அநுரவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake), 2025 ஜனவரி 14 முதல் 17 வரையிலான சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாரம்பரிய நட்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையிலும், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
2025, ஜனவரி 15, அன்று மக்கள் மண்டபத்தில், ஜனாதிபதி திசாநாயக்க சம்பிரதாயபூர்வமான மரியாதையுடன் வெகுவிமர்சையாக வரவேற்கப்பட்டார்.
இறையாண்மை சமத்துவம்
பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாடு, முதலீடு, சுற்றுலா, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பல்தரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இறையாண்மை சமத்துவம் மற்றும் அமைதியான சகவாழ்வின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேலும் ஒருங்கிணைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி திசாநாயக்காவை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ஜின்பிங்கினால், அரசு விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜின்பிங்கிற்கு ஜனாதிபதி திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சீனப் பிரதமர் லீ சியாங், இலங்கை அதிபரை வரவேற்று, அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து உரையாடியுள்ளார்.
15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜியையும் சந்தித்து ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு தரப்பினரும் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்பாட்டுக்குழுவை நிறுவுதல், சீனாவிற்கு விவசாயப் பொருட்களுக்கான சந்தை அணுகல், ஊடகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகிய இவ்வொப்பந்தங்களில், சீன அரசாங்கத்திடமிருந்தான 500 மில்லியன் சீன யுவான்கள் மானியமாக வழங்கப்படவுள்ளன.
3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி சார்ந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவது தொடர்பாக சினோபெக் குழுமத்துடன் ஒரு கூட்டு அறிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) மற்றும் நிறுவனங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இலங்கையில் முதலீடு செய்யுங்கள்" வட்டமேசை மாநாட்டிலும் ஜனாதிபதி திசாநாயக்க உரையாற்றியுள்ளார்.
பொருளாதாரக் கொள்கை
முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை வழிநடத்தும் பரந்த நோக்கை எடுத்துரைத்ததுடன், இலங்கையில் முதலீடு செய்ய வணிக சமூகம் ஆர்வமுள்ள முக்கிய பகுதிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மன்றத்தில் கலந்து கொண்ட முன்னணி சீன அரச நிறுவனங்கள், இலங்கையில் புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதிலும், தற்போதுள்ள முதலீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க மக்கள் மாவீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தலைவர் மா ஓ சீடோங் நினைவு மண்டபத்திற்கு விஜயமளித்துள்ளார்.
தென்மேற்கு சீனாவின் மிகப்பெரிய நகரமான செங்டுவில் வறுமை ஒழிப்பில் கவனம் செலுத்தும் மாதிரி கிராமமான ஜான் கி இற்கு ஜனாதிபதி திசாநாயக்க விஜயம் செய்து, சிறந்த நடைமுறைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.
செங்டு தேசிய விவசாய மற்றும் அறிவியல் மையத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்து, சிச்சுவான் மாகாணக் கட்சிச் செயலாளர் வாங் சியாஒஹுய் ஐச் சந்தித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன மக்கள் குடியரசிற்கான இலங்கைத் தூதர் மஜிந்த ஜெயசிங்க, வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் அமைச்சினதும், பீ ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர், ஜனாதிபதி திசாநாயக்கவின் இவ்வுத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அவருடன் இணைந்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |