புலம்பெயர் இலங்கை தொழிலாளருக்கு அள்ளிவீசப்படும் சலுகைகள்
புலம்பெயர் தொழிலாளருக்கு ஓய்வூதியம்
வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக சம்பாதித்த பணத்தை வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு மானிய வட்டியில் வீட்டுக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வெளிநாட்டு பணியாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை வங்கி முறையின் ஊடாக சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்பும் போது புதிய சலுகைகள் வழங்கப்படும் என உறுதியளித்தோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றி வருகிறோம்.
மின்சார வாகனம் இறக்குமதி
நாங்கள் சொன்னது போல் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்க ஆரம்பித்துள்ளோம்.
இதேவேளை, விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகையை 6550 டொலர்களாக அதிகரிக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
மானிய வட்டியில் வீட்டுக் கடன்
வரும் வாரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், வங்கி முறை மூலம் சம்பாதித்த பணத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு மானிய வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மேலும் கூறினார்.