தொழில் முனைவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி: முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்
வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் எனவும் பிரசன்ன ரணவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைத்திட்டங்கள்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும்.
ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதொடு அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.
அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள் இருப்பினும் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை.
நிதி ஒதுக்கீடு
அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |