குற்றம்சாட்டப்பட்டுள்ள STF 56 பேருக்கு என்ன செய்தீர்கள்? ஐ.நா விடம் கேள்வி!

21shares
Image

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைந்து பணியாற்றிவரும் ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படை பொலிசாரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தாதது குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபை மீது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் STF என்ற விசேட அதிரடிப்படை பொலிஸ் படையணியைச் சேர்ந்த 56 படையினரின் பெயர் விபரங்கள் அடங்கிய ரகசிய பட்டியலொன்றை மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தது.

இந்த ரகசிய பெயர் பட்டியல் கையளிக்கப்பட்டு ஒரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று பிரித்தானியா அவுஸ’திரேலியா கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து கேள்வி எழுப்பியிருக்கின்றன.

ஸ்ரீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தயாரித்த ஐ.நா அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகா தலைமையிலான ஸ்ரீலங்காவின் உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச செயற்திட்டமான ITJP யினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் STF அதிகாரிகள் 56 பேரினது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றும் ஐ.நா அமைதிகாக்கும் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த பெயர் பட்டியலில் உள்ள STFஅதிகாரிகள் தொடர்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் எடுக்கப் போகின்றீர்கள் என்றும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் தலைமை அதிகாரியிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள STFஅதிகாரிகளின் மனித உரிமை நடவடிக்கைகள் தொடர்பான பின்னணி மிகவும் மோசமானதாக இருப்பதாலுயே இந்தக் கேள்வியை தொடுப்பதாகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழர்களுக்கு எதிரான வழக்குகள் அற்ற படுகொலைகள், கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை பொறுப்புக்கூறப்படவில்லை என்றும் ஐ.நா அமைதிகாக்கும் படையணியின் தலைமை அதிகாரி ஜோன் பியே லக்ருவோவிற்கு புலம்பெயர்தமிழ் அமைப்புக்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

ஸ்ரீலங்காவின் மத்திய பிரதேசமான கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு முஸ்லீம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுடனும் STFஇனருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அவர்களுக்கு ஸ்ரீலங்காவில் வழங்கப்பட்டுள்ள தண்டனை முக்தியே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய STFஅதிகாரிகளுக்கு சன்மானம் வழங்குவதாகவே அவர்களை ஐ.நா அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள STF அதிகாரியொருவர் ஆபிரிக்க நாடொன்றில் பணியாற்றும் ஐ.நா அமைதிகாக்கும் படையணியில் முக்கிய பதவியொன்றை வகித்து வருகின்றார். இந்த அதிகாரியின் பெயர் விபரங்களையும் ITJPஐஐ.நா அமைதிகாக்கும் திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ள ரகசிய ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளது.

இந்த STF அதிகாரியை உடனடியாக ஸ்ரீலங்காவிற்கு திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள், மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா படை அதிகாரிகளை ஐ.நா அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்வதும் பாரதூரமான குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா படையினர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய முன்கூட்டிய ஆய்வை இன்னமும் முறையாக மேற்கொள்ள முடியாததையே எடுத்துக்காட்டுவதாகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோடிகாட்டியிருக்கின்றன.

அதேவேளை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ள DOO என்றழைக்கப்படும் வெளிநாட்டு படை நடவடிக்கைகளுக்கான பணியகம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா தலைமையிலான ஸ்ரீலங்கா இராணுவத்தின் DOO பணியகத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகளின் மனித உரிமை பின்புலம் தொடர்பில் முன்கூட்டிய விசாரணை நடத்தப்பட்டதாக என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் வினவியுள்ளன.

ஐ.நா அமைதி காக்கும் படையணிக்கான படையினரை தெரிவு செய்யும் மிகவும் முக்கியமான கடமையை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் DOO பணியகத்தின் அதிகாரிகள் முன்கூட்டிய ஆய்விற்கு உட்படுத்தப்படாதவர்களாக இருப்பின், அது மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் அமெரிக்க தமிழ் சங்கம், பேர்ல் மற்றும் அமெரிக்கா தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழு ஆகியன இணைந்து அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை ஐ.நா அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பி வைப்பதன் ஊடாக ஸ்ரீலங்கா அரசு இதுவரை 161 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்