மரத்தில் சிக்கிய சிறுத்தை புலியை மீட்கும் முயற்சி தோல்வி: பரிதாபமாக உயிரிழந்தது (படங்கள்)
ஹட்டன், டிக்கோயா பகுதியில் உள்ள தோட்டத்தில் இன்று (07) காலை புகுந்த சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.
நான்கு அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், ஹட்டன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மரத்தில் ஏறிய சிறுத்தை

இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.
இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
கம்பியால் ஏற்பட்டகாயங்கள்

மேலும், பொறியில் அமைக்கபட்டிருந்த கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், இது தொடர்பில் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.