கவைத்தார்கள், அங்கும் அடிக்கடி எமது தனிப்பட்ட தகவலை விசாரணை செய்து சேகரிப்பார்கள், இதற்கு மத்தியில் மிருகங்கள் போல் பல மாதங்கள் முள் கம்பிகளுக்குள் வாழ்ந்தோம்.

அதற்குப்பிறகு எமது சொந்த ஊரான பெரியபண்டிவிரிச்சான் மீள் குடியேற்றப்பட்ட நிலையில், கடந்த கால துயர சம்பவங்களின் பாதிப்பில் இன்னும் பல துன்பங்களின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என அவர் தனது அனுபவத்தை எம்முடன் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்