யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துநர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் (24.12.2024) மாலை நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்
இந்த நிலையில் நேற்றையதினம் (25.12.2024), அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் - காரைநகர் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் (R.Chandrasekar) இது குறித்து கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.
இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |