இராணுவ சீருடையில் ஜி- 3 யுடன் நின்ற பிரபாகரனும் யன்னலால் விடுப்புபார்த்தவரை சிங்களத்தில் அதட்டிய விக்டரும்

  • Prem
  • July 24, 2018
502shares

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் பெரியதாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுவது குறித்த தகவல் ஒன்று அப்போது யாழ்படைத்தளபதியாக இருந்த பிரிகேடியர் பல்தசாருக்கு கிடைத்திருந்தது.

இதனால் புலிகள் இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்த முன்னர் தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் பல்தசார் மற்றும் முனசிங்கா ஆகியோர் தமது தரப்பில் ஒரு கூட்டு ஏற்பாட்டு திட்டத்தை தயாராக்கினர். கோண்டாவில் பகுதியில் செல்லக்கிளியை இலக்கு வைத்து அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்துவது இவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால் இந்ததிட்டம் குறித்து முதலில் எதுவுமே நிலையில் மாதகல் இராணுவ முகாமின் அணி ஒன்று குருநகர் முகாமை இரவு 9 மணிக்குபின்னர் வந்தடைந்திருந்தது. இந்த அணியின் குறியீட்டு பெயர் 4-4 பிராவோ.( Four- Four- Bravo)இந்த அணியின் பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனா.

குருநகருக்கு வந்த இந்த அணியின் பொறுப்பாளரான லெப்டினட் வாஸ் குணவர்த்தனாவை உடனடியாக சந்தித்த சரத்முனசிங்கா அன்றிரவு புலிகளின் குழு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் அதற்கு முன்னதாக தமது 4-4 சார்ளி அணி புலிகளின் மீது கோண்டாவில் பகுதியில் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நள்ளிரவுக்குமுன்னர் 4-4 பிராவோ அணியை மீண்டும் மாதகல் முகாமுக்கு திரும்புமாறு கோரினார். தன்னுடன் இணைந்து கொஞ்சம் மதுஅருந்திவிட்டு செல்லுமாறும் வாஸ் குணவர்த்தனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

சரத்முனசிங்கா கூறிய இந்தசெய்தியால்சற்றுபதற்றமடைந்த வாஸ் குணவர்த்தனா தனக்கு மதுஅருந்தும்மனநிலை இப்போது இல்லையெனவும் தாம் விரைவாக இரவுஉணவை முடித்து கிளம்பப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து வாஸ்குணவர்த்தனாவும் அவரது அணியும் விரைவாக மீண்டும் சுற்றுக்காவல் பணியுடன் மாதகல் முகாமுக்கு திரும்பத்தயாராகியது.

இதேசமகாலத்தில் புலிகளின் முகாமும் அன்று மிக இரகசியமாக ஆனால் பரபரப்பாக இயங்கியது.

வழமையை விட 23 ஆம் திகதி அதிகாலையே தூக்கத்திலிருந்து

விழித்த பிரபாகரன் அன்றையதாக்குதல் குறித்து செல்லக்கிளியுடனும் விக்டருடன் இறுதி ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

இந்ததாக்குதல் வெற்றியளிக்க வேண்டுமென்ற பதற்றத்தில் சந்தோசம் போன்ற சில போராளிகளுக்கு 22 ஆம் திகதி இரவு சரியாக தூக்கம் கூட வரவில்லை.

நேரம் மாலையாகி இரவுக்கு காத்திருந்தது. திட்டமிட்டபடி திருநெல்வேலி பலாலி வீதி தபால் பெட்டிச்சந்திக்கு அருகே வாகனமொன்றில் அடைந்த புலிகளின் அணி முன்னெச்சரிக்கையுடன் கண்ணிவெடிகளைப் புதைக்கும் இடத்தை அடைந்தது.

பிரபாகரன் உட்பட போராளிகள் அனைவரும் சிறிலங்கா படையினர் அணிவதை போன்ற ராணுவ சீருடைகளை அணிந்திருந்தனர்.

பிரபாகரன் தனக்கு பிரியமான ஜி திறி ரக துப்பாக்கியை வைத்திருந்தார்

மூத்தபோராளியான அப்பையாவின் மேற்பார்வையில் செல்லக்கிளியும் விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.

தார்வீதி ஒன்றில் கண்ணிவெடிகளை புதைப்பது இலேசான வேலையல்ல. கரடுமுரடான தார் வீதியில் சந்தேகமேற்படாமல் பிக்கான் உபகரணம் ஒன்றினால் குழி வெட்டுவது மிகவும் கடினமானது.

ஆனால் மூத்தபோராளி அப்பைய்யா புலிகளின் ஆரம்பகால உள்ளுர் தயாரிப்பு வெடிபொறிமுறையில் ஒரு முக்கிய வெடிமருந்து நிபுணரென்பதால்இந்தப் பணியை அவர் மிகவும் வேகமாகவும் நிதானமாகவும் செய்துகொண்டிருந்தார்.

அப்பையா இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினராக இருந்தாலும் பெடியளுக்கு சளைக்காமல் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் இயங்குவதும் அவரது இயல்பு.

ஒருமுறை இந்தியாவுக்கு பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையாவும் ஒருவராக இருந்தார். எனினும் அவரது வயதைக்கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை பயிற்சிக்கு எடுக்க மறுப்புத்தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம்.

புலிகள் குழு அந்த இடத்தில் நிற்பதை மங்கிய வெளிச்சத்தில் சில வீட்டுக்காரர்கள் கண்டனர். ஆனால் புலிகளின் அணியை சிறிலங்கா படையினரென நினைத்து அச்சத்தில் தமது வீடுகளின் யன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருந்தனர்.

ஆயினும் ஒரு முதியவர் மட்டும் ஆர்வம் மிகுதியால் வெளியே நிற்பவர்களை பார்ப்பதற்காக தனது வீட்டு யன்னலை திறந்து எட்டிப்பார்த்தார்.

வெளியே நின்ற விக்டர் அவரை கண்டுவிட்டு சிங்களத்தால் யன்னலை முடும் சத்தமிட வெளியே நிற்பது படையினரென்ற அச்சத்தில் அவரும் தலையை உள்ளே இழுத்து பின்னர் தமது யன்னலை அவசரமாக மூடி வீட்டின் லைற்றுகளையும் அணைத்துவிட்;டார்.

2மீற்றர் இடைவெளியில் 2 கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுவிட்டன.

அவற்றுக்கான மின்இணைப்பு வயரும் வெடிப்பு கருவியொன்றுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

வயர்வெளியே தெரியாதவாறு உருமறைப்பு செய்யப்பட்டு வீட்டு முன்றலில் இருந்த மல்லிகைப் பந்தல் ஊடாக மேலே எடுக்கப்பட்டது.

செல்லக்கிளிக்கும் விக்டருக்கும் அருகில் சென்று நிலைமையை பார்வையிட்ட பிரபாகரன் சைகையால் திருப்தி தெரிவித்துவிட்டு மீண்டும் தனது நிலைக்குதிரும்பினார்.

வீடொன்றின் கூரையில் ஏறிய செல்லக்கிளியும் விக்டரும் படையினரின் வருகைக்குரிய அறிகுறிகள் ஏதாவது தெரிகின்றதா உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர்.

பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிலையெடுத்துக்காத்திருந்தனர்.

இந்தநிலையில் குருநகர் முகாமில் இருந்து லெப்டினட் வாஸ் குணவர்த்தனாவின் 4-4 பிராவோ அணி புறப்பட்டது.

புலிகளின் தாக்குதல் அச்சம்காரணமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை குருநகர் முகாமுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் முடிவுடன் இந்த அணி தனத பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் இது ஒரு முடிவுறாத பயணமாக மாறப்போகும் நிலைமை அதற்குத் தெரியவில்லை.

வாஸ்குணவர்த்தனா தனது ஜீப்வண்டியின் முன் பக்கத்தில் ஏறி அமர்ந்தார். அதன் சாரதியாக மனதுங்கா இருந்தார். ஜீப்பின் பிற்பகுதியில் 2 படையினர் அமர்ந்திருந்தனர்.

ஜீப் வண்டியின் பின்னால் புறப்பட்ட ராரா ரக ரக் வண்டியில் அதன் சாரதியாக பெரேரா இருந்தார். அவருக்கு அருகில் சார்ஜன்ட் திலகரட்னாவும் பெர்னாண்டோவும் இருந்தனர். 10 படையினர் இருந்தனர்.

புலிகளின் கந்தகப்பொறியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது Four- Four- Bravo அணி. இலங்கைத்தீவின் விதியை எண்ணியோ என்னவோ வீதி விளக்குகளும் அழுது வடிந்துகொண்டிருந்தன….

தடங்கள் தொடரும்….

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!