கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு...! மற்றுமொரு நடிகையிடம் CID விசாரணை
தென்னிலங்கையின் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
கையடக்கத் தொலைபேசி
கெஹெல்பத்தர பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவருடைய கையடக்கத் தொலைபேசியில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில் தென்னிலங்கை நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்போது, புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில் குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினர் தொடர்பில் தனக்குத் தெரியாது என ஸ்ரீமாலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த புகைப்படம் புத்தாண்டு விழா ஒன்றின் போது எடுக்கப்பட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு இருந்த பலரும் தன்னுடன் புகைப்படங்களை எடுத்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையின் மொடல் நடிகையான பியூமி ஹன்சமாலியிடமும் குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்