அஸ்வெசும கொடுப்பனவில் சிக்கல் - முல்லையில் குவிந்த மக்கள் ; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
சிறிலங்கா அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட செயலக வாயிலை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு மக்கள் அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாவட்ட செயலக நுழைவாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் வாசலில் செல்லும் போது அவரை மறித்து தங்கள் ஆதங்கத்தினை மக்கள் வெளிப்படுத்தினர்.
அரசின் உதவித்திட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கருத்தினையும், மக்களின் சொந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்பாடாத நிலையில் அரசின் இந்த உதவித்திட்டமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் மக்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடிய பின்னர் அவர்களை மாவட்ட செயலக மண்டபத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் மக்களை முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் மக்கள் போராடாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 23, 901 குடும்பங்கள் சமூர்த்தி பயனாளிகளாக இருந்துள்ளார்கள். அதில் 16, 211 குடும்பங்களுக்கு சமூக நலன்புரிசபையின் நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் ஏற்கனவே சமுர்த்தி நன்மையினை அனுபவித்த மக்கள் விடுபட்டுள்ளார்கள்.
மாற்று வலுவுடையவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் விடுபட்டுள்ளார்கள்.
அவர்களிடம் இருந்து மேன் முறையீட்டினை பெற்றுக்கொள்ளும் முகமாக கிராம அலுவலர் அலுவலகங்களில் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் விசேட கரும பீடம் அமைக்கப்பட்டு மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணையத்தளத்திலும் நேரடியாகவும் மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம்.
தகுதியானவர்களை உள்ளீர்த்தல்
ஏற்கனவே வெளியிடப்பட்ட பெயர் விபரத்தில் பல வசதியானவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அது தொடர்பிலான ஆட்சேபனையினை பொதுமக்கள் நேரடியாகவோ, இணையத்தளம் ஊடாகவோ தெரியப்படுத்துவதன் ஊடாக மேன்முறையீட்டு சபை ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை உள்ளீர்க்ககூடியதாக இருக்கும்.
நலன்புரி சமூக நன்மைகள் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே கிடைக்கவுள்ளதால் தகுதியற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறும் இடத்து ஆய்வு செய்து அவர்களை நீக்கி தகுதியானவர்களை உள்ளீர்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
எதிர்வரும் யூலை மாதம் 10 ஆம் திகதிவரை மேன்முறையீட்னை மேற்கொள்ளலாம்.
இன்னும் சில முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சில தகுதியான குடும்பங்கள் கூட சமூக நலன்புரி திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தவறிவிட்டுள்ளார்கள்.
அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புக்கள் இல்லாவிட்டாலும் எதிர்வரும் ஆவணி மாதம் அளவில் விடுபட்டவர்களுக்கான மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS
