வடக்கில் தமிழ் மக்களை சுரண்டுகின்றது சிறிலங்கா ராணுவம் - தெற்காசிய மையம் குற்றச்சாட்டு

321shares

வடக்கில் சிறிலங்கா இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபார மற்றும் விவசாய நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்ட சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் புதிதாக வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையொன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் தமிழர் தாயகமான வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் சிறிலங்கா இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வியாபார மற்றும் விவசாய நடவடிக்கைகளை உடனடியாக அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் எந்தவொரு பொருளாதார செயற்பாடுகளும் இல்லாத பிரதேசத்தில் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ள அதிகாரமும் - இலாபமும் என்ற தலைப்பில் அமைந்த 46 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கை ஒன்றை சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் வெளியிட்டிருக்கின்றது.

சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணி ஆகிய அரச படைக் கட்டமைப்புக்கள், ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதிகள், களியாட்ட நிலையங்கள் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டி வருவதாகவும் அந்தப் புதிய அறிக்கை கூறுகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் பெரும் எண்ணிக்கையிலான படை கட்டமைப்புக்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு, படையினரை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, படையினருக்கான சம்பளம் உட்பட படை கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் செலவீணங்களை திரட்டி வருவதாகஇந்த புதிய அறிக்கை விரிவாக தெளிவுபடுத்துகின்றது.

எவ்வாறாயினும் அரச சேவைகளுக்குள் இருக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படைக் கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பம் வியாபாரங்கள் தொடர்பிலான முறையான கணக்காய்வுகளோ அல்லது மீளாய்வுகளோ மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அரசினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதிகாரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் படையினரின் இந்த வியாபார நடவடிக்கைகள், சந்தையை முழுமையாக விகாரமாக்கி சாதாரண மக்கள் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பை முற்றாகவே மறுப்பதாகவும்; அந்த அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெறும் அனைத்து அரச நிறுவனங்களும் அரச கணக்காய்வாளரின் முழுமையான கண்காணிப்புக்குள் உட்பட்டதாகவே இருக்கின்ற போதிலும் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வியாபாரங்கள் கணக்காய்வுக்கு உட்படாததாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணி போன்ற அரச படையினரால் நடாத்தப்பட்டுவரும் விடுமுறை விடுதிகள் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் பண்ணைகள் ஆகியன, அவர்களின் தேசத்தை பாதுகாக்கும் கடமையுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என்றும் அந்த சட்ட மையம் கூறுகின்றது.

அதேவேளை அரசின் வரவு செலவுத் திட்டத்தினால் கிடைக்கும் அதிக நிதி ஒதுக்கீடுகளையும், அரசின் வளங்களையும் பயன்படுத்தி அரச படையினர் தமது சந்தைப் போட்டியாளர்களாக சாதாரண மக்களை முழுமையாக ஓரங்கட்டியுள்ளதாகவும் சட்ட மையம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அரசினால் கிடைக்கும் சம்பளம் ,நிலம், உபகரணங்கள், வாகனங்கள் அவற்றுக்கான எரிபொருட்களையும் அரச படையினர் பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவிக்கும் சட்ட ஆய்வு மையம், 2010 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சிறிலங்கா இராணுவம் நடத்திவரும் தல்செவன நட்சத்திர சுற்றுலா விடுதி இதில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை வடக்கில் பொது மக்களினதும் அரசினதும் பல்லாயிரக் கணக்கான காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள அரச படையினர் அங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக 200 மடங்கு இலாபம் ஈடு்டிவருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதற்குப் பின்னர் வன்னியில் நிலைகொண்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணி விவசாயப் பண்ணைகள் மூலம் மாத்திரம் பல கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் சடட ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

சிவில் பாதுகாப்புப் படையணியின் வருடாந்த அறிக்கைகளுக்கு அமைய 2014 ஆம் ஆண்டு 371 தசம் 5 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ள அந்த படையணி, 2016 ஆம் அண்டு இந்த இலாபம் 821 தசம் எட்டு மில்லியனாக அதிகரித்துக்கொண்டுள்ளது. தேசத்தின் அபிவிருத்திக்க உச்ச அளவில் தமது பங்களிப்பை வழங்குவதே பிரதான குறிக்கோள் என்றும் சிவில் பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் விடுத்துள்ள அறிக்கையில், வறுமையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிலைநிறுத்தப்படடுள்ள சிவில் பாதுகாப்புப் படையணிகள் போரினால் கணவன்மாரையும் பெற்றோரையும் இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களை தமது தொழில்படைகளாக இணைத்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகின்றது.

எனினும் சிவில் பாதுகாப்புப் படையணியுடன் இணைந்து செயற்படும் சாதாரண மக்களின் அனைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதுடன் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே போரினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக இராணுவம் உட்பட அரச படையினரின் முழுமையான கட்டுப்பாடுகளில் இருந்து மீட்டு, படையினர் வசமிருக்கும் வியாபாரங்களை அரசாங்கமோ அல்லது தனியார் துறையினரிடமோ ஒப்படைத்து முழமையான பொருளாதார இலாபமும் மக்களை சென்றடையச் செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!