தலைமறைவான ஜேக் மா கண்டுபிடிக்கப்பட்டார் - பரவலாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சீனா
அலிபாபா என்னும் e-comers நிறுவனத்தை தோற்றுவித்து குறுகிய காலத்தில் அந்த நிறுவனத்தை உலகின் முன்னனி மற்றும் முக்கியமான நிறுவனமாக உருவாக்கிய ஜேக் - மாவின் இருப்பிடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜேக் மா. அலிபாபா என்னும் இ-காமர்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்து குறுகிய காலத்தில் அந்த நிறுவனத்தை உலகின் முன்னனி மற்றும் முக்கியமான நிறுவனமாக உருவாக்கினார். இதனால் ஜேக்-கின் சொத்து மதிப்பு எல்லை தாண்டியது.இதனால் சீன தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கு அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக சில கருத்துக்களை ஜேக் கூறியதால் அவருக்கு எதிராக சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக, சீனாவில் உள்ள அரசு வங்கிகள் அடகு கடைகள் போல செயல்படுவதாகவும், உண்மையான திறமைசாலிகளுக்கு உதவ புதிய முகங்களின் தேவை உள்ளதாகவும் ஜேக் கருத்து கூறியிருந்தார்.
ஜேக் மா தலைமறைவு
இதையடுத்து அவரும் அவரது நிறுவனமும் பல்வேறு அரச ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. ஜேக்கின் ஒண்ட் மற்றும் அலிபாபா என்கிற இரண்டு நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தன.
ஒண்ட் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதோடு, அலிபாபா நிறுவனத்திற்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜேக் மா தலைமறைவானார்.
அதன்பிறகு இந்த ஆண்டில் ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் கொரோனா ஊரடங்குகள் அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறிய ஜேக், ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
பரவலாக குற்றச்சாட்டு
ஆனால் அந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. சீன அரசின் கெடுபிடிகளால் வெறுத்துப் போன ஜேக் மா, கடந்த 2019ஆம் ஆண்டே தன் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்து சீன மக்களையும் தொழிலதிபர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சீனாவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்த ஜேக், தன் அலவலகத்தின் மேசையில் இறந்து போவதை விட ஒரு அழகிய கடற்கரையில் இறந்து கிடப்பதையே விரும்புகிறேன் என விரக்தியில் கூறியுள்ளார்.
தனி நபர்கள் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர்களாக உருவெடுப்பதை சீன அரசு ஒருபோதும் விரும்புவதில்லை என்றும், அப்படி யாராவது உருவானால் அவர்களது தொழிலை நசுக்கும் வேலையில் சீன அரசு ஈடுபடுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
டோக்கியோவில் ஜேக் மா
இந்நிலையில் ஜேக் மாவின் நிறுவனங்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளன. ஜி ஜின் பிங் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வான பிறகு, சீனாவில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்களும், தொழில் அதிபர்களும் வேறு நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜேக் மாவின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆறு மாதங்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதும், அவர் உலகம் முழுவதும் இருந்தும் அரிய கலைப்பொருட்களை சேகரித்து வருதும் தெரியவந்துள்ளது.
மேலும், டோக்கியோவில் இருந்து ஜேக் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
