ஐ.எம்.எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 337 மில்லியன் டொலர்கள்
இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியான 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் பொருளாதார திட்டங்கள் பலனளிக்க ஆரம்பித்துள்ளன எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது
337 மில்லியன் டொலர்கள்
''நான்கு வருட ஈ.எப்.எப் ஆதரவு திட்டத்தின் இரண்டாவது மறு ஆய்வினை பூர்த்தி செய்வதற்காக பொருளாதார கொள்கைகள் குறித்து இலங்கையின் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளனர்.
இந்த மறு ஆய்வினை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை அங்கீகரித்ததும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஏற்றுக்கொண்டதும் இலங்கையால் 337 மில்லியன் டொலர்களை பெறமுடியும்.
நுண்பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் பலனளிக்க ஆரம்பித்துள்ளன. தற்போதைய சீர்திருத்தங்களை தொடர்வதும், ஆட்சிமுறையில் காணப்படும் பலவீனங்களை அகற்றுவதும், ஊழலை அகற்றுவதும் இலங்கையின் பொருளாதாரத்தை நிரந்தர மீட்பு ஸ்திரதன்மை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பாதையில் இட்டுச்செல்வதற்கு அவசியமான விடயங்களாகும்.
பணவீக்கம் மிகவேகமாக வீழ்ச்சி
சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் சிறந்த முன்னேற்றத்தை காண்பிக்கின்றனர். பாராட்டத்க்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. பணவீக்கம் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்புகள் வலுவான விதத்தில் அதிகரித்துள்ளன.
நிதி அமைப்பின் ஸ்திரதன்மையை பேணும் அதேவேளை பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பிடத்தக்க நிதி சீர்திருத்தத்தை தொடர்ந்து பொதுநிதி வலுவடைந்துள்ளது.
பொருளாதார நிலைமை படிப்படியாக வளர்ச்சி காண்கின்றது. ஆறு காலாண்டு கால வீழ்ச்சிக்கு பின்னர் வளர்ச்சி சாதகமானதாக காணப்படுகின்றது. 2023ஆம் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டு பகுதியில் 1.6 மற்றும் 4.5 வளர்ச்சி வீதம் காணப்பட்டது.
உற்பத்தி, கட்டுமானம், மற்றும் சேவைத் துறைகளில் தொடர்ந்தும் வளர்ச்சி காணப்படுவதை பொருளாதார சுட்டிகள் வெளிப்படுத்தியுள்ளதுடன் 2022 செப்டம்பரில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.'' என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |