வென்றவன் எழுதப் போகின்ற வரலாற்றில் நாம் யார் ?

122shares

யாழ் நூலக எரிப்பினை நினைவுகூர்ந்து ஐ.பி.சி தமிழ் பத்திரிகையில் இதழ் 16 எழுதப்பட்ட கட்டுரை இது. எழுத்து : சுதன்ராஜ்

யாழ் நூலகத்தின் மீதான சிங்கள பேரினவாதத்தின் 'கண்' என்பது, தமிழர்களின் கல்வி ஆளுமை மீதான காழ்ப்புணர்வின் ஒரு வெளிப்பாடுதான்.தமிழர்களின் 'மூளை'யை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் அறிவியல் - கல்வி ஆளுமையினை குறைத்துவிடலாம் என ஒரு பார்வையும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அன்று இருந்துள்ளது என்பது பின்னராக பல்வேறு கட்டங்களில் வெளிப்பட்டு இருந்தது.

எரியூட்டப்பட்ட நூலகத்தின் எச்சங்களும் மிச்சங்களும் சிங்கள அரசுக்கு ஒருவகையான கரும்புள்ளிதான்.எரியூட்டப்பட்ட நூலகத்தை புனரமைத்து தன்மீதான கரும்புள்ளிக்கு வெள்ளையடித்தது சிறிலங்கா அரசு.இது சில ஆண்டுகளுக்கு முன்னரான கதை. தற்போது புதிய கதையொன்றினை சிறிலங்கா அரசு தற்போது புனைய முற்பட்டுள்ளது.

மனிதாபினமானத்துக்கான போர், பயங்கரவாதத்துக்கான போர் என தமிழர்கள் மீதான தனது இனஅழிப்பு போருக்கும், தமிழர் தேசத்தின் மீதான ஆக்கரமிப்பு போருக்கும் பெயர்களைச் சூட்டியிருந்த சிங்கள பேரினவாதம், தற்போது இக்கதைகளுக்கும் தனது பாடத்திட்டங்கள் வழியே 'வெள்ளை' அடிக்க முனைகின்றது.

அதாவது இரத்தம் தோய்ந்த தனது கரங்களை கழுவ நினைக்கின்றது.

'நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை சிறிலங்கா அரசும், ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும்.பாரிய தியாகங்களைச் செய்து தான், விடுதலைப் புலிகளை 2009 இல் சிறிலங்கா ஆயுதப்படையினர் தோற்கடித்தனர். போர் வீரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலைக்குரியது' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை தமிழர் தேசம் நினைவேந்திக் கொண்டிருக்க, மறுவளம் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பினது சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதுவாகும்.

வென்றவன் எழுதிய வரலாறுகளால் உலகம் நிரப்பி கிடக்கின்றது. அவன் எப்படி வென்றான் ?எத்தகைய தந்திரங்களை செய்து வென்றான் ? எத்தனை அறங்களை மீறினான் என்ற கேள்விகளுக்கு அப்பால் வென்றவன் வென்றவனோடு கூட்டுச் சேருகின்ற இன்றயை அரசுகளின் உலகில், அடக்கப்பட்ட அழிக்கப்பட்ட இனங்களின் இரத்தம் தோய்ந்த வரலாறுகளில் ஒன்றாக ஈழத்தமிழினமும் உண்டு.

அவ்வகையில் தன்மீது படிந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் மீது வெள்ளையடிக்க முனையும் வகையிலேயே சிறிலங்கா அரசுத்தலைவரின் உரையின் அப்பகுதி தெளிவாக எடுத்தியம்பி நிற்கின்றது.அதாவது சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக முனைக்கின்ற சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி இது.

அவ்வகையில்தான் 'சிறிலங்காவின் கல்வித்திட்டத்தில் மாற்றங்களை விரைவில் கொண்டு வர இருக்கின்றோம்' என்ற சிறிலங்கா அரசின் அறிவிப்பினை இலகுவாக கடந்து விடமுடியாது.

இலங்கைத்தீவு முழுவதும் சிங்களவர்களுக்கே என்ற நிலைப்பாட்டில், தனது பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துகின்ற சிறிலங்கா அரசின் ஒரு பகுதியாக பாடத்திட்டங்களும் அமைகின்றன.சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஓர் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இது உள்ளது.

அதாவது 'வென்றவன் எழுதுவதுதான் வரலாறு' என்பதாக தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பையும் இனஅழிப்பையும் 'நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும் ' என்பதாக இனஅழிப்பபை செய்வர்களை போர் வீரர்களாகவும், இனஅழிப்பில் இருந்து தம் மக்களை காப்பாற்ற போரிட்டவர்களை தீவிரவாதிகளாகவும் காட்டுகின்ற ஒரு பேச்சாக மைத்திரியின் உரை அமைந்திருந்தது.

இந்நிலையில் வென்றவன் எழுதப் போகின்ற வரலாற்றின் ஓர் அங்கமாக தனது கல்வித்திட்டத்தின் ஊடாக பாடத்திட்டங்களில் மாற்றங்களை செய்யப்பபோகின்ற சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலினை , தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இங்கு கேள்வி ?

இன்றைய சூழந்நிலையில் சிறிலங்கா அரசின் கல்வித்திட்டத்துக்குள்தான் தமிழர்களின் கல்வியும் அமைந்துள்ளது.

இதன் பாடத்திட்டங்கள் எந்த நோக்கு நிலையில் இருந்து உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கு நிலையே தமிழர் கல்வியின் நிலை.அதாவது எது பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றதோ, அதுவே கல்வியாக அமைகின்றது. சிறுவர் நிலையில் இருந்து படிநிலையாக இவைகள் அமைகின்றன.

இந்நிலையில், சிறிலங்கா அரசு கூறியுள்ள மாற்றம் என்பது எத்தகை தாக்கத்தினை எமது எதிர்கால தலைமுறையிடத்தில் ஏற்படுத்தப் போகின்றது என்பதனை நோக்கலாம்.

1995ம் ஆண்டு விடுதலைப்புலிகள் வன்னிக்கு இடம்பெயர்ந்த பிற்பாடு, யாழ்பாணத்தில் பிறந்தவர்கள் நேரடியாக புலிகளையோ, அல்லது போராட்ட வாழ்வியல் சூழலைக் கண்டவர்கள் அல்ல. மாறாக முற்றுமுழுதாக சிறிலங்கா இராணு மயத்துக்குள் வளர்ந்தவர்கள்.அந்த தலைமுறையின் எவ்வாறு வளர்ந்து நிற்கின்றது என்பதனை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. யாழில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருந்து பல்வேறு சமூகச்சீர்கேடுகளை ஆய்ந்து பார்த்தால் வளர்ந்த சூழலின் பின்னணி தெரிகின்றது.

இது அவர்களுடைய தப்பல்ல. அது அவர்களின் சூழல்.

இவ்வாறு சிறிலங்கா தன்னை நியாயப்படுத்தும் பாடத்திட்டங்களுடன் தனது நோக்கு நிலையில் இருந்து மாற்றங்களை கல்வியில் மேற்கொள்ள இருக்கின்றது.

இந்தக்கல்வியும், அதன் வழிப்பாடத்திட்டங்களும் எமது தலைமுறையிடத்தில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போல் அமைய இருக்கின்றது.

பெயரளவில் தமிழர்களின் உணர்வுகளையோ வெளிப்படுத்த கூடிய அரசியல் களமாக இருக்கின்ற வட மாகாணசபை இந்த விவகாரத்தினை எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

சிறிலங்காவின் அரசியலமைப்புக்குள் உட்பட்ட ஒரு அமைப்புத்தான் வட மாகாண சபை. சிறிலங்கா அரசின் கட்டமைப்பினை மீறி சிறிலங்காவின் கல்வித்திட்டத்திலோ அல்லது பாடத்திட்டதிலோ வட மாகாண சபையினால் ஏதும் செய்துவிட முடியாது.

இந்நிலையில் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து 'தமிழர் கல்வியை' எமது தலைமுறைக்கு கொடுக்கின்ற ஒரு பொறிமுறையினை தமிழர் அறிவுசார் கூட்டம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும்.

தமிழர் தாயகத்தில் கிராமங்கள் தோறும் இருக்கின்ற சனசமூக நிலையங்கள் ஊடாகவும், தனியார் கல்விக்கூடங்கள் ஊடாகவும், கலை, இலக்கிய, பரப்புக்கள் ஊடாகவும் இவற்றினைக் கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகளை காண வேண்டும்.

இதற்கு புலம்பெயர் தேசங்களில் இயங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், ஒன்றியங்கள் இச்செயற்திட்டத்தில் பெரியளவிலான பங்கினை ஆற்ற முடியும்.

வெள்ளம் வரு முன் அணைகட்டத்தவறின், வருகின்ற வெள்ளம் எமது வரலாற்றை வழித்து துடைத்து சென்றுவிடும்.பின்னர் வென்றவன் எழுதப் போகின்ற வாரலாற்றில் நாம் யார் என்பதனை இன்றே சிந்தித்து கொள்ளுங்கள்.இல்லையேல் தோற்றவனின் நோக்கு நிலையில் இரு வரலாற்றை எழுதுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!