யுரேனஸ் மற்றும் நெப்டியூனைச் சுற்றி 3 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு...!
நமது சூரிய குடும்பத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 3 நிலவுகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மைனர் பிளானட் சென்டரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 புதிய குளிர்மையான நிலவுகளுக்கும் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள விடயமும் நிரந்தர பெயர்கள் சூட்டுவது தொடர்பான விடயங்களும் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று உறுதிப்படுத்தப்பட்டது .
தற்காலிகமாக சூட்டப்பட்டுள்ள பெயர்களை இன்னும் சில காலத்தில் மாற்றி சிறந்த வரலாற்றுப்பெயர்கள் சூட்டப்படும் என்றும் இதன்போது அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒரு கதாபாத்திரத்தின் பெயர்
மேலும் இந்த 3 சிறிய நிலவுகளும் குளிர்மையான கிரகங்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனை சுற்றி வலம் வருவதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர், அதன்படி, 1 நிலவு யுரேனஸ் கிரகத்தினையும் மற்றைய இரண்டு நிலவுகளும் நெப்டியூன் கிரகத்தினையும் சுற்றி வலம்வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
யுரேனஸை சுற்றி வருவதாக கண்டறியப்பட்ட நிலவுகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய நிலவுக்கு S/2023 U1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் விரைவில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இருந்து ஒரு கதாபாத்திரத்தின் பெயரை சூட்ட ஆய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
முன்னர் யுரேனஸை சுற்றி வருவதாக கண்டறியப்பட்ட நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்களான டைட்டானியா, ஓபரான் மற்றும் பக் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டது போல புதிதாக கண்டறியப்பட்ட நிலவுக்கும் பெயர் சூட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடல் கடவுளான நெரியஸின் மகள்
அதுமாத்திரமன்றி இந்த நிலவு யுரேனஸைச் சுற்றி வர சுமார் 680 நாட்கள் எடுக்கும் அதேநேரம் இந்த நிலவுடன் சேர்த்து யுரேனஸைச் சுற்றி 28 நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அடுத்ததாக நெப்டியூனைச் சுற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ள 2 நிலவுகளுக்கும் முறையே S/2002 N5 மற்றும் S/2021 N1 ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்ற நிலையில் விரைவில் இவற்றுக்கு கிரேக்க புராணங்களில் வரும் கடல் கடவுளான நெரியஸின் மகள்களின் பெயரை சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் S/2002 N5 ஆனது நெப்டியூனைச் சுற்றி வர 27 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், S/2021 N1 ஆனது நெப்டியூனை 09 ஆண்டுகளில் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர், சூரியனிலிருந்து மிக நீண்ட தூரத்தில் நெப்டியூன் இருப்பதே இந்த கால அதிகரிப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சூரியகுடும்பத்தை ஒட்டிய பால்வெளியில் ஏராளம் அதிசயங்கள் ஆய்வாளர்களால் நாளும் கண்டுபிடிக்கபட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மூன்று புதிய சிறிய குளிர்மையான நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |