திருகோணமலை கடலில் 1500 கிலோ மீன் கொள்ளை
திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கப்பலில் இருந்த 600,000 ரூபா பெறுமதியான மீன்களை நான்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் எனக் கூறப்படும் 10 பேர் கொண்ட குழுவினர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக திருகோணமலை துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை கோணேஸ்வரன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் பத்து கடல் மைல் தொலைவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வலை, டீசல் என்பனவும் கொள்ளை
மீன்பிடிக் கப்பலில் இருந்த மீன்கள் மட்டுமின்றி, மீன்பிடிக் கப்பலில் இருந்த மீன்பிடி வலைகள், கப்பலில் இருந்த டீசல் உள்ளிட்டவற்றையும் இந்தக் கடற்கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிண்ணியாவைச் சேர்ந்த 40 வயதுடைய மீனவர் ஒருவர், தானும் மீனவர்களும் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்த மீன்வளம், வலை,மற்றும் டீசல் என்பன திருடப்பட்டுள்ளதாக திருகோணமலை துறைமுக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
துறைமுக காவல்துறையினர் தீவிர விசாரணை
இந்தக் கொள்ளையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற பத்து பேர் கொண்ட கும்பலைக் கைது செய்ய திருகோணமலை துறைமுக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.