சிறிலங்காவிற்கு மேலும் டொலர்களை வழங்கும் அமெரிக்கா..! வெளியான அறிவிப்பு
யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய இலங்கை பயணத்தின் அடிப்படையில், ஐந்தாண்டு காலத்துக்கு இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
நெருக்கடிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி
இந்த நிதியானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்காக வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிதி கடந்த வாரம் சமந்தா பவர் அறிவித்த புதிய மனிதாபிமான மற்றும் உர உதவியான 60 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்எய்ட்டின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.
1956 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 2 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


