வெளியுறவுச் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்ற அருணி ரணராஜா
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட அருணி ரணராஜா(Aruni Ranaraja) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் நேற்று(19.11.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரியான, செயலாளர் அருணி ரணராஜா வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 28 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
வெளியுறவுச் செயலாளர்
அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஆகியவற்றில் மட்டுமல்லாது, நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றியது உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன், அவர் இரசாயன ஆயுதத் தடை அமைப்பில் (OPCW) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, 2024 ஏப்ரல் முதல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், நெறிமுறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், அருணி ரணராஜா உக்ரைன் அரச பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தையும், இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் அவரது சொந்த மொழிக்கு மேலதிகமாக, அவர் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், ஜப்பானிய மொழியிலும் புரிதல் மட்டத்திலான திறனைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |