'திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1)

536shares
Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 10-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் 03 கிலோ மீற்றர் சுற்றளவுப் பகுதி, கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

பல தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக எரிந்த நிலையில் இறந்தும், துடி துடித்த நிலையிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், சுடுகாடாகா கிடக்கின்றது இந்தக் கிராமம்.

யாராலும் எழுந்து சென்று உதவ முடியாத நிலை. தலை தூக்கினால் மரணம் என்கின்ற சூழல்.

நாளை இந்த நிலை மாறுமா? சர்வதேசம் இந்த இனப்படுகொலையை இப்போதாவது நிறுத்துமா- என்ற கேள்விகளோடு ஈழத் தமிழ் மக்களின் இன்றைய பொழுது முடிகின்றது பதுங்கு குழிகளுக்குள்.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

மன்னார் மாவட்டத்தின், மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உலகப் புகழ் பெற்ற மடு மாதா தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட அழகிய வளமான கிராமம்தான் பெரிய பண்டி விரிச்சான்.

2007-ம் ஆண்டு பங்குனி மாதம் அப்போது எனக்கு 15-வயது ஸ்ரீலங்காவில் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ள நிலையில் பல அரசியல் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் யுத்தம் நடைபெறவுள்ளதாகவும் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதையும் காதில் வாங்காமல் வழக்கம் போல் பாடசாலைக்குள் புதிய வகுப்பில் நுழைந்து சில மாதங்களான நிலையில் சந்தோசமாக, சுதந்திரமாக சிட்டுக் குருவிகள் போல் பல கனவுகளுடன் பயணித்துக்கொண்டிருந்தேன்.

எனக்குப் பிடித்த தமிழ் பாடத்தை எனக்குப் பிடித்த ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போதுதான் அயல் பகுதியில் ஏதோ பெரிய வெடிப்புச் சத்தம்!

தொடர்ந்து சில நிமிடங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தது. செய்வதறியாது நானும் சக மாணவர்களும் ஓலமிட்டு கதறுகிறோம். ஆசிரியரோ "அனைவரும் கீழே விழுந்து படுங்கள்.." என சத்த மிடுகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இந்த சத்தத்தை இப்போதுதான் முதன் முதலாக கேட்கின்றேன்.

கொஞ்ச நேரத்தில் எனது அம்மா உட்பட சக மாணவர்களின் பெற்றோரும் அலறியடித்துக் கொண்டு பாடசாலைக்கு ஓடி வருகின்றனர்.

அம்மா என்னை கட்டியணைத்த படி என்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

அப்போது வீதி எங்குமோ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் அதிவேகத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நடப்பதை பார்த்த படி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் பாடசாலை 10.00 மணிக்கே விட்டு விட்டது வீட்டுக்கு போய் நண்பர்களுடன் விளையாடலாம் என நினைத்துக் கொண்டு ஒருவித மகிழ்ச்சி பொங்க வீட்டிற்கு செல்கின்றேன்.

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் அப்பாவும் வேலைக்குச் சென்ற அண்ணாக்களை கூட்டிக் கொன்று வீட்டிற்கு வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக கையில் கிடைத்த பொருட்களை தூக்கிக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நாங்கள் உட்பட எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் மடுவிற்குச் சென்று சின்ன குடிசை ஒன்றை போட்டு அங்கேயே அந்த நாளின் இரவுப் பொழுதில் எந்த வெடிச் சத்தமும் இல்லாமல் உறங்கி விட்டோம்.

திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...

இனப்படுகொலை தொடரும்....

-ந.ஜெயகாந்தன்.

Photos: K.Suren

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!