தமிழ் பொது வேட்பாளருக்கு 6 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் : விக்னேஸ்வரன் நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு 6 இலட்சத்துக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
இன்று (16.09.2024) காலை யாழ்ப்பாணம் - தொண்டமானாறில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பதில் காவல்துறை மா அதிபர் அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) அனுப்பிய கடிதத்தில் பொது வேட்பாளருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் சுமந்திரன் சாணக்கியன் ஆகியோரின் அதிருப்தி பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற சிந்தனை
மாம்பழங்கள் அதிகம் காணப்படும் மரத்துக்குத் தான் கல்லடி விழும். மக்களின் செல்வாக்கு அரியநேத்திரனுகு அதிகரித்ததால்த்தான் பொறாமையும் பொறுப்பற்ற சிந்தனைகளும் சுமந்திரனையும் (M. A. Sumanthiran) சாணக்கியனையும் (Shanakiyan) பீடித்துள்ளன.
ஆனால் அவர்களால் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஒருங்கிணைந்த செயற்பாட்டையும் சீர்குலைத்து விட முடியாது. இந்தத் தேர்தலுடன் வட கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயமே திறக்கப்படுகின்றது.
நாம் இனித் தமிழர்களாகச் சிந்திக்கப் போகின்றோம். அரசாங்கங்கள் சிங்கள பௌத்த சிந்தனையுடன் செயலாற்றும் போது பாதிக்கப்பட்ட நாங்கள் தமிழர்களாக சிந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. கட்சிகள் கடந்த செயற்பாட்டில் இறங்கியுள்ளோம்.
எனினும் எம்மிடையே மூன்று வித பிரிவுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஒன்று தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும். அவர்கள் தமிழ்த் தேசியம் சார்ந்த பிரிவினர்.
அடுத்தவர் சிங்கள வேட்பாளர் ஒருவருடன் கூட்டு சேர வேண்டும். அவர் தருவதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவர்கள். அவர்கள் சுயநல சிந்தனை உடையவர்கள். பெரும்பான்மை இன வேட்பாளர் ஒருவருக்கு தாளம் போட்டு தமக்குக் கிடைப்பதைச் சுருட்டிச் செல்ல முனைபவர்கள்.
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்
தேர்தலைப் புறக்கணிப்பவர்கள்
மூன்றாவது பிரிவினர் பகிஷ்கரிப்பாளர்கள். இவர்கள் வெட்கத்திற்குரியவர்கள். இதுவரை சிங்கள வேட்பாளரைப் பகிஷ்கரிப்போம் என்று கூறி வந்தவர்கள் இப்பொழுது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்கச் சொல்கின்றார்கள்.
இதில் ஒரு சூட்சுமம் உண்டு. தேர்தலைப் புறக்கணித்தால் யாருக்கு இலாபம். சிங்கள வேட்பாளர்களுக்கே அது இலாபம். ஏன் என்றால் தமிழ் மக்களின் வாக்குகள் போடப்படாவிட்டால் அளிக்கப்பட்ட வாக்குகளின் மொத்தத் தொகை குறையும்.
ஆகவே தேர்தலில் வாக்களித்தவர்களில் ஐம்பது சதவிகிதமும் ஒன்றும் வெற்றியாளர் பெற வேண்டும் என்ற விதிக்கு உரம் ஏற்றுவதாகவே இவர்களின் பகிஷ்கரிப்பு அமையும்.
நாட்டில் 100 இலட்சம் பேர் வாக்களித்தார்கள் எனில் வெற்றி அடைபவர் 50 இலட்சத்து ஒரு வாக்கைப் பெற வேண்டும். பகிஷ்கரிப்பாளர்கள் இரண்டு இலட்சம் பேரை வாக்களிக்காமல் தடை செய்துவிட்டார்களானால் 98 இலட்சம் பேரே வாக்களித்தனர் என்று கூறி 49 இலட்சத்து ஒரு வாக்கைப் பெற்றவரே வெற்றியாளர் என்று அடையாளப்படுத்தப்படுவார்.
ஆகவே பகிஷ்கரிப்பாளர்களுக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கும் இடையில் நிச்சயமாக ஒரு உடன்பாடு இருந்தே ஆக வேண்டும். இந்தப் பகிஷ்கரிக்கும் கட்சியினரின் மூலக்கட்சி கூட ஒற்றையாட்சியையே வலியுறுத்துகின்றது.“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |