கைவிடப்படுவாரா ரணில்..! வெளிவந்த ஆதரவு நிலை
தற்போதைய அரசாங்கத்தை இறுதி நாள் வரை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன, 126 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபருக்கு ஆதரவளிக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் விவகாரம்
இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 126இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்தை வழிநடத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவுகின்றோம்.
அதிபர் மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்புகிறோம். சிலர் இந்த ஆற்றலை உடைக்க முயற்சி செய்கிறார்கள்.
சமீபகாலமாக மகிந்த பிரதமராக வர முயற்சிப்பதாக ஒரு கதை வந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டேன். தினேஷை பிரதமராக நியமித்தோம். எனவே தினேஷை ஏன் மாற்றுகின்றோம் என மஹிந்த தெரிவித்தார்.
இப்போது சஜித் பிரேமதாச பிரதமராக வருவார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. இது எங்களை உடைக்கப் பார்க்கிறது.
அதிகபட்ச ஆதரவு
கடைசி நாள் வரை இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல அதிகபட்ச ஆதரவை வழங்குவோம்.
தவறு செய்து கட்சிக்கு வந்தவர்கள் இன்று வெளியே வந்து எங்களை விமர்சிக்கின்றனர். ஆனால் கட்சி தொடங்கியவர்கள் இன்றும் நம்முடன் இருக்கிறார்கள்” - என்றார்.
