கண்டி -அக்குரணையில் 10 உடல்களை மீட்டெடுத்த ஐக்கிய அரபு இராச்சிய மீட்பு குழு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து அவசர மீட்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழு தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியில் 10 உடல்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
இதன்படி இன்று, கண்டி மாவட்டம், அக்குரணை பகுதியில் உள்ள ரம்புக்-எல - விலனகம பகுதிக்கு குறித்த குழு அனுப்பப்பட்டது. இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சவாலான நிலப்பரப்பு
இந்த இடத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதோடு, 16க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து மண் மேடுகளுடன் இழுத்து செல்லப்பட்டன.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் குழு சிறப்பு உபகரணங்கள் மற்றும் K9 அலகுகளைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் தேடும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சவாலான நிலப்பரப்பு மற்றும் ஆபத்தான தன்மை இருந்தபோதிலும், குழு குறித்த இடத்தை உன்னிப்பாகச் சுற்றிப் பார்த்து, இன்றைய நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்கு அடியில் இருந்தும் பள்ளத்தாக்குகளில் இருந்தும் 10 உடல்களை குழுவினர் மீட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான கள முயற்சிகளுடன் தொடர்புடைய இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

